இமயமலையின் உயரத்துக்கு ஈடாக பறக்கும் பறவை!

இமயமலையின் உயரத்துக்கு ஈடாக பறக்கக்கூடிய செங்கால் நாரை பறவையைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
செங்கால் நாரை
செங்கால் நாரைimg credit - marylandzoo.org
Published on

ஹாய் குட்டீஸ்!

உலகில் உள்ள பல்வேறு உயிரினங்களில் பறவைகளும் ஒன்று. அந்த வகையில் பறவைகளுக்கு உரிய சிறப்பு என்னவென்றால் பறவைகள் உலகம் முழுவதும் உலவும் இயல்புடையவை. அத்தகைய பறவைகளில் ஒன்றான, இமயமலையின் உயரத்துக்கு ஈடாக பறக்கக்கூடிய செங்கால் நாரை பறவையைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

உலகம் முழுவதும் இருக்கக்கூடிய பல்வேறு பறவைகள் அங்கு நிலவக்கூடிய தட்பவெப்பத்தின் காரணமாக பல மைல் தூரங்களை கடந்து பல்வேறு நாடுகளுக்கு வலசை போகின்றன. அப்படி ஐரோப்பிய, ஆப்பிரிக்க மற்றும் சைபீரியா நாடுகளில் இருக்கக்கூடிய பறவைகளில் ஒன்று தான் இந்த செங்கால் நாரை பறவை.

குளிர்காலங்களில் அங்குள்ள நீர் நிலைகளான ஏரி, குளம், ஆறு ஆகிய அனைத்தும் பனிக்கட்டியாக மாறிவிடுவதன் காரணமாக நீர்வாழ் பறவைகளுக்கு உணவு கிடைக்காத நிலை ஏற்படுகிறது.

நீரில் இருக்கக்கூடிய சிறு சிறு உயிரினங்களை மட்டுமே நம்பி வாழும் இத்தகைய பறவைகள் பாறைகளைப் போன்று மாறிய பனிப்பொழிவால் உணவினை தேடி, நீண்ட தூரம் வெப்ப மண்டல பகுதிகளை நோக்கி பறக்கத் தொடங்குகின்றன.

செங்கால் நாரை எனும் பறவை தமிழ்நாட்டிற்கு வலசை வருவது குறித்து தமிழ் இலக்கியங்களில் பாடப்பட்டு உள்ளது. சத்திமுத்தப் புலவர் தன்னுடைய பாடலில் 'நாராய் நாராய் செங்கால் நாராய் ' என்று நாரையின் வலசையைப் பற்றி பாடியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
ஆஸ்திரேலியர்கள் கண்டு அஞ்சும் ஆக்ரோஷ பறவை!
செங்கால் நாரை

செங்கால் நாரை நீண்ட தூரம் பறக்கும் இயல்புடைய பறவையாகும். அதைப்போல மிகவும் உயரத்தில் பறக்கும் பறவையும் கூட. கிட்டத்தட்ட இமயமலையின் உயரத்துக்கும் மேலாக இப்பறவைகள் பறப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் பனிக்காலம் தொடங்குவதில் இருந்து கிட்டத்தட்ட 3 முதல் 4 மாதங்கள் இந்தியாவில் தங்கி தங்களுடைய உணவு தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றன.

சிவப்பு நிற அலகு மற்றும் காலுடனும் வெள்ளை மற்றும் கருப்பு கலந்த வண்ணத்தில் இறகுகளுடனும் இருக்கும் இந்த வகை பறவைகள் நாரை குடும்பத்தைச் சார்ந்தவை.

இதையும் படியுங்கள்:
‘தொங்கும் பை’ அலகு கொண்ட ‘கூழைக்கடா’ பறவை
செங்கால் நாரை

சுமார் 100 முதல் 115 சென்டிமீட்டர் உயரம் உடைய இந்த வகை பறவைகள் 3.5kg வரை எடை உடையதாக இருக்கும். சதுப்பு நிலம், களிமண், மற்றும் நீர்நிலைகளின் அருகே இப்பறவைகள் கூடு கட்டி வாழும் இயல்புடையவை. பூச்சிகள், வெட்டுக்கிளி, மீன், பாம்பு, மண்புழு, சிப்பி, தவளை போன்ற உயிரினங்களை தங்களுடைய உணவாக்கிக் கொள்கின்றன.

மேலும் இப்பறவைகள் கூடு கட்டி வாழும் போது எப்போதும் ஒன்றோடு ஒன்று அருகிலேயே இருக்கும் வகையில் கூட்டமாகவே கூடுகள் அமைத்து வாழும் இயல்புடையவை.

இந்தியாவில் நவம்பர் முதல் மார்ச் வரையிலான காலகட்டங்களில் இப்பறவையை பார்க்கலாம். ஐரோப்பிய நாடுகளில் இப்பறவைகள் வீடுகள் மற்றும் வீடுகளுக்கு அருகில் உள்ள புகை போக்கிகளில் கூடு கட்டி வாழ்கின்றன. அங்கே இப்பறவைகள் வீடுகளுக்கு அருகில் கூடு கட்டுவது நல்ல சகுனமாக பார்க்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

மேலும் இப்பறவைகள் ஒருமுறை கட்டிய கூட்டை அந்த வருடம் முழுவதும் உபயோகப்படுத்துகின்றன. கூட்டமாக வாழும் இப்பறவைகள் பெலிகன் பறவை, நீர் காகம், நத்தை குத்தி போன்ற பறவைகளோடு சேர்ந்தே வாழும் இயல்புடையாகவும் உள்ளன.

அருகில் உள்ள பறவைகள் சரணாலயத்துக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தால் இந்த செங்கால் நாரை பறவையைப் பார்த்து மகிழுங்கள்!

இதையும் படியுங்கள்:
லயர்பேர்ட்: ஒலிகளை பிரதிபலிக்கும் அதிசய பறவை கலைஞன்!
செங்கால் நாரை

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com