முல்லாவின் சமயோசித பதில்!

Mulla and the Curious Villagers
Mulla and the Curious VillagersAI Image
Published on

ஒரு சின்ன கிராமத்தில் வாழ்ந்து வந்தவர் முல்லா. அந்த கிராமத்தில் எப்போதும் அமைதியை நிலைநாட்ட அவர் பாடுபடுவார். பஞ்சம், பட்டினி அல்லது சண்டை போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால், முல்லா தன்னால் முடிந்தவரை அவற்றைத் தீர்த்து வைப்பார்.

தன்னால் முடியாத விஷயங்களை காவல் அதிகாரி மூலமாக அதட்டியும், உருட்டியும் தீர்த்து வைப்பார். அதுவே அரசாங்க ரீதியிலான பிரச்சனையாக இருந்தால், முல்லாவே நேராக நகரத்திற்குச் சென்று அரசு அதிகாரிகளைச் சந்தித்துத் தனது கிராமத்து பிரச்சனைகளைத் தீர்த்து வருவார்.

இதன் காரணமாக, முல்லா எப்போது நகரம் சென்று வந்தாலும், "தங்களுக்காக ஏதாவது சலுகை வாங்கி வந்திருப்பார்" அல்லது "அரசாங்கத்திடம் பேசிவிட்டு வந்திருப்பார்" என்று பொது மக்கள் நினைக்க ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு முறையும் முல்லா தனது சொந்த வேலைக்காக நகரத்திற்குச் சென்று வந்தாலும், அவரைச் சூழ்ந்து கொண்டு மக்கள் தொந்தரவு செய்யத் தொடங்கினார்கள்.

இதையும் படியுங்கள்:
ஜனநாயகக் காடு: ஒரு குட்டிக்கதை!
Mulla and the Curious Villagers

மக்களின் கேள்விக் கணை

ஒருமுறை மக்கள் அவரிடம், "முல்லா, நீங்கள் அரசரைத் தானே பார்த்துவிட்டு வந்தீர்கள்? இல்லை அமைச்சரைப் பார்த்தீர்களா? காவல் அதிகாரிகளை அல்லது தளபதியைப் பார்த்தீர்களா?" என்று சரமாரியாகக் கேள்வி கேட்டார்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகப் பதில் சொல்ல முடியாத முல்லா, இந்தத் தொல்லைக்கு ஒரு முடிவு கட்ட நினைத்தார்.

ஒருமுறை தன் நண்பருடைய மகன் கல்யாணத்திற்காக நகரத்திற்குச் சென்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார். "வழியில் மக்கள் மற்றும் வியாபாரிகள் வழக்கம் போலக் கேள்வி கேட்டுத் தொந்தரவு செய்வார்களே, இதை எப்படிச் சமாளிப்பது?" என யோசித்துக் கொண்டே நடந்தார். அப்போது முல்லாவுக்கு ஒரு யோசனை தோன்றியது. "இன்று எல்லோரையும் ஒரு கை பார்த்துவிட வேண்டும்!" என்று முடிவு செய்தார்.

முல்லா சொன்ன 'அரசர்' செய்தி

முல்லா நேராக வீட்டிற்குப் போகாமல், சந்தைக்குச் சென்றார். மக்கள் அனைவரும் இருக்கும் இடத்தில் ஒரு மேஜை மீது ஏறி நின்று, "நான் நகரத்திற்குப் போயிட்டு இப்பதான் வந்தேன். என்னிடம் யாராவது எதுவும் கேட்க வேண்டுமா?" எனச் சத்தமாகக் கூவினார்.

உடனே பொதுமக்கள், "நிச்சயம் அரசரிடம் ஏதாவது சலுகை வாங்கிக்கொண்டு வந்திருப்பார்!" என்று எண்ணி அவரை நோக்கி ஓடி வந்தனர். "அங்கே யாரைச் சந்தித்தீர்கள்?" என்று கேட்டார்கள்.

முல்லா அமைதியாக, "நான் அரசரைச் சந்தித்தேன்," என்றார்.

"அப்படியா!" என எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். அரசர் என்ன சொன்னார் என்பதைக் கேட்க அனைவரும் ஆவலாக இருந்தனர். "அரசர் உங்களிடம் என்ன சொன்னார்?" எனக் கேட்டார்கள்.

இதையும் படியுங்கள்:
நரியின் தந்திரமும் நாயின் புத்திசாலித்தனமும்!
Mulla and the Curious Villagers

"முட்டாப் பயலே! ஓரமா ஒதுங்கி நில்லு, குதிரை இடிச்சிடப் போகுது!" என்று அரசர் சொன்னார் என்றார் முல்லா.

எல்லோருக்கும் குழப்பமாக இருந்தது. "எதற்கு முல்லா அவர் அப்படிச் சொன்னார்?" என்று கேட்டார்கள்.

அதற்கு முல்லா, "அவர் போற பாதையிலேயே முட்டாள் மாதிரி குறுக்கே நான் நின்றுகொண்டிருந்தால், அப்படித்தானே திட்டுவார்!" என்றார்.

முல்லாவின் விளக்கம்

மக்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. "திட்டு வாங்கிட்டு வந்திருக்கீங்க, அதை முதலில் சொல்லுங்க! நீங்கள் என்னவோ அரசாங்கத்தில் ஏதோ காரியம் சாதிக்கப் போன மாதிரி அல்லவா நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம்!" என்றார்கள்.

அப்போதுதான் முல்லா சொன்னார்: "இப்ப புரியுதா? ஒவ்வொரு தடவையும் நான் வெளியூர் போவது அரசாங்கக் காரியத்திற்கு என்று நினைத்து என்னை போட்டுத் தொந்தரவு செய்யாதீர்கள். நான் என்னோட சொந்த விஷயத்துக்காகவும் போயிட்டு வருவேன். ஒவ்வொருவருக்கும் என்னால் தனித்தனியாகப் பதில் சொல்ல முடிவதில்லை."

முல்லா தெளிவாகச் சொன்ன பிறகு, மக்கள் அனைவரும் அவரிடம் அதிகப்பிரசங்கித்தனமாகக் கேள்வி கேட்பதைக் குறைத்துக் கொண்டார்கள். அடுத்தவர்களின் பிரச்சனைகளையும், ஊர்ப் பிரச்சனைகளையும் தீர்த்து வைத்த முல்லா, தனது சொந்தப் பிரச்சனையை இப்படித்தான் நகைச்சுவையாகத் தீர்த்துக்கொண்டார்.

குட்டீஸ்... இது மாதிரி பேச வேண்டிய இடங்களில் புத்திசாலித்தனமாகவும், நகைச்சுவையாகவும் பேசிச் சூழலைச் சமாளிக்க வேண்டும். செய்வீர்களா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com