அறிவியல் கதை - ஏலியனுடன் ஒரு பயணம்!

ஏலியன்...
ஏலியன்...

து ஒரு இயற்கை எழில்மிக்க மலைகள் சூழ்ந்த அழகான சிற்றூர். அந்த ஊரின் அரணாக மூன்று மலைகள் சூழ்ந்திருந்தன. அதனால் அவற்றை மும்மலை என்று அழைப்பார்கள். பொதுவாக அந்த ஊர் மக்கள் யாரும் மலைப் பக்கம் செல்லமாட்டார்கள். அங்கே பேய் பிசாசு உலாவுவதாக ஒரு வதந்தி. பேய் பிசாசுகளுக்கு பயந்து அந்தப்பக்கம் யாரும் நெருங்கக் கூட முயற்சிப்பதில்லை.

அந்த ஊரில் ராமு, சோமு என்ற இணைபிரியாத நண்பர்கள் இருவர் இருந்தனர். ஒரு ஞாயிற்றுக்கிழமை சோமு ராமுவின் வீட்டிற்குச் சென்றான்.

“டேய் சோமு. இன்னைக்கு வெய்யிலே இல்ல. காத்தும் இதமா வீசுது. நாம ரெண்டு பேரும் மும்மலைக்குப் போயிட்டு வருவோமா ?”

இருவரும் மரங்களின் இடையே இருந்த குறுகிய வழிகளில் குனிந்து நிமிர்ந்து வளைந்து மெல்ல நடந்தபடியே இருந்தார்கள். மலையின் பாதி தொலைவை ஏறிவிட்டார்கள். அங்கே சமமான ஒரு பகுதியில் புற்கள் முளைத்திருந்தன. பெரிய தட்டையான பாறை ஒன்றும் காணப்பட்டது. இருவரும் அதன் மீது அமர்ந்தார்கள்.

மணி காலை பத்து இருக்கும். அந்த பாறை மீது அமர்ந்தபடி மலையின் அழகையும் கருத்த மேகங்களையும் ரசித்தவண்ணம் இருந்தார்கள். அப்போது எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது. ஒரு தடிமனான மரத்தின் பின்னாலிருந்து கரிய உருவம் எட்டிப்பார்த்தது. அந்த உருவத்தை ராமு கவனித்துவிட்டான்.

இதையும் படியுங்கள்:
அவசியம் தவிர்க்க வேண்டிய 6 வகை உணவுகள்!
ஏலியன்...

“டேய். அது கரடிடா”

“போச்சுடா. இன்னைக்கு நம்ம கதை முடிஞ்சிடுச்சி”

“பயப்படாத சோமு. ஓடாம அப்படியே நில்லு”

அப்போது திடீரென ஒரு பெரும் நிழல் அவர்கள் மீது விழுந்தது. இருவரும் உடலுக்குள் நடுக்கத்தை உணர்ந்தனர். வானத்து மேகத்திலிருந்து பெரிய தட்டு போன்ற ஒரு கருவி ஓசையின்றி கீழ் நோக்கி இறங்கிக் கொண்டிருந்தது. கரடி தந்த பயத்தைவிட இப்போது அந்த தட்டு அவர்களுக்கு அதிக பயத்தைத் தந்தது. அந்த தட்டு இருவரின் அருகிலும் வந்து நின்றதும் அதிலிருந்து ஒரு மூடி போன்ற அமைப்பு திறந்து ஒரு உருவம் இறங்கி வந்தது.

அந்த உருவம் பார்ப்பதற்கு விநோதமாக இருந்தது. தலை முட்டை போன்ற வடிவத்தில் இருந்தது. மேற்பகுதியானது அளவிற்கு அதிகமாக அகன்று பெரியதாக இருந்தது. மூக்கு உள்ளடங்கியும் கண்கள் அளவிற்கு அதிகமாக பெரிய வடிவத்திலும் வாய் சிறியதாகவும் இருந்தன. கைகளில் நான்கு விரல்கள் மட்டுமே நகங்களின்றி இருந்தன. கை கால்கள் மெலிதாக இருந்தன. மெதுவாக இறங்கி இருவருக்கு அருகில் வந்து நின்றது. அவர்களுக்கு எதிரே நிற்கும் கரிய உருவத்தைப் பார்த்து அவர்கள் பயப்படுகிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டு தன் ஒரு கை விரலை கரடியை நோக்கி நீட்ட கரடி காணாமல் போனது.

