

எனக்கு வயது பத்து இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனந்த விகடனில் அப்போது வரும் சிறுவர் பக்கத்தை மிகவும் ஆவலுடன் படிப்பேன். படித்தால் மட்டும் போதாது, அந்தப் பகுதிக்கு ஏதாவது எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது மனதில்.
நாங்கள் குடியிருந்த பல குடித்தனங்கள் அடங்கிய காலனியில் ஆனந்த விகடனில் வேலை செய்யும் ஒரு அங்கிள் இருந்தார். அவரோட என் ஆசையைப் பற்றிச் சொன்னேன். அவரும் "ஒரு நல்ல குட்டி கதையை எழுதி என்னிடம் கொடு, நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று ஊக்கப்படுத்தினார்.
நானும், ஒரு காக்கா, நரி மற்றும் ஒரு வடை அடங்கிய ஒரு சின்ன கதையை எழுதி அவரிடம் கொடுத்தேன். இந்தக் கதையை, காக்கா நரியிடம் ஏமாறாதவாறு அமைத்திருந்தேன். மறுவாரமே அது பிரசுரிக்கப்பட்டது. எனக்கோ குஷி தாங்கவில்லை. முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தது மாதிரி ஆகிவிட்டது. காலனி முழுவதும் என் கதை வந்த விஷயம் பரவி, பாராட்டுகள் குவிந்தன. "ஒரு கால் பக்க காக்கா நரிக் கதைக்கா இவ்வளவு அமர்க்களம்?" என்று கேலி செய்தான் என் அண்ணன்.
கதை வந்த பத்து நாட்கள் கழித்து போஸ்ட்மேன் எங்கள் வீட்டு கதவைத் தட்டினார். "தம்பி, உனக்கு மணி ஆர்டர் வந்திருக்கு" என்று சொல்லி ஒரு பேப்பரில் கையெழுத்து போடச் சொல்லி, ஒரு பத்து ரூபா நோட்டை எடுத்து என் கையில் கொடுத்தார்.
அதுதான் நான் தொட்ட முதல் காகிதப் பணம். அதற்கு முன் எனக்குத் தெரிந்ததெல்லாம் ஓட்டைக் காலணாவும், அரையணாவும், ஓரணாவும் தான். அந்த பத்து ரூபா நோட்டு, இன்றைய நூறு ரூபா நோட்டின் அளவு, அழகான கப்பல் படம்போட்டு மொடமொடவென்று இருந்தது.
எனக்கு ஒன்றும் புரியவில்லை. "அனுப்பியது யார் அங்கிள்? என்னோட தாத்தாவா?" போஸ்ட்மேன் சொன்னார், "தம்பி, அனுப்பியது உன்னோட தாத்தா இல்லை. ஆனந்த விகடனின் அட்டையில் இருப்பாரே, அந்த உச்சி குடுமி தாத்தாதான்."
அந்த நாளில் பத்து ரூபாயில் ஒரு சிறுவன் என்னென்ன வாங்கிச் சாப்பிடலாம் தெரியுமா? அதிர்ந்து போவீர்கள் சொன்னால். அப்போதே உஸ்மான் சாலையில் இருந்த யூனிவர்சல் பேக்கரியில் அமர்ந்து பன் பட்டர் ஜாமும், கப் ஐஸ்கிரீமும் சாப்பிடுவது போல கனவு வந்து போனது.
ஆனால், அந்தக் கனவு ஆகவில்லை நிஜம். அப்பா வந்ததும் முதல் வேலையாக என் அருமை பத்து ரூபா நோட்டை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டார். அதற்குப் பதில் ஒரு எட்டணா காசை நீட்டி, "நீ ஒரு குழந்தை, உன் கையில் இவ்வளவு பெரிய அமௌன்ட் இருக்கக் கூடாது" என்று சொன்னார்.
இது நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. நான் பெரியவனாகிப் படித்து வேலை கிடைத்தது. முதல் சம்பளத்தை அவரிடம் நீட்டிச் சொன்னேன், "அப்பா, வாங்கிக்கோங்க இதை, என் முதல் சம்பளம்."
அவர் சொன்னார், "இது இல்லை உன் முதல் சம்பளம். ஆனந்த விகடனிலிருந்து வந்ததே அந்தப் பத்து ரூபா, அதுதான் உன் முதல் சம்பளம். அது என்னிடம் இன்னும் பத்திரமாக இருக்கு" என்று சொல்லி, அவர் தனக்கென்று வைத்திருந்த பிரத்யேகப் பெட்டியிலிருந்து அன்று போஸ்ட்மேன் கொடுத்த அதே பத்து ரூபாய் நோட்டை என் கையில் வைத்து அழுத்தினார்.