
நம்முடைய உலகமானது விலங்குகள், பறவைகள், மரம் செடி கொடிகள், மலைகள் என பலவிதமான இயற்கைகளால் சூழப்பட்டு இருக்கிறது. இயற்கையைப் பற்றி அறிந்து கொள்வது மிக முக்கியம், மேலும் நாம் அதை எப்போதும் ரசிக்க வேண்டும்.
வானவில்லும் இயற்கையின் ஒரு முக்கிய தோற்றமாகும். வானவில் பார்ப்பதற்கு அழகாகவும் மனதிற்கு மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
வானவில்லின் ஆங்கில வாரத்தையான rainbow என்ற சொல் பழைய ஆங்கில வார்த்தையான “ரென்போகா” என்பதிலிருந்து உருவானது. 'ரென்' என்றால் 'மழை' என்றும், 'போகா' என்றால் 'வளைந்த' என்றும் பொருளாகும்.
வானவில் என்பது மழைக்கு பிறகு வானத்தில் ஏற்படும் பல வண்ணங்களின் வளைவாகும். இது சூரிய ஒளி மற்றும் நீர் துளிகளுக்கு இடையிலான பிரதிபலிப்பு மற்றும் ஒளிவிலகலின் வளைவாகும்.
சூரிய ஒளிவிலகல் வளைந்து அதன் கூறுகள் அலைநீளங்களில் சிதறடிக்கப்படுகிறது. இந்த சிதறல் வண்ணங்களின் நிறமாலையை உருவாக்குகிறது, இவை பொதுவாக வானத்தில் அரை வட்ட வளைவாகத் தோன்றும்.
சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம், இண்டிகோ மற்றும் ஊதா - இந்த வரிசைகளில் வெளிப்புறத்திலிருந்து உள் விளிம்பு வரை அமைக்கப்பட்டிருக்கும். கீழிருந்து நிறங்களின் பெயரை கருத்தில் கொண்டால் இது VIBGYOR என்று சுருக்கமாக அழைக்கப்படும். வானவில் பெரும்பாலும் நம்பிக்கை மற்றும் அழகின் சின்னமாக கருதப்படுகிறது. வானவில்லில் உள்ள அனைத்து வண்ணங்களும் எப்போதும் கண்ணுக்குத் தெரியாது.
வண்ணங்களின் நிறமாலை ஒளியிலிருந்து வெவ்வேறு அலைநீளங்களில் இருக்கின்றன, சிவப்பு மிக நீண்ட அலைநீளத்தையும், ஊதா நிறம் மிகக் குறுகிய அலைநீளத்தையும் கொண்டுள்ளது.
இந்த ஏழு நிறத்திற்கும் தனித்தனி சிறப்பும் குணமும் இருக்கிறது. பாரக்கலாமா..
1. சிவப்பு: வானவில்லின் முதல் நிறமான சிவப்பு, அன்பு, ஆர்வம், அரவணைப்பு, மற்றும் செழுமையை குறிக்கிறது.
2. ஆரஞ்சு : வானவில்லின் இரண்டாவது நிறமான ஆரஞ்சு, மகிழ்ச்சி மற்றும் படைப்பாற்றலை குறிக்கிறது. மேலும் இது சூரியனைக் குறிக்கும் துடிப்பான நிறமாகும்.
3. மஞ்சள்: வானவில்லின் மூன்றாவது நிறமான மஞ்சள், மகிழ்ச்சி, நேர்மறை, அறிவு மற்றும் ஞானத்தைக் குறிக்கும். இது பிரகாசமான மற்றும் மகிழ்ச்சியான நிறமாகும்.
4. பச்சை: வானவில்லின் நான்காவது நிறமான பச்சை, இயற்கையுடன் தொடர்புடையது மேலும் இது வளர்ச்சி, பசுமை மற்றும் புதுப்பித்தலை குறிக்கிறது.
5. நீலம் : வானவில்லின் ஐந்தாவது நிறமான நீலம், வானத்தையும் கடலையும் குறிக்கிறது, இது அமைதியான மற்றும் இனிமையான நிறத்திற்கு பெயர் பெற்றது. இந்த நிறம் நம்பிக்கை, நிலைத்தன்மை மற்றும் விசுவாசத்தின் உணர்வையும் கொண்டுவருகிறது.
6. இண்டிகோ : வானவில்லின் ஆறாவது நிறமான இண்டிகோ ஆழமான மற்றும் உயரிய நிறத்தைக் கொண்டுள்ளது. இது உள்ளுணர்வு மற்றும் ஆன்மீகத்தைக் குறிக்கிறது.
7. ஊதா: வானவில்லின் ஏழாவது மற்றும் கடைசி நிறமான ஊதா கற்பனை மற்றும் படைப்பாற்றலை எடுத்து காட்டுகிறது. இந்த நிறம் வலிமையான அரசாட்சியை குறிக்கிறது.
இந்த ஏழு நிறங்களை பற்றி அறிந்த பிறகு நமக்கு மனதில் வானவில்லை எப்போது பார்ப்போம் என்கிற ஆவல் இன்னும் அதிகமாகிறது.
அடுத்த முறை வானவில்லை பார்த்தால் அந்தந்த நிறங்களுக்குரிய தன்மையை மனதில் வைத்து கொண்டு பார்த்தீர்களேயானால் மகிழ்ச்சியும் உற்சாகமும் பெருகும். இயற்கையை இரசிப்பதில் தான் எத்தனை ஆனந்தம்! சொல்ல முடியாத அளவுக்கு சந்தோஷம் அடைகிறது நம் மனம்!