இறால்கள் மனிதர்களுக்கு உணவாகப் பயன்படுகின்றன. ஆறுகள், ஏரிகள், கடல் பகுதிகள் என பல இடங்களிலும் இறால்கள் காணப்படுகின்றன. தற்காலத்தில் இவை செயற்கையாக உருவாக்கப்பட்ட பெரிய நீர்நிலைகளிலும் வளர்க்கப்படுகின்றன.
பலவகையான இறால்கள் காணப்படுகின்றன. அவற்றில் ஒரு வகையே சிங்கி இறால்கள் ஆகும். அவற்றைப் பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாமா சுட்டீஸ் ?
சிங்கி இறால் (Spiny Lobster) என்பது பாலினுரிடே (Palinuridae) குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வகை இறால் ஆகும். இவை ஓடுடைய கணுக்காலி வகையைச் சேர்ந்த உயிரினமாகும். சிங்கி இறால்கள் ஒரு கடினமான மேல்கூட்டைக் (Exoskeleton) கொண்டுள்ளன. இவற்றில் மொத்தம் அறுபது வகைகள் உள்ளன. சிங்கி இறால்கள் தமிழ்நாட்டில் மன்னார் வளைகுடா பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகின்றன.
பத்தொன்பது உடல் பாகங்களைக் கொண்ட சிங்கி இறால்களின் உடலானது கனத்த ஓடால் மூடப்பட்டு காணப்படுகிறது. ஒவ்வொரு பாகமும் இணையும் இடத்தில் மெல்லிய தோல் அமைந்துள்ளதால் இவற்றால் எளிதாக வளையவும் நெளியவும் முடிகிறது. இவை வளர வளர தங்கள் மேல் அமைந்துள்ள ஓட்டை அடிக்கடி கழற்றக்கூடியனவாக உள்ளன.
சிங்கி இறால்கள் நீளமான இரு உணர் கொம்புகளைக் கொண்டுள்ளன. சாட்டை போலக் காணப்படும் இந்த உணர் கொம்புகளை தேவைப்படும் சமயங்களில் ஆயுதமாகவும் இவை பயன்படுத்துகின்றன. இதைத் தவிர இரண்டு சிறு உணர் கொம்புகளையும் இவை கொண்டுள்ளன. இவற்றின் உடல் முழுவதும் முன்னோக்கிய முட்கள் காணப்படுகின்றன. இவை முன்னோக்கியும் பின்னோக்கியும் நீந்தக் கூடிய அபூர்வமான ஆற்றலைக் கொண்டுள்ளன.
பொதுவாக இவை வெப்பம் மிகுந்த கடல் பகுதிகளிலேயே உயிர் வாழ்கின்றன. பெண் சிங்கி இறால்கள் தங்கள் வால் பகுதியில் குண்டூசி முனை அளவிற்கு பல்லாயிரக்கணக்கான முட்டைகளை சுமந்து கொண்டிருக்கும். இதன் காரணமாக பெண் சிங்கி இறால்களின் வால் பகுதியானது ஆண் இறாலை விட பெரியதாகவும், பிரகாசமாகவும் காணப்படுகிறது. கடலில் வெதுவெதுப்பான சூழ்நிலை ஏற்படும் போது இவை முட்டைகளைப் பொறிக்கின்றன. இதிலிருந்து வெளிவரும் லார்வாக்கள் நான்கு முதல் ஆறு வாரங்கள் வரை கடலின் மேற்பரப்பில் மிதந்து கொண்டிருக்கும். இவற்றில் பெரும்பாலானவை கடல்வாழ் உயிரினங்களுக்கு இரையாகி விடுகின்றன. தப்பிப் பிழைக்கும் சில லார்வாக்களே சிங்கி இறாலாக உருவாகின்றன.
பெரும்பாலும் சிங்கி இறால்கள் இரவு நேரங்களிலேயே தாங்கள் வசிக்கும் பாறை இடுக்குகளிலிருந்து வெளியே வந்து தங்கள் உணவைப் பிடித்து சாப்பிடுகின்றன. இவை சிப்பிகள், சிறு நண்டுகள், மீன்கள் போன்றவற்றை உணவாக உட்கொள்கின்றன. இவற்றின் பார்வையானது அவ்வளவாக கூர்மையானது அல்ல. எதிரி உயிரினங்கள் இவற்றை நெருங்கினால் இவை தங்கள் நீண்ட உணர்கொம்புகளை தங்கள் உடலில் தேய்த்து ஒருவித ஒலியை எழுப்பி எதிரிகளை பயப்படச் செய்து தங்களைக் காத்துக் கொள்கின்றன.
சிங்கி இறால்கள் ஆழமற்ற கடல் பகுதிகளில் பாறைகள், குகைகள் போன்ற இடங்களில் வாழ்கின்றன. இவை சாம்பல், பழுப்பு மற்றும் சாம்பல்-பழுப்பு நிறங்களில் காணப்படுகின்றன. சுமார் பதினைந்து ஆண்டுகள் வரை உயிர்வாழும் சிங்கி இறால்கள் பதினெட்டு அங்குல நீளமும் ஏழு கிலோ வரை எடையும் கொண்டவை.