
ஒரு காட்டில் கரடி ஒன்று வசித்து வந்தது. இது அங்குள்ள சின்ன விலங்குகளுக்கு ஏதேனும் பிரச்னை என்றால் முதல் ஆளாகச் சென்று உதவி செய்யும். உதவிகள் பெற்ற எல்லா விலங்குகளும் கரடி மீது மிகுந்த பாசம் கொண்டு நட்பு பாராட்டிக் கொண்டிருந்தது.
ஒருநாள் காட்டு வழியே கரடி சென்று கொண்டிருந்த பொழுது தவளை ஒன்று கீழே படுத்துக்கொண்டு அலறியது. அருகில் சென்ற கரடி என்ன விஷயம் என்று கேட்க தனக்கு ரொம்ப நேரமாக வயிறு வலிக்கிறது என்ன செய்வது என்று தெரியவில்லை என்று அழுது கொண்டே அத்துடன் கவிழ்ந்து படுத்து, பல்டி அடித்து என பலவாறாக தன் வலியை சமாளிக்க முயற்சி செய்து கொண்டிருந்தது.
கரடி அதனை சமாதானப்படுத்தி கவலைப்படாதே. நான் குணப்படுத்துகிறேன் என்று சொல்லி அருகில் இருந்த ஒரு சின்னக் கல்லை தூக்கி அதன் வயிற்றில் போட வலி சட்டென்று நின்றது. சந்தோஷப்பட்ட தவளை கரடியை கட்டி அணைத்து நன்றி சொன்னது.
மற்றொரு நாள் காட்டு வழியில் நடந்து கொண்டிருக்கும் பொழுது ஒட்டகம் ஒன்று கீழே விழுந்து கிடந்தது. அதனுடைய வாய்ப்பகுதியில் பெரிதாக வீங்கி இருந்தது. அதன் அருகில் சென்ற கரடி ஏன் இப்படி விழுந்து கிடக்கிறாய்? உனக்கு என்ன ஆயிற்று ஏன் வாய் இவ்வளவு பெரிதாக வீங்கி உள்ளது என்று கேட்க ஒட்டகமும் நான் தவறுதலாக பெரிய பூசணி பழத்தை உடைக்காமல் விழுங்கிவிட்டேன். அது தொண்டையில் மாட்டிக் கொண்டுள்ளது. என்னால் மூச்சு விட முடியவில்லை என்று அழுதது. உடனே கரடி கவலைப்படாதே நான் சரி செய்கிறேன் என்று சுற்று மற்றும் பார்த்தது. அருகில் ஒரு பெரிய குச்சி ஒன்று கிடந்தது. அதனை எடுத்து அதன் வாய்க்குள் நன்றாக குத்தியது. பூசணிக்காய் இரண்டு மூன்று துண்டுகளாக உடைந்து வயிற்றுக்குள் சென்று விட்டது.
சந்தோஷ மிகுதியில் ஒட்டகம் கரடிக்கு நன்றி கூறிச்சென்றது. இது எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த குரங்கு ஒன்று வைத்தியம் பார்ப்பது ரொம்ப சுலபம் போலும் என்று எண்ணியது. கரடி செல்லும் இடங்களுக்கெல்லாம் கூடவே சென்று அது செய்யும் சிகிச்சை முறைகளைக் கண்டு தெரிந்துகொண்டது.
சில நாட்கள் கழித்து கரடி ஒரு வேலையாக வெளியூருக்கு கிளம்பிச் சென்றது. அப்போது குரங்கு கரடியுடன் கூடவே சென்று வெகு அருகில் நின்று கரடி செய்யும் வைத்திய முறைகளை கவனித்திருந்ததால் காட்டுக்குள் இருக்கும் சின்ன சின்ன விலங்குகளுக்கு ஏதேனும் உடல் பிரசனை ஏற்படும்பொழுது தானே முன்வந்து சிகிச்சை செய்தது.
ஒரு நாள் காட்டிலுள்ள புலிக்கு கழுத்தில் பெரிய கட்டி ஒன்று வந்து மிகுந்த வேதனைபட்டுக்கொண்டிருந்தது. இதனை அறிந்த குரங்கு தானே வலியச்சென்று புலிக்கு வைத்தியம் பார்க்க கிளம்பியது. வலியில் துடித்துக் கொண்டிருந்த புலியை நோக்கி "கவலைப்படாதே எனக்கு வைத்தியம் நன்கு தெரியும். உடனடியாக சரி செய்து விடுகிறேன்" என்று கூறிக் கொண்டே பெரிய குச்சி ஒன்றை எடுத்து அதன் தொண்டைப் பகுதியில் உள்ள பெரிய கட்டியை ஓங்கி பலமுறை அடித்தது.
வலியில் அலறியபடி புலி குரங்கைப் பார்த்து கடித்து குதற ஓடி வந்தது. குரங்கோ நல்ல வேளையாக புலியின் பிடியிலிருந்து தப்பி ஓடியது.
நீதி: அரைகுறை வைத்தியம் என்றுமே ஆபத்தாகத்தான் முடியும். தெரியாத ஒன்றை செய்து ஆபத்தை தேடிக்கொள்ளக் கூடாது.