அந்த விநோத உருவம் தங்களைக் காப்பாற்றியதை அறிந்ததும் அது தங்களை ஒன்றும் செய்யாது என்ற எண்ணம் இவருரின் மனதிலும் எழுந்தது.

ராமு அந்த உருவத்தை நோக்கி “தேங்க்ஸ்” என்றான்.

அது உதட்டில் விரலை வைத்து என்ன என்பது போல சைகை செய்தது.

அது என்ன கேட்கிறது என்பது புரியவில்லை. உடனே சோமு ராமுவிடம் “டேய் அது நாம என்ன மொழி பேசறோம்னு கேக்குது போலடா”

“அப்படியா ?”

“தமிழ்” என்றான் ராமு.

அது எழுதிக்காட்டும்படி சைகை செய்தது.

தனது பாக்கெட்டிலிருந்து பேப்பரை எடுத்து தமிழ் என்று எழுதி வாசித்துக் காட்டினான்.

அந்த உருவம் கண்களை மூடி தன் விரலை தலையில் தட்டியது.

கரகர வென்ற குரலில் தமிழில் பேசியது.

இதைக் கேட்ட ராமுவும் சோமுவும் அதிர்ச்சி அடைந்தார்கள்.

இதையும் படியுங்கள்:
நூலோர் தொகுத்தவற்றில் தலையாயது எது தெரியுமா?
ஏலியன்...

“எங்கள் மொழியை நீ எப்படிப் பேசுகிறாய் ?”

“இந்த பிரபஞ்சத்தில் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள் நாங்கள். இந்த பிரபஞ்சம் முழுவதுமே எங்கள் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. உங்கள் விஞ்ஞானிகள் எங்களுக்கு வைத்துள்ள பெயர் “ஏலியன்”. நாங்கள் பொதுவாக ரேடியோ அலைகள் மூலமாக தகவல்களைப் பரிமாறிக் கொள்ளுவோம். எங்களால் நினைத்த மாத்திரத்தில் எந்த மொழியையும் பேச முடியும். எத்தகைய தகவல்களையும் பரிமாறிக் கொள்ள முடியும்”

“ஆமாம் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் ?”

“எங்களால் ஒரு நொடிப்பொழுதில் நினைத்த இடத்திற்குச் செல்ல முடியும். பிரபஞ்சம் முழுவதும் சுற்றிக் கொண்டே இருப்போம். சொல்லப்போனால் உங்கள் ஒவ்வொருவரையும் கட்டுப்படுத்தி இயங்க வைப்பதே நாங்கள் தான். இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அசைவையும் முடிவு செய்வதே நாங்கள்தான். எங்களுக்கான கிரகம் இங்கிருந்து ஐந்து லட்சம் மைல்கள் தொலைவில் உள்ளது”

ராமுவிற்கு பசியெடுத்தது. தன் பாக்கெட்டிலிருந்து பிஸ்கட் பாக்கெட்டை எடுத்துப் பிரித்து சோமுவிற்குக் கொடுத்துத் தானும் சாப்பிட்டான்.

“நீங்கள் பிஸ்கட் சாப்பிடுவீர்களா ?”

“இல்லை. நாங்கள் உங்களைப் போல கிடைத்ததை யெல்லாம் தின்று வயிற்றை நிரப்புவதே இல்லை. சொல்லப்போனால் நாங்கள் எதையும் சாப்பிடுவதில்லை. சூரிய ஒளியிலிருந்து எங்களுக்குத் தேவையான சக்தி கிடைத்துவிடும். அதை வைத்துத்தான் நாங்கள் இயங்குகிறோம்”

இப்போது ராமு கையிலிருந்த பிஸ்கட் பாக்கெட்டைக் கசக்கிக் கீழே எறிந்தான்.

