

துருக்கி நாட்டில் மல்பெரி என்ற ஒரு மரம் உண்டு. நீண்ட கிளைகளுடன் உயர்ந்து, அடர்ந்து, செழித்து அந்த மரம் காணப்படும். ஆனால், அந்த மரத்தின் பழமோ சிறிய கோலிக்குண்டு அளவுக்கு மிகச் சிறியதாக இருக்கும்.
ஒரு நாள் முல்லா இந்த மல்பெரி மரத்தின் நிழலில் அமர்ந்து களைப்பாறிக் கொண்டிருந்தார். அப்போது வழிப்போக்கனான ஒரு இளைஞன் அங்கே வந்தான். வெகு தூரத்திலிருந்து வெயிலில் அவன் நடந்து வந்ததால், நிழலைக் கண்டதும் அவனுக்கு அது ஆனந்தமாய் இருந்தது. அவன் அந்த மரத்தின் அடியில் தலை வைத்துப் படுத்துச் சற்று நேரம் தூங்கினான்.
சிறிது நேரம் கழித்து அவனது பார்வை முல்லாவின் மீது விழுந்தது. பின் அண்ணாந்து மரத்தைப் பார்த்தான். மரத்தில் சின்னஞ்சிறு பழங்கள் அவன் கண்ணில் பட்டன. உடனே அவன் அதைப் பார்த்து உரக்கச் சிரித்தான்.
முல்லா அவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு, "ஏன் சிரிக்கிறாய்?" என்று கேட்டார்.
"கடவுளின் முட்டாள்தனத்தை எண்ணிச் சிரிக்கிறேன்," என்றான் அந்த வழிப்போக்கன்.
"கடவுள் அப்படி என்ன முட்டாள்தனம் செய்துவிட்டார்?" என்று முல்லா ஆச்சரியத்துடன் அவனிடம் கேட்டார்.
"இந்த மரத்தைப் பாருங்கள், ஒரு பெரிய கூடாரத்தைப் போல எவ்வளவு பெரியதாக இருக்கிறது? ஆனால், இந்த மரத்தின் பழங்களைப் பாருங்கள், எவ்வளவு சிறிதாக உள்ளன! இவ்வளவு பெரிய மரத்தின் பழங்கள் எவ்வளவு பெரியவையாக இருக்க வேண்டும் என்று கூடத் தீர்மானிக்க முடியாத கடவுளை 'முட்டாள்' என்று கூறுவதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்றான் வழிப்போக்கன்.
முல்லா பதில் ஒன்றும் பேசாமல், அமைதியாகப் படுத்திருந்தார்.
சிறிது நேரம் கழித்துக் காற்று பலமாக அடித்தது. மரத்தின் கிளைகள் வேகமாக அசைந்து ஆட, கிளைகளில் இருந்து சின்னஞ்சிறு பழங்கள் மளமளவெனக் கொட்டின. சில பழங்கள் வழிப்போக்கனின் தலையிலும் விழுந்தன.
முல்லா அவனைப் பார்த்து, "நண்பரே, உமது தலை மீது ஏராளமான பழங்கள் விழுந்தனவா?" என்று கேட்டார்.
"ஆமாம், காற்றில் அவை உதிர்ந்துவிட்டன," என்றான் வழிப்போக்கன்.
"கடவுள் முட்டாளாக இல்லாமல், புத்திசாலியாக இருந்து பெரிய பாராங்கல்லைப் போன்ற பழங்களை இந்த மரத்தில் உற்பத்தி செய்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? உங்கள் தலை நசுங்கி, நீங்கள் இறந்திருப்பீர்கள் அல்லவா?" என்று கேட்டார் முல்லா.
வழிப்போக்கன் யோசித்தான்.
"நண்பரே! கடவுளின் படைப்பில் அனாவசியமானதோ, அர்த்தமற்றதோ எதுவுமில்லை. எதையும் ஒரு காரணத்தோடுதான் இறைவன் சிருஷ்டித்திருக்கிறார். இவ்வளவு பெரிய விசாலமான மர நிழலில் நிறைய மனிதர்களும், விலங்குகளும் நிழலுக்காக வந்து தங்கும் என்று கடவுளுக்குத் தெரியும். அதனால்தான் கடவுள் நிழல் தரும் பெரிய மரத்தின் பழங்களை மிகவும் சிறியதாகப் படைத்திருக்கிறார்," என்றார் முல்லா.
"ஐயா, தாங்கள் யார் என்று தெரியவில்லையே? ஒரு மகான் போல் பேசுகிறீர்களே!" என்று பயபக்தியுடன் கேட்டான் வழிப்போக்கன்.
"கடவுள் மகான்களைச் சிருஷ்டிப்பதில்லை; மற்ற உயிர்களைப் போல தான் மனிதர்களையும் சிருஷ்டிக்கிறார். நான் உன்னைப் போல ஒரு மனிதன் தான்," என்றார் முல்லா. உடனே வழிப்போக்கன் அதை ஆமோதித்து, அவரை வணங்கிவிட்டுச் சென்றான்.
நீதி: கடவுள் படைத்த எந்தச் செயலிலும் ஒரு ஆழமான அர்த்தம் உள்ளது.