
அழகிய சிங்காநல்லூர் கிராமத்தில் டிங்கு அவனுடைய பெற்றோருடன் வசித்து வந்தான். அந்தக் கிராமத்தில் குளம், ஆறு எல்லாம் தூய்மையாய் பராமரிக்கப்பட்டு வந்தன.
ஆனால், அவர்கள் ஏதாவது ஒரு பொருள் வாங்க வேண்டுமென்றால் நான்கு கிலோ மீட்டர் தூரம் கடந்து சென்றால்தான் கடையில் வாங்க முடியும். அந்தக் கிராமத்தில் வசித்தவர்களுக்கு அது கஷ்டமாகத்தான் இருந்தது. ஆதலால் அந்தக் கிராமத்திற்கு ஏதேனும் ஒரு பலசரக்குக் கடை வந்தால், பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என்று நினைத்தனர்.
அவர்களின் எண்ணத்திற்கு ஏற்றாற்போல, ஒரு வியாபாரி பலசரக்குக் கடை வைத்தார். மக்களும் பெருமகிழ்ச்சி அடைந்தனர். அந்தப் பலசரக்கு வியாபாரி, எல்லாப் பொருட்களையும் பிளாஸ்டிக் கவர்களில் போட்டுத் தருவதை வழக்கமாகக் கொண்டார். மக்களுக்கு அது மிகச் சௌகரியமாகத் தோன்றியது.
டிங்குவின் அப்பாவும் அந்தப் பலசரக்குக் கடையில் பொருட்களை பிளாஸ்டிக் பைகளில் வாங்கி வருவார். அப்படி வாங்கி வந்த பிளாஸ்டிக் பைகளை வீட்டின் பின்புறம் போட்டுவிடுவார். வீட்டின் பின்புறத்தில் டிங்கு ஆசையாய் ஒரு ஆட்டுக்குட்டியை வளர்த்து வந்தான். அவன் பள்ளிக்குச் செல்வதற்கு முன் அதற்குப் புற்களைப் போட்டுவிட்டுத்தான் போவான். மாலை திரும்பும்போது, வரும் வழியில் இலைதழைகள், புற்களையும் எடுத்து வந்து ஆட்டிற்குப் போடுவான். ஆடு நன்றாய் வளர்ந்து வந்தது.
அது அவனுடன் துள்ளி விளையாடியது. அதனுடன் விளையாடுவது அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அந்த மகிழ்ச்சி ஒருநாள் காணாமல் போனது. அவன் போட்ட புற்களையும், இலைதழைகளையும் சாப்பிடாமல், சோர்ந்து படுத்திருந்தது. அதன் வயிறு பெரிதாகக் காணப்பட்டது. டிங்கு பயந்து அவன் அப்பாவிடம், "அப்பா! ஆடு சாப்பிட முடியாமல் கஷ்டப்படுகிறது" என்று அழுதுகொண்டே சொன்னான்.
டிங்குவின் அப்பாவும், ஆட்டைத் தூக்கிக்கொண்டு கால்நடை மருத்துவரிடம் காண்பித்தார். கூடவே டிங்குவும் போனான். கால்நடை மருத்துவர் ஆட்டினை பரிசோதித்துப் பார்த்துவிட்டு, அதன் வயிற்றுக்குள் பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதாகச் சொல்லி, அதற்குச் சிகிச்சை அளித்தார். சிகிச்சைக்குப் பின் ஆடு துள்ளிக் குதித்தது. "இதை உன் பள்ளியில் டீச்சரிடம் சொல், அவரும் எல்லாப் பிள்ளைகளிடம் சொல்வார். இந்தக் கிராமத்திற்கே பயனுள்ளதாக இருக்கும்" என்று அறிவுரை கூறினார் மருத்துவர்.
"அப்பா! இனிமேல் நீங்கள் அந்தப் பலசரக்குக்கடையில் பொருட்கள் வாங்கும்போது பிளாஸ்டிக் பைகளில் வாங்காதீர்கள். துணிப்பையில் வாங்குங்கள்" என்று தன் அப்பாவிற்கே அறிவுரை வழங்கினான் டிங்கு.