
ஒருநாள் அக்பரிடம் ஒரு வயதானவர் வந்து, தன் ஒரே மகளின் திருமணத்திற்கு உதவி செய்யுமாறு வேண்டினார்.
அக்பர் அவரிடம், "வசதியில்லாதவனுக்கு வசதியான கல்யாணம் செய்ய ஆசை ஏன்? ஏதாவது ஒரு மரத்தின் கீழே திருமணம் செய்," என்றார்.
அதற்கு அந்த வயதானவர், "எனக்கு இருப்பது ஒரே குழந்தை. அவளுக்கு நல்லபடியாகத் திருமணம் செய்ய வேண்டும். ஏதாவது உதவி செய்யுங்கள்," என்று மன்றாடினார்.
அக்பர் ஒருமாதிரியான மனநிலையில் இருந்தார். அரண்மனைக்கு முன் இருந்த ஒரு குளத்தைக் காட்டி, "நீ போய் சூரிய அஸ்தமனத்திலிருந்து குளத்திற்குள் பன்னிரண்டு மணி நேரம் கழுத்தளவு தண்ணீரில் நின்றால், உனக்குத் தேவையான பணம் தருகிறேன்" என்று நிபந்தனை விதித்தார்.
தன் மகளுக்காக, சில்லென்ற நீரில் இரவு முழுவதும் அந்தக் கிழவர் நின்றார்.
காலையில் மன்னனிடம் வந்து காலில் விழுந்து, "நீங்கள் சொன்னது போல் நின்றுவிட்டேன். எனக்குப் பணத்தைக் கொடுக்க வேண்டும்" என்றார்.
மன்னனுக்கு ஆச்சரியம். "இரவு முழுவதும் எப்படி அந்தக் குளிரில் நின்றாய்?" எனக் கேட்க, அவர், "உங்கள் அரண்மனை தீபம் எரிந்து கொண்டிருந்தது. அதைப் பார்த்தபடி நின்றேன். நேரம் போனதே தெரியவில்லை," என்றார்.
உடனே அரசன், "ஓ! என் அரண்மனை விளக்கிலிருந்து வெப்பம் எடுத்ததால் நான் பணம் கொடுக்க முடியாது" என்று கூறிவிட்டார்.
இதைக் கேட்ட மந்திரி பீர்பாலுக்கு அது அநியாயமாகப்பட்டது. மன்னரிடம் நேரடியாக ஒன்றும் பேச முடியவில்லை.
கொஞ்ச நாள் கழித்து, அக்பர் வேட்டைக்குச் சென்றார். பீர்பாலும் உடன் சென்றார். இரவு வேளை வந்தது. அக்பருக்குப் பசியாக இருந்தது.
அக்பர் பீர்பாலிடம் "சமையல் முடிந்துவிட்டதா?" என்று கேட்க, "இன்னும் பத்து நிமிடங்கள் ஆகும்," என்றார். இப்படியே சொல்லி, சொல்லி நள்ளிரவு ஆகிவிட்டது.
என்னதான் நடக்கிறது என்று பார்ப்பதற்காக அக்பர் வெளியே வந்தார். சமையல் பாத்திரங்கள் எல்லாமே ஒரு மரத்தில் முப்பது அடி உயரத்தில் தொங்கவிடப்பட்டிருந்தன. அதன்கீழே கொஞ்சமாகத் தீ வைத்திருந்தார்கள்.
இதைப் பார்த்து அவர், "முட்டாள்! இப்படிச் சமைக்க முடியுமா?" என்று கோபமாகக் கேட்டார்.
பீர்பால் உடனே, "இந்த ராஜ்ஜியத்தில் எல்லாம் நடக்கும். இங்கே தீ போட்டால் அங்கே வெப்பம் வரும். அந்தப் பிராமணனைப் பார்த்தீர்களா? அரண்மனையின் உள்ள விளக்கிலிருந்து வெப்பம் எடுத்தார். அப்படியிருக்கும்போது, இங்கேயும் சமையல் நடக்க வேண்டும் அல்லவா?" என்று பதில் சொன்னார்.
பீர்பால் தன் தவறைச் சுட்டிக்காட்டத்தான் இப்படிச் செய்கிறார் என்பதை அக்பர் புரிந்துகொண்டார். உடனடியாகப் பணம் கேட்டு அந்தக் கிழவனை வரச் சொல்லி, பணம் கொடுத்து உதவி செய்தார்.