“ஒரு காலத்தில் சுத்தமாக இருந்த பூமியை நீங்கள் கெடுத்து விட்டீர்கள். பாலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பைகளை தேவையில்லாவிட்டாலும் கூட உங்கள் விருப்பத்திற்கு உபயோகித்து சுற்றுச்சூழலைக் கெடுத்து விட்டீர்கள். பூமியைக் கெடுத்தது போதாது என்று செவ்வாய் கிரகத்திற்குச் சென்று அதையும் பாழாக்கப் பார்க்கிறீர்கள்”

ஏலியன் சொன்னதைக் கேட்ட ராமுவிற்கும் சோமுவிற்கும் என்னமோ போலிருந்தது.

“சரி. நீங்கள் இருவரும் எங்கள் கிரகத்திற்கு வருகிறீர்களா ?”

“உங்கள் கிரகமா அது எங்கே இருக்கிறது ?”

“ஐந்து லட்சம் மைல்களுக்கு அப்பால் நாங்கள் வசிக்கும் கிரகம் இருக்கிறது”

“அய்யோ. அவ்வளவு தூரத்திற்குச் செல்ல எப்படியும் பல வருடங்கள் ஆகுமே”

“இல்லை. ஒரு நொடிப்பொழுதில் எங்கள் பறக்கும் தட்டில் சென்று விடலாம். வாருங்கள் எங்கள் கிரகத்தைச் சுற்றிக் காண்பித்துவிட்டு உடனே உங்களை இங்கே கொண்டு வந்து சேர்த்து விடுகிறேன்”

“என்னடா போலாமா ?”

சோமு போகலாம் என்று தலையசைத்தான்.

இருவரும் பறக்கும் தட்டிற்குள் ஏறி உட்கார்ந்தார்கள். ஒரு நொடிப்பொழுதில் அது மாற்றுக் கிரகத்தை அடைந்தது. ராமுவிற்கும் சோமுவிற்கும் ஆச்சரியமாக இருந்தது.

அந்த கிரகத்தில் எல்லாமே ஆச்சரியப்படும்படியாக இருந்தது. ஏலியன்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளாமல் சிக்னல் மூலமாக தகவல்களை பரிமாறிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு இடமும் பளிச்சென்று இருந்தது. சாக்கடை, குப்பை, பிளாஸ்டிக் பைகள் என எதுவுமே தென்படவில்லை. பேனர்கள் எங்கேயும் தென்படவில்லை. எல்லாமே சுத்தமாக இருந்தது. இதைப் பார்க்க ராமுவிற்கும் சோமுவிற்கும் பிரமிப்பாகவும் அதேசமயம் வெட்கமாகவும் இருந்தது.

இதையும் படியுங்கள்:
சூப்பர் டேஸ்ட்டில் எளிதான மைசூர் பர்ஃபி செய்யலாமா?
ஏலியன்...

“என்ன எங்கள் வசிப்பிடம் எப்படி இருக்கிறது ?”

பிரமிப்பில் இருவருக்கும் பேச்சே வரவில்லை.

பின்னர் சுதாரித்துக் கொண்டு “மிகவும் சுத்தமாக இருக்கிறது. எங்களை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது. இனிமேல் நாங்கள் இருவரும் குப்பைகளை கண்ட இடங்களில் போடமாட்டோம். பாலித்தீன் பைகளை தேவையின்றி உபயோகிக்க மாட்டோம். நாங்கள் தான் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள் புத்திசாலிகள் என நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் இப்போது அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டோம்” என்றான் ராமு.

ஏலியன்..
ஏலியன்..

“ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி. நீங்கள் எங்கள் கிரகத்தில் எவ்வளவு நேரம் இருந்துள்ளீர்கள் தெரியுமா ?”

“இப்போது தானே வந்தோம். நீங்கள் மிக வேகமாக எங்களை சுற்றிக் காண்பித்து விட்டீர்கள். என்ன ஒரு மூன்று மணி நேரம் இருந்திருப்போம்”

விநோதமாக சிரித்தது அந்த ஏலியன்.

“இல்லை. உங்கள் பூமியில் மூன்று மணி நேரம். ஆனால் எங்கள் கிரகத்தில் மூன்று நாட்கள்”

“என்ன மூன்று நாட்களா ? புரியலையே”

“புரியும்படியா சொல்றேன். உங்க கிரகத்துலே ஒரு மணிநேரம் அப்படின்றது எங்க கிரகத்துலே ஒரு நாளைக்கு சமம். அதாவது உங்களுடைய ஒரு நாள் எங்க கிரகத்துலே இருபத்திநாலு நாளுக்குச் சமம். இப்ப புரியுதா ?

“புரிஞ்ச மாதிரியும் இருக்கு. புரியாத மாதிரியும் இருக்கு. சரி. எங்களுக்கு பசிக்கவே இல்லையே”

“இங்கே எல்லாமே சூரிய ஒளியிலிருந்து பெறப்படுகிறது. அதன் சக்தி எங்க உடம்பிலே போதுமான அளவுக்கு தானாகவே சேமித்து வைக்கப்படும். இந்த கிரகத்திற்கு யார் வந்தாலும் அவங்களுக்கு சக்தி தானாவே கிடைக்க ஆரம்பிச்சிடும். பசிக்காது. சுத்தமான காற்று. தூய்மையான பகுதி. இதனால் இங்கு தூசு ஏதும் இல்லை. அதனால் உடல் அழுக்காவதில்லை”

இதைக் கேட்ட இருவருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

“உங்கள் கிரகத்திற்குச் செல்லலாமா ?”

“இப்போதே செல்ல வேண்டும். எங்கள் வீட்டில் தேடுவார்கள்”

ஏலியன் சைகை செய்ய எதிரே பறக்கும் தட்டு தோன்றியது.

“ஏறிக்கொள்ளுங்கள்” என்றதும் இருவரும் ஏறி உள்ளே சென்றார்கள். அடுத்த நொடியில் அது பூமியை வந்தடைந்து மும்மலைப் பகுதியில் இறங்கியது.

நன்றி சொல்லி இருவரும் இறங்கிக் கொண்டார்கள். பறக்கும் தட்டு பறக்கத்தொடங்கி நொடிப்பொழுதில் மறைந்தது.

“ஏலியனைத்தான் யாரோ ரொம்ப காலத்துக்கு முன்னாலே பார்த்துட்டு பேய் பிசாசுன்னு கதைகட்டி விட்டிருக்காங்க. அவங்க கிரகத்துக்குப் போயிட்டு வந்ததுக்கப்புறம் நம்ம ஏரியாவைப் பார்க்கறதுக்கே கஷ்டமா இருக்குடா. இனிமே நாம ரெண்டு பேரும் நம்ம பகுதியை சுத்தமாக வெச்சிக்கிறது எப்படின்னு யோசிச்சி நம்ம நண்பர்கள்கிட்டேயும் சொல்லணும். கூடுமான மட்டும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தறதைத் தவிர்க்கணும்”

ராமு சொல்ல சோமு இதை ஆமோதித்தான்.

இருவரும் அவரவர் வீட்டிற்குச் சென்று மணியைப் பார்த்தார்கள். கடிகாரம் மதியம் இரண்டு மணியைக் காட்டியது. பசி வயிற்றைக் கிள்ள வீட்டில் இருந்த சாப்பாட்டை ஒரு வெட்டு வெட்டினார்கள்.

மாலை அம்மா ராமுவை அழைத்து கடைக்குச் சென்று சில பொருட்களை வாங்கி வரச் சொன்னாள். எப்போதும் கை வீசிச்சென்று பிளாஸ்டிக் பைகளில் பொருட்களை வாங்கி வரும் ராமு அன்று வீட்டிலிருந்து ஒரு துணிப்பையை எடுத்துக் கொண்டு புறப்பட்டான். ராமுவை அம்மா ஆச்சரியத்துடன் பார்த்தாள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com