

அன்று முதல் பாட வேளை தமிழ் வகுப்பு இருந்தது. தமிழாசிரியர் சுப்பையா வகுப்பறையில் நுழைந்தார். மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்று
“காலை வணக்கம் ஐயா! என்று கூறினார்கள்.
“அனைவருக்கும் இனிய காலை வணக்கம்! அமருங்கள் என் அருமை மாணவர்களே! இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும்!”
“நன்றி ஐயா!”
“செல்வம் எழுந்து நில். உன்னுடைய அப்பா என்ன தொழில் செய்கிறார்?”
"என்னுடைய அப்பா ஒரு உழவர்; உழவுத் தொழில் செய்கிறார்”
“செம்மொழி உன்னுடைய அப்பா என்ன வேலை செய்கிறார்?”
“என்னுடைய அப்பா தையல்காரர் தைக்கும் தொழில் செய்கிறார்”
“அருமை மாணவர்களே! இன்று நாம் பார்க்கப் போகின்ற பாடம் தொழிற் பெயர்தான். ஒரு தொழிலை குறிக்கின்ற பெயர் தொழில் பெயராகும். தொழில் என்பது இங்கு செயல் அல்லது வினை என்று எடுத்துக் கொள்ளப்படுகிறது.
ஒரு செயலின் அல்லது வினையின் பெயராக அமைவது தொழிற்பெயர் எனப்படும். தொழிற்பெயர் எண், இடம், காலம், பால் ஆகியவற்றைக் காட்டாது. படர்க்கை இடத்தில் மட்டும் வரும். என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
உழவர் செய்யும் தொழில் உழுதல்.
தையல்காரர் செய்யும் தொழில் தைத்தல்.
இத்தொடர்களில் உழுதல், தைத்தல் என்பன செயல்களின் பெயர்களாக அமைகின்றன. (உ.ம்) படித்தல், ஆடல், நடிப்பு, எழுதுதல், பொறுத்தல்.
தொழிற்பெயரை விகுதி பெற்ற தொழிற்பெயர், முதனிலைத் தொழிற்பெயர், முதனிலை திரிந்த தொழிற்பெயர் என மூன்று வகையாக வகைப்படுத்துவர்.
1. விகுதி பெற்ற தொழிற்பெயர்:
நடத்தல், உண்ணல், வாழ்வு, வாழ்க்கை ஆகிய பெயர்களைக் கவனியுங்கள். இவற்றில் நட, உண், வாழ் ஆகிய வினைப்பகுதிகள் தல், அல், வு, கை ஆகிய விகுதிகளோடு சேர்ந்து தொழிற்பெயர்களாக அமைகின்றன.
இவ்வாறு வினைப்பகுதியுடன் தொழிற்பெயர் விகுதி சேர்ந்து வருவது விகுதி பெற்ற தொழிற்பெயராகும்.
தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, வு, தி, சி, வி, மை போன்றவை தொழிற்பெயர் விகுதிகளாக வரும்.
(உ.ம்):
தருதல் - தல்
கூறல் - அல்
ஆட்டம் - அம்
விலை - ஐ
வருகை - கை
பார்வை - வை
போக்கு - கு
நட்பு - பு
மறைவு - வு
மறதி - தி
உணர்ச்சி - சி
கல்வி - வி
செய்யாமை - மை.
2. முதனிலைத் தொழிற்பெயர்:
வானில் இடி இடித்தது
சோறு கொதி வந்தது
இடி, கொதி என்னும் சொற்கள் இடித்தல், கொதித்தல் என்னும் சொற்களின் பகுதிகளாகும். இவ்வாறு ஏவல் ஒருமை வினையாக அமையும் வினைச்சொற்களின் பகுதியை முதனிலை என்பர். முதனிலை எவ்வகை மாற்றமும் பெறாமல் தொழிற்பெயராக அமைவது முதனிலைத் தொழிற்பெயர் எனப்படும்.
(உ.ம்)
செல்லமாக ஓர் அடி அடித்தான்.
அறிஞர் அண்ணா தம் பேச்சால் புகழ் பெற்றார்.
இவற்றில் அடிக்கோடிட்ட சொற்கள் விகுதி பெறாமல் தம்பொருளை உணர்த்துகின்றன.
3. முதனிலை திரிந்த தொழிற்பெயர்:
தமிழ் படிக்கும் பேறு பெற்றேன்.
உணவின் சூடு குறையவில்லை.
இத்தொடர்களில் பேறு, சூடு ஆகிய சொற்களைக் கவனியுங்கள். பெறு, சுடு என்னும் பகுதிகளின் முதலெழுத்து நீண்டு, பேறு, சூடு எனத் திரிந்து தொழிற்பெயர்களாக மாறி உள்ளன. இவ்வாறு முதனிலை திரிவதால் உருவாகும் தொழிற்பெயர் முதனிலை திரிந்த தொழிற்பெயர் எனப்படும்.
(எ.கா.):
விடு- வீடு, மின்- மீன், கொள்- கோள், உடன்படு- உடன்பாடு
இந்த தொழிற் பெயர் உங்களுக்கு புரிந்ததா மாணவர்களே?
அருமை ! அருமை! நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கப் போகிறேன்!
நாச்சியார் எழுந்து நில் ஒழுக்கம் என்பது தொழில் பெயராக வருமா?
“ஆம் ஐயா.. கண்டிப்பாக வரும்”
“எப்படி சொல்கிறாய் நாச்சியார்?”
“அம்” என்ற விகுதி இருந்தால் அவை தொழில் பெயர்தான் ஐயா! ஒழுக்கம் என்ற சொல்லில் அம் என்ற விகுதி இருக்கிறது. அதனால் தான் நான் தொழில் பெயர் என்று கூறினேன்”
“நனி நன்று! உங்களுக்கு நன்றாக புரிந்து விட்டது எனக்கு மிக்க மகிழ்ச்சி..
நம் அன்றாட வாழ்க்கையில் செய்கின்ற தொழில்தான் தொழில் பெயராக நாம் இன்று படித்தோம். அவற்றில் மூன்று வகைகள் இருப்பதையும் நீங்கள் தெரிந்து கொண்டீர்கள் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு இந்த இனிக்கின்ற இலக்கணத்தை எளிமையாக புரிந்து கொண்டால் நம் வாழ்க்கையில் தமிழை புகுத்தி தமிழராகவே வாழ முடியும் என்பது திண்ணம்."
மணி ஒலித்தது….
அடுத்த பாடவேளை தொடங்கியது…..