செல்லங்களா... கொஞ்சும் தமிழ் கற்போமா? பாடம்13!

தமிழ் இலக்கணத்தில் எச்சம், பெயரெச்சம், வினையெச்சம் ஆகியவற்றின் வகைகளை உதாரணங்களுடன் மிக எளிமையாகப் புரிந்துகொள்ளுங்கள்.
எச்சம்|A teach teach Tamil grammar
எச்சம்|A teach teach Tamil grammarAI Image
பெ. சிவக்குமார்

வணக்கம்!  என்னுடைய பெயர் பெ.சிவக்குமார். விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள குலசேகரநல்லூர் என்னும் குக்கிராமத்தில் இருந்து எழுதி வருகிறேன்.நான் பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே தமிழ் மொழியில் எனக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. கல்லூரிக்கு வந்த பிறகு தான் கவிதை, கட்டுரை, சிறுகதை போன்றவைகளை  எழுத சிறப்பாகக் கற்றுக் கொண்டேன்.  கவிதை, கட்டுரை, சிறுகதை போன்ற எல்லாப் போட்டிகளிலும் கலந்து கொண்டு மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் பல பரிசுகளைப் பெற்றுள்ளேன். என்னுடைய எழுத்துகள் எப்பொழுதும் வாசகர்களின் மனதில் “பசுமரத்தாணி போல” பதியுமாறுதான் எழுதுவேன்.  என்னுடைய படைப்புகள் அனைத்தும் கரிசல் மண் சார்ந்தவைகளாக இருக்கும். என்னுடைய படைப்புகளை வெளியிடும் கல்கி குழுமத்திற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

Updated on

சாந்தா அம்மா அவர்கள் மாணவர்களுக்குப் பாடத்தை நடத்த தொடங்கினார்கள். 

“எனது அருமை மாணவர்களே! இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன்”

“நன்றி அம்மா!”

“மாணவர்களே! எச்சம் என்றால் என்ன உங்களுக்குத் தெரியுமா? யாராவது ஒருவர் கூறுங்கள்!”

மாணிக்கம் எழுந்து நின்று, "அம்மா எச்சம் என்பது பறவைகளின் கழிவுகளை எச்சம் என்று சொல்வார்கள்”

“அருமை! எல்லோரும் மாணிக்கத்திற்குக் கையைத் தட்டுங்கள்!”

“நம் சாப்பிட்ட உணவுப் பொருட்களில் மீதி இருக்கக்கூடிய உணவை எஞ்சிய உணவு எச்சில் உணவு, எச்ச உணவு என்று சொல்லுவார்கள்” என்றாள் செல்வி. 

“சூப்பர் செல்வி பாடத்திற்குள் வந்து விட்டாய்!”

“ஒரு சொல்லில் பொருள் முற்று பெறாமல் அப்படியே எஞ்சி நிற்பது எச்சம் என்று கூறுவார்கள். இது சொற்களில் வரக்கூடிய எச்சம் ஆகும். அதனைப் பற்றி இன்று நாம் விரிவாகப் படிப்போம் வாருங்கள் மாணவர்களே!”

"படித்த, படித்து, படித்தான் - ஆகிய சொற்களைக் கவனியுங்கள்.

படித்தான் என்னும் சொல்லில் பொருள் முற்றுப்பெறுகிறது. எனவே, இது வினைமுற்று ஆகும்.

படித்த, படித்து ஆகிய சொற்களில் பொருள் முற்றுப்பெறவில்லை. இவ்வாறு பொருள் முற்றுப்பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் எச்சம் எனப்படும். 

இது பெயரெச்சம், வினையெச்சம் என்று இருவகைப்படும்.

1. பெயரெச்சம்

படித்த என்னும் எச்சம் மாணவன், மாணவி, பள்ளி, புத்தகம், ஆண்டு போன்ற பெயர்ச்சொற்களுள் ஒன்றைக் கொண்டு முடியும்.

(உ.ம்): படித்த மாணவன், படித்த பள்ளி, இறந்த மாடு, வந்த முருகன், சென்ற கோதை.

இவ்வாறு பெயரைக் கொண்டு முடியும் எச்சம் பெயரெச்சம் ஆகும். பெயரெச்சம் மூன்று காலத்திலும் வரும்.

இதையும் படியுங்கள்:
செல்லங்களா... கொஞ்சும் தமிழ் கற்போமா? பாடம் 12!
எச்சம்|A teach teach Tamil grammar

(உ.ம்) பாடிய பாடல் - இறந்தகாலப் பெயரெச்சம்

             பாடுகின்ற பாடல் - நிகழ்காலப் பெயரெச்சம்

             பாடும் பாடல் - எதிர்காலப் பெயரெச்சம்

பெயரெச்சம் இரண்டு வகைப்படும். அவை தெரிநிலைப் பெயரெச்சம் குறிப்புப் பெயரெச்சம் என்பனவாகும்.

தெரிநிலைப் பெயரெச்சம்:

எழுதிய கடிதம் - இத்தொடரில் உள்ள எழுதிய என்னும் சொல் எழுதுதல் என்னும் செயலையும் இறந்தகாலத்தையும் தெளிவாகக் காட்டுகிறது. இவ்வாறு செயலையும் காலத்தையும் வெளிப்படையாகத் தெரியுமாறு காட்டும் பெயரெச்சம் தெரிநிலைப் பெயரெச்சம் எனப்படும்.

குறிப்புப் பெயரெச்சம்:

சிறிய கடிதம் - இத்தொடரில் உள்ள சிறிய என்னும் சொல் உணர்த்தும் செயலையோ, காலத்தையோ அறிய முடியவில்லை. அளவில் சிறியதாகிய பண்பினை மட்டும் குறிப்பாக அறியமுடிகிறது. இவ்வாறு செயலையோ, காலத்தையோ தெளிவாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாகக் காட்டும் பெயரெச்சம் குறிப்புப் பெயரெச்சம் எனப்படும்.

எச்சம்|A teach teach Tamil grammar
எச்சம்|A teach teach Tamil grammarAI Image

2. வினையெச்சம்:

படித்து என்னும் எச்சம் முடித்தான், வியந்தாள், மகிழ்ந்தார் போன்ற வினைமுற்றுகளுள் ஒன்றைக் கொண்டு முடியும்.

(உ.ம்) படித்து முடித்தான், படித்து வியந்தான்.

இவ்வாறு வினைமுற்றைக் கொண்டு முடியும் எச்சம் வினையெச்சம் எனப்படும். வினையெச்சம் மூன்று வகைப்படும். அவை தெரிநிலை வினையெச்சம், குறிப்பு வினையெச்சம், முற்றெச்சம் என்பனவாகும்.

தெரிநிலை வினையெச்சம்

எழுதி வந்தான் – இத்தொடரில் உள்ள எழுதி என்னும் சொல் எழுதுதல் என்னும் செயலையும் இறந்த காலத்தையும் தெளிவாகக் காட்டுகிறது. இவ்வாறு செயலையும் காலத்தையும் வெளிப்படையாகக் காட்டும் வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம் எனப்படும்.

குறிப்பு வினையெச்சம்:

மெல்ல வந்தான் – இத்தொடரில் உள்ள மெல்ல என்னும் சொல் காலத்தை வெளிப்படையாகக் காட்டவில்லை. மெதுவாக என்னும் பண்பை மட்டும் உணர்த்துகிறது. இவ்வாறு காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் பண்பினை மட்டும் குறிப்பாக உணர்த்திவரும் வினையெச்சம், குறிப்பு வினையெச்சம் எனப்படும்.

முற்றெச்சம்:

வள்ளி படித்தனள்.

இத்தொடரில் படித்தனள் என்னும் சொல் படித்தாள் என்னும் வினைமுற்றுப் பொருளைத் தருகிறது.

வள்ளி படித்தனள் மகிழ்ந்தாள்.

இதையும் படியுங்கள்:
செல்லங்களா... கொஞ்சும் தமிழ் கற்போமா? பாடம் 11!
எச்சம்|A teach teach Tamil grammar

இத்தொடரில் படித்தனள் என்னும் சொல் படித்து என்னும் வினையெச்சப் பொருளைத் தருகிறது. இவ்வாறு ஒரு வினைமுற்று எச்சப்பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது முற்றெச்சம் எனப்படும்.

அன்றாட வாழ்க்கையில் பேசக்கூடிய சொற்கள் இலக்கண முறையிலேயே அமைந்துள்ளன என்பதை நம் எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும் மாணவச் செல்வங்களே!. அவற்றை நாம் படிக்கின்ற இலக்கணத்தோடு ஒப்பிட்டு படித்தால் இலக்கணம் எளிமையாகத் தானே இருக்கும்”

“ஆம் அம்மா! நன்றாக புரிந்து கொண்டோம்!”

“அடுத்த வகுப்பில் மீண்டும் ஓர் இலக்கணப் பாடத்தோடு சந்திப்போம்!” என்று சாந்தா அம்மா அவர்கள் வகுப்பறையை விட்டுச் சென்றார்கள்.

இந்தப் பாடத்தின் மூலம், சிக்கலான இலக்கணக் குறிப்புகளை உங்கள் அன்றாட பேச்சு வழக்கோடு எளிதாக இணைத்துக்கொள்ள முடியும். இது தமிழ் மொழியின் ஆழத்தைப் புரிந்துகொள்வதுடன், எழுத்துப் பிழையின்றித் துல்லியமாக எழுதவும் பேசவும் உங்களுக்கு உதவும் ஒரு சிறந்த திறவுகோலாகும்.

logo
Kalki Online
kalkionline.com