
நாம் உட்கொள்ளும் உணவுகள் சிறந்த முறையில் ஜீரணமடைய புரோபயாட்டிக்குகள் எனப்படும் நல்ல பாக்டீரியாக்கள் உதவி புரிகின்றன. எனவே நல்ல பாக்டீரியாக்கள் அதிகம் நிறைந்துள்ள, நொதிக்கச் செய்த உணவுகளை நாம் தினசரி எடுத்துக்கொள்வது அவசியமாகிறது. நாம் புரோபயாட்டிக்குகள் நிறைந்த 8 வகை பானங்கள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.
1.கோம்புச்சா: இது நுரைத்து வரும்படி நொதிக்கச் செய்த டீ. ஸ்கோபி (SCOBY) எனப்படும் பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் சேர்ந்த கலவையை பயன்படுத்தி புளிக்க வைக்கப்படுகிறது. இதில் நிறைந்துள்ள புரோபயாட்டிக்குகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், இரைப்பை குடல் அமைப்பில் வாழும் நுண்ணுயிரிகளின் அளவை சமநிலைப்படுத்தி, ஜீரணம் முழுமையாக நடைபெறவும், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் உதவுகின்றன.
2.கெஃபிர்: இது ஒரு புளித்த தயிர் போன்றதொரு பானம். இதில் அடங்கியுள்ள பல வகையான நல்ல பாக்டீரியாக்கள் மற்றும் ஈஸ்ட் போன்றவை ஜீரணம் சிறப்பாக நடைபெறவும், ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப் படவும் உதவி புரிகின்றன.
3. கஞ்சி: இது வட இந்தியர்களின் பாரம்பரிய பானங்களில் ஒன்று. கருப்பு நிற கேரட், கடுகு விதைகள் மற்றும் தண்ணீர் கலந்து தயாரிக்கப்படுகிறது. இதில் நிறைந்துள்ள புரோபயாட்டிக்குகள் இரைப்பை குடல் உறுப்புகளை சுத்தப்படுத்தவும் சிறப்பான ஜீரணத்திற்கும் உதவி புரிகின்றன.
4. ரைஸ் கஞ்சி: இது இரவில் சமைத்து மீந்துபோன சாதத்தில் தண்ணீர் மற்றும் மோர் ஊற்றி இரவு முழுவதும் வைத்து காலையில் கரைத்து கஞ்சியாக்கி குடிக்கப்படுகிறது. இந்தியாவின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இது பிரபலம். இதிலுள்ள நல்ல பாக்டீரியாக்கள் குடல் இயக்கங்களை அமைதிப்படுத்தவும், குடலிலுள்ள பாக்டீரியாக்களின் அளவை சமநிலைப்படுத்தவும் உதவுகின்றன.
5.குவாஸு (KVASS): இது ரை (Rye) பிரட்டை கொஞ்சமாக நொதிக்க வைத்து தயாரிக்கப்படும் பