
நாலே நாலுதான்..!!
எல்லோருக்கும் எதிலாவது சாதிக்கவேண்டும் என்று தீராத ஆசை இருக்கும்.
குறிப்பாக மாணவர்கள் மற்றும் மாணவிகள் ஏதாவது ஒரு லட்சியம் கொண்டு இருப்பார்கள்.
சிலருக்கு கிரிக்கெட்... சிலருக்கு டேபிள் டென்னிஸ்… சிலருக்கு சதுரங்கம்…
சிலருக்கு தடகளம்…
சிலர் கல்வியில் சாதிக்க முனைவர் பட்டம் வாங்க விரும்புவார்கள்.
இப்படி பல்வேறு ஆசைகள் இருக்கும்.
நீங்கள் எந்தத் துறையில் சாதிக்க நினைத்தாலும் கல்வியை மறக்கக்கூடாது. கல்வியில் அதிக சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் எந்தத் துறையில் சாதிக்க முடியாமல் போனாலும் கல்வியை கெட்டியாக பிடித்துக்கொள்ளுங்கள். பிறகுதான் மற்றவை எல்லாம்.
நீங்கள் இசையில் சாதிக்க விரும்பலாம். பாடகர், கவிஞர், இசை அமைப்பாளர், கீ போர்டு, ட்ரம்ஸ், வயலின், சேக்ஸாப்போன், மிருதங்கம்… இப்படி பல்வேறு பிரிவுகள் உள்ளன. அதில் உங்களுக்கு முதலில் எதில் ஆர்வம் அதிகம் உள்ளது என்பதை நீங்களேதான் முடிவு செய்ய வேண்டும். அதேபோல் விளையாட்டுகளில் உங்களுக்கு பிடித்த விளையாட்டைத் தீர்மானிக்க வேண்டும்.
எந்தத் துறையாக இருந்தாலும் அதில் உங்களுக்கு முதல் தேவை ஆர்வம்.
ஆர்வம் இருந்தாலும் அதற்காக உழைக்க வேண்டும். ஆம்.
தேவை கடின உழைப்பு. சரி.
ஆர்வம் மற்றும் கடின உழைப்பு மட்டும் போதுமா…? நிச்சயமாக இல்லை. உங்களுக்கு அடுத்த தேவை பயிற்சி.
இப்போது நீங்கள் கிரிக்கெட் தேர்வு செய்தால் உங்களுக்கு பயிற்சி தேவை. அதற்கு நீங்கள் சிறந்த கிரிக்கெட் கோச்சிங் சென்டரில் சேர்ந்து விடாமல் பயிற்சி செய்ய வேண்டும். தொடர்ந்து நீங்கள் பயிற்சி செய்யாமல் விட்டால் நீங்கள் உங்கள் லட்சியத்தை அடையமுடியாது.
உதாரணமாக சச்சின் மற்றும் காம்பிளி இருவரும் உயர்நிலை பள்ளி படிக்கும்போதே கடுமையான பயிற்சி மேற்கொண்டார்கள். இது எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. ஆனால் அவர்களது பயிற்சி அவர்கள் படிக்கும்போதே சாதனை படைத்தார்கள். ஆம், இருவரும் சேர்ந்து 600 ரன்கள் எடுத்து வெற்றியை ருசித்தினர்.
இதற்கு காரணம்
1. ஆர்வம்
2. கடின உழைப்பு
3. பயிற்சி
இவை இருந்தால் மட்டும் போதாது. அதற்குமேல் ஒன்று மிக முக்கியமாக வேண்டும்.
ஆம். முதலில் தோல்வியைச் சந்திக்கலாம். அதைக் கண்டு மனம் துவளக்கூடாது. நாம் ஆர்வம், கடின உழைப்பு மற்றும் பயிற்சி இருந்தும் தோல்வி கிடைத்தால்… நமக்கு நம் மனதில் சோர்வு வரும். அதற்குத்தான் இந்த 4-வது அம்சம். ஆம். அதுதான் விடாமுயற்சி..!
இப்போது விடாமுயற்சி உங்களுக்கு இருந்தால் அடுத்த நீங்கள் சந்திக்க போவதுதான் வெற்றி.
இங்கு தாமஸ் ஆல்வா எடிசன் பற்றி சொல்லியே தீர வேண்டும். அவர் மின்சார பல்பை கண்டுபிடிப்பதற்கு 1000 சோதனைகள் செய்தார்.
ஆனால் தோல்விதான் கிடைத்தது.
ஆனால் விடாமுயற்சியை அவர் விடவில்லை. “நான் 1000 முறை என்ன செய்யக்கூடாது..? “ என்று தெரிந்துகொண்டேன் என்று உறுதியாக சொன்னார்.
அடுத்து என்ன… ?
உலகிற்கு மின்சார பல்ப் கண்டுபிடித்து சாதனை படைத்தார்.
அவரிடம் ஆர்வம், கடின உழைப்பு, பயிற்சி இருந்தாலும் அவரால் சாதித்து இருக்க முடியாது.
ஆம்
விடாமுயற்சி அவரிடம் இருந்தது. கடைசியாக வெற்றியை பெற்றார். அவரை ரோல் மாடலாக எடுத்துக்கொள்ளுங்கள்.
எனவே, நீங்கள் எந்த துறையில் சாதிக்க விரும்பினாலும் கீழே உள்ள 4 அம்சங்களை மறந்துவிடாதீர்கள். வெற்றி கனியை பறிக்க தேவை :
1. ஆர்வம்,
2. கடின உழைப்பு,
3. பயிற்சி,
4. விடாமுயற்சி.
ஆம்.
ஞாபகம் வெச்சுக்கோங்க குட்டீஸ், வெற்றி பெற இந்த நாலு விஷயங்கள் ரொம்ப ரொம்ப முக்கியம்!