வருடா வருடம் நடக்கும் மாறுவேடப் போட்டி அது. சிறுவர்களை ஊக்குவிக்கவும், அவர்களுடைய அறிவுத் திறனை மேம்படுத்தவும் விளையாட்டுப் போட்டிகள், கலை, இலக்கியப் போட்டிகளை நடத்துவது பொன்னகர கிராமத்து வழக்கம். அப்போட்டிகளில் மிக முக்கியமானது மாறுவேடப் போட்டி. கிராமத்து மக்கள் பெரிதும் ரசித்துப் பாராட்டி மகிழும் போட்டி அது.
பார்த்திபனும் விக்கிரமனும் அந்த மாறுவேடப் போட்டியில் தவறாமல் கலந்து கொள்வார்கள். அவர்களுடைய குரல் மாற்றிப் பேசும் திறனையும், மாறுவேடத்தையும் பார்க்கும்போது யாருக்கு முதல் பரிசு கொடுப்பது, யாருக்கு இரண்டாவது பரிசு கொடுப்பது என்று தீர்மானிக்க முடியாமல் நடுவர்கள் திகைத்துப் போவார்கள். அதனால் இருவருக்குமே தனித்தனியாக முதல் பரிசு கொடுத்து விடுவார்கள்!
இந்தக் குழப்பத்துக்கு முக்கிய காரணம் பார்த்திபன், விக்கிரமன் இருவருடையயான போட்டி முறைதான். இருவருமே, ஏற்கெனவே பேசி வைத்துக் கொண்டு, ஒரேமாதிரியான வேடத்தைப் புனைந்து தத்தமது திறமையை நிரூபிக்க முயல்வார்கள்.
இந்த வருடமும் அதே பிரச்னை தலை தூக்கியது. பார்த்திபன், விக்கிரமன் இருவருமே மாடு வேடம் போட்டுக் கொள்ளப் போவதாகத் தெரிவித்திருந்தார்கள்! நடுவர், இருவரில் ஒருவரை மட்டுமே சிறந்தவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இந்த யோசனையுடனேயே வயல்வரப்பில் நடந்து வந்தார் அவர்.
அறுவடையான பக்கத்து வயல்வெளியில் சில மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. தங்கள் மீது அமர்ந்த ஈக்களையும், வண்டுகளையும் வாலாலும், உடல் சிலிர்ப்பாலும் விரட்டியபடி, அவை மேய்ந்து கொண்டிருந்தன. வரப்பைக் கடந்து வந்த மாடு மேய்க்கும் சிறுவன், ‘‘என்ன ஐயா, வாட்டமா இருக்கீங்க?’’ என்று அவரிடம் கேட்டான்.
சிறுவன்தானே என்று அலட்சியமாக ஒதுக்காமல், மாறுவேடப் போட்டியில் முடிவு செய்வதில் தனக்கு ஏற்பட்டிருக்கும் குழப்பத்தை விளக்கிச் சொன்னார் நடுவர்.
‘‘இதென்ன பிரமாதம். நான் ஒரு யோசனை சொல்றேன். அதன்படி செய்யுங்க,‘‘ என்று அவரிடம் ரகசியமாக ஏதோ சொன்னான் சிறுவன்.
போட்டி நாள். மக்கள் திரளாகக் கூடி விட்டனர். அழகிய சிறுமேடை. அதன் ஓரத்தில் நடுவர் அமர்ந்திருந்தார். மாறுவேடப் போட்டி ஆரம்பமாகியது. ஒவ்வொருவராகத் தம் திறமையைக் காட்டினார்கள். ஆனாலும் அவர்களுக்குக் குறைந்த மதிப்பெண்களே கிடைத்தது.
இறுதிக் கட்டத்தில், பரபரப்பு சூழ, பார்த்திபன் மேடை ஏறினான். அசல் மாடு கெட்டது! அத்தனை அழகாகத் துள்ளி, தலையை ஆட்டி, முட்டுவது போலப் பாய்ந்து, ‘ம்ம்..... மா‘ என்று குரல் கொடுத்து அற்புதமாக நடித்துக் காட்டினான். கூட்டத்தினர் கைதட்டியபோது, அதனால் மிரள்வதுபோலப் பாசாங்கு வேறு செய்தான்!
அடுத்து வந்த விக்கிரமன், பார்த்திபனைப் போலவே எல்லா பாவங்களையும் அழகாகச் செய்து காட்டினான். ஓடிவந்து சரேலென்று கால்களைத் தரையில் தேய்த்தபடி நடுவர் முன்னே நின்றான்!
இருவரில் யார் சிறப்பானவர்? முதல் பரிசு பெறும் தகுதி யாருக்கு உண்டு?
அனைவரும் திகைத்தனர். இம்முறை வழக்கம்போல நடுவர் குழம்பவில்லை. மெல்ல எழுந்தார். ‘‘நம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய பார்த்திபன், விக்கிரமன் இருவரில் யார் முதல் பரிசு பெறத் தகுதியுள்ளவர் என்பதில் வருடா வருடம் நமக்குக் குழப்பம் இருந்து கொண்டுதான் வருகிறது. ஆனால், இந்த முறை அந்தக் குழப்பம் இல்லை. ஆமாம்; இருவரில் சிறந்தவன் விக்கிரமன்தான்!’’ என்றார்.
‘‘எப்படி, எப்படி, எப்படி?’’
‘‘இருவரும் தம் திறமைகளைக் காட்டிக் கொண்டிருந்தபோது, நான் ஓர் ஏற்பாடு செய்தேன். முன்வரிசையில் அமர்ந்திருந்த ரங்கனை, இருவர் மீதும் தனித்தனியாக, சிறு கற்களை வீசச் சொன்னேன். அப்போது மாட்டின் இயல்புப்படி கல் பட்ட உடற்பகுதியை மட்டும் சிலிர்த்துக் கொண்டவன் விக்கிரமன்தான். பார்த்திபனோ எந்த இயக்கமும் காட்டாமல் இருந்தான். ஆகவே, விக்கிரமன்தான் மாறுவேடப் போட்டியில் முதல் பரிசுக்கு உரியவன்’’ என்றார் நடுவர்.
‘‘சரியான தீர்ப்பு!’’ என்று பார்த்திபன் உட்பட அனைவரும் ஒப்புக் கொண்டனர்.
கூடவே, ‘‘இந்தப் பெருமை, உண்மையில் இந்த யோசனையைக் கூறிய மாடு மேய்க்கும் ரங்கனுக்கே உரியது,’’ என்று கூறி, ரங்கனை அழைத்துப் பாராட்டினார் நடுவர்.