கண்ணனின் மீரா… யாரிந்த மீரா?

கண்ணனின் மீரா...
கண்ணனின் மீரா...www.herzindagi.com
Updated on

-கமலா முரளி.

சிறுவர்களே! சந்த் மீராபாய் ஜன்மோத்சவ் நிகழ்வு சமீபத்தில் மதுராவில் நடந்தது.

யாரிந்த மீரா ?

பதினான்காம் நூற்றாண்டில், தற்போதைய ராஜஸ்தான் மாநில ஜோத்பூர் பகுதியில் ராஜபுத்ர அரச குடும்பத்தில் பிறந்தவர் மீரா.

சிறுவயது முதலே கிருஷ்ணரிடம் அபரிதமான அன்புகொண்டார் மீரா. தனக்குத் தரப்பட்ட கிருஷ்ணர் விக்ரஹத்தை ஆராதித்து, நந்தலாலா, கிரிதர கோபாலா எனப் போற்றி வந்தார்.

ஒருமுறை, திருமண ஊர்வலத்தைப் பார்த்த சிறுமி மீரா, தன் தாயிடம் தனது கணவன் யாரெனக் கேட்டதாகவும், கிருஷ்ணரே அவளது கணவர் என அவளது தாய் பதிலளிக்க மீரா, கண்ணனையேத் தன் கணவனாகப் பாவித்து வாழ்ந்து வந்தாள் என்று கதைகள் சொல்கின்றன.

ராஜகுடும்ப வழக்கப்படி, அவளுக்கு சித்தூர் மன்னர் போஜ ராஜனுடன் திருமணம் நடந்தது. மீரா அத்திருமணத்தில் மனமொப்பவில்லை.

தன் பிறந்த வீட்டில் இருந்து எடுத்துச் சென்ற கிருஷ்ணர் விக்ரஹத்தைப் பூஜித்து, பாடல்கள் பாடுவதிலே பொழுதைக் கழித்தாள்.

மேவாருக்கு ஏற்பட்ட சோதனைகள் தங்கள் மருமகள் தங்கள் குலதெய்வமான துர்கையை வணங்காமல், கிருஷ்ணனிடம் பிரேமித்து இருப்பதுதான் என மாமியார் மற்றும் கணவன் குடும்பத்தினர் கருதினர்.

மீராவோ எச்சலனமும் இன்றி கண்ணன் துதி பாடுவதிலேயே லயித்து இருந்தாள். சாதுக்களும், பக்தர்களும் அவளுடன் பஜனைப் பாடல்கள் பாடினர்.

மீராவாக எம்.எஸ்.
மீராவாக எம்.எஸ்.

ராஜகுடும்பத்து வழக்கமில்லா செயல்களைச் செய்கிறாளே என ஆத்திரமடைந்த சித்தூர் ராஜபரம்பரை, மீராவைக் கொல்லவும் துணிந்தது.

புனித நீரில் விஷம் கலந்து நைவேத்தியமாக அவளிடம் தரப்பட்டது. மீரா, கிருஷ்ணா எனச் சொல்லி அருந்தினாள். விஷம் அவளை ஏதும் செய்யவில்லை.

மலர்க்கூடையில் நாகம் வைத்து அவளிடம் அனுப்பினர். நறுமண மலர்மாலை கிருஷ்ணனுக்கு மிகப் படிக்குமே எனக் கூடையைத் திறந்த மீரா முன் மலர் மாலையே இருந்தது. நாகம் இல்லை.

இரும்பு முட்கள் மீராவின் படுக்கையில் இடப்பட்டன. கிருஷ்ணரையே மனதில் நினைத்திருக்கும் மீராவின் படுக்கை மலர்களால் நிறைந்தது.

கணவரையும் இழந்து, ராஜகுடும்பத்தின் வெறுப்புக்கும் ஆளான மீரா, கண்ணன் இருக்கும் பிருந்தாவனம் தேடி புறப்படுகிறாள். வழி நெடுக அவளைச் சுற்றி பக்தர் கூட்டம்! துவாரகையை அடைந்து துவாரகாதீசனை வணங்கியபடி, வாழ்கிறாள். அவளது கிருஷ்ண கானங்கள், அவளை மட்டுமல்ல, அந்த நாட்டையே கிருஷ்ண பக்தியில் திளைக்கச் செய்தது.

தமிழில், ஆண்டாளின் பாடல்கள்போல், மீராவின் ‘கிரிதர கோபால’ சங்கீதமும் மிகப் பிரசித்தம்!

இதையும் படியுங்கள்:
கொழுப்பை வேகமாக எரிக்கும் 4 சூப்பர் உணவுகள்! 
கண்ணனின் மீரா...

சித்தூர் ராஜகுடும்பம் அவளது பெருமை உணர்ந்து, அவளை மீண்டும் அழைத்ததாகவும், அன்று இரவு மட்டும் கிருஷ்ணர் கோயிலில் தங்கிவிட்டு வருவதாகச் சொன்ன மீரா, கோயிலில் பாடிக்கொண்டு இருந்தபோதே, தன் மனங்கவர் நந்தலாலா, கிரிதரனுடன் ஐக்கியமாகிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

மீரா பிறந்த வருடம் 1498 என்று அறியப்படுகிறது. மீராவின் பிறந்த தினம் மீராபாய் ஜன்மோத்சவம் எனச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வருடத்தின் ஏழாவது மாதமாகிய அஷ்வின் மாதத்தில், சரத் காலத்து பௌர்ணமி அன்று மீராவின் ஜன்மதினம் கொண்டாடப்படுகிறது.

மீரா பாய், பகவான் கிருஷ்ணரிடம் ஆத்மார்த்தமான பக்தி கொண்டவர் மட்டுமல்ல, நம் நாட்டின் பக்தி இயக்கத்தைப் பரவலாக்கிய பாடலரசியும் ஆவார்.

logo
Kalki Online
kalkionline.com