
தொழிலோ, வாழ்க்கையோ, சீரான வாழ்க்கை அதிக பிரச்சனைகளுக்கு வழிவிடாது. அப்படி பிரச்சனைகளை எதிர்கொண்டாலும் தைரியமாக எதிர்கொண்டு, தீர்வு கண்டு, முன்னேற்றப் பாதையில் பயணிக்க வைக்கும். அத்தகைய சீரான வழித்தடம் பற்றி காண்போம்.
படிப்படியாக முன்னேறுவது ஒரு வகை. தடாலடியாக அடித்துப் பிடித்து வெகு வேகமாகப் பயணிப்பது மற்றொரு வகை.
சீரான முறையில் சற்று நிதானமாகச் சென்றாலும், அதனால் ஏற்படும் பயன்கள் அலாதியானவை. கற்றுக்கொள்ள, புரிந்துகொண்டு, யோசித்து செயல்பட நேரம் கிடைக்கும்.
சீரான தடத்தில் செல்வதால் வேகம் காட்டுவதை விட விவேகத்தை சிறப்பாக பயன்படுத்தி கூடுதல் பயன் பெற வாய்ப்புகள் அதிகம். வெகுவேகத்தில் பயணம் செய்பவர்கள் முக்கிய விவரங்களைத் தவற விட்டால் அல்லது கடந்து சென்றால், பெரும்பாலான சமயங்களில் அவர்கள் தவறவிட்டவற்றைப் பற்றி அறியாமல் போவதற்கு வாய்ப்புகள் அதிகம். அத்தகைய தவற விட்ட மிக அத்தியாவசியமான விவரங்கள் இல்லாமல் பிரச்சனைகள் பெரிதாகும் பொழுது, காலம் கடந்து நேரமும் விரயமாக வாய்ப்புகள் அதிகம்.
அதே சமயத்தில் சீரான வழித்தடத்தில் பயணிப்பவர்களுக்கு, அவர்களது நிதானம் துணை நிற்கும். மேலும், அவர்களால் ஏற்பட்ட தவறு என்ன என்பதை பெரும்பாலும் உடனடியாக உணர்ந்து, கண்டுபிடித்து திருத்திக்கொள்ளவும் அல்லது தேவைக்கு ஏற்ப மாற்றி அமைத்துக்கொள்ளவும், உடன் சரிபார்த்து அடுத்த கட்டத்திற்கு நகரவும் முடியும். தொடர்ந்து சீராகப் பயணிக்க, சிந்திக்க, செயல்படவும் சாத்தியமாகும்.
வெகுவேகமாகப் பயணிப்பவர்களில் பெரும்பாலானோர் மற்றவர்களை விட எப்படியாவது முன்னேறி முதலில் சாதிக்க வேண்டும் என்ற ஒரு வகை பிடிவாதத்துடன் காணப்படுவார்கள். அதுமட்டுமல்லாமல் கட்டாயம் பதற்றத்துடன் இருப்பார்கள். அத்தகைய அடைய வேண்டும் என்ற வெறியும், பரிதவிக்க வைக்கும் பதற்றங்களும் பலருக்குத் தடைக் கற்களாகச் செயல்படுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.
சீராகப் பயணிப்பவர்களால் பிரச்சனைகளைப் பதற்றப்படாமல் எதிர்கொண்டு, தீர்வு கண்டு சாதிக்க முடியும். இத்தகையவர்களுக்குத் தொழிலிலோ, வாழ்க்கையிலோ நாம் விரும்பியபடியே எப்பொழுதும், எல்லாம் நடைபெறாது என்று நன்கு தெரியும். செல்லும் பாதையில் எதிர்பாராத தடங்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று அவர்கள் நன்கு அறிவார்கள். எனவே, அவர்கள் எதிர் கொள்ளத் தேவையான தன்னம்பிக்கையோடுதான் பயணத்தை ஆரம்பித்துத் தொடர்வார்கள்.
வெகுவேகமாகப் பயணிப்பவர்களுக்கு நிற்காமல், தடங்கல்கள் இல்லாமல் செல்வதிலேயே குறியாக இருப்பார்கள். பெரும்பாலும் கற்பனைக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்குத் தடங்கல்களோ அல்லது பிரச்சனைகளோ உருவானால், அத்தகைய ஷாக்கில் இருந்து மீண்டு, சரி செய்து, பயணத்தைத் தொடர்வது அவ்வளவு சுலபமானது அல்ல.
ஆனால், சீராகப் பயணித்து அனுபவப்பட்டவர்களுக்கு எத்தகைய வகையான தடங்கலோ, பிரச்சனைகளோ, அவைகளைப் பற்றி கூடிய மட்டும் முன்கூட்டியே யோசித்து, விவரங்கள் சேகரித்தும், எப்படி சந்தித்து செயல்பட வேண்டும் என்பவை பற்றி ஆலோசித்து, தயார் நிலையில்தான் பயணத்தைத் துவக்கியிருப்பார்கள். சீராக இருப்பவர்களுக்கு, செல்லும் வழியில் சந்திக்கும் பலவற்றைத் தவிர்க்க முடியாது, ஆனால் கடக்க முடியும் என்று நன்கு தெரியும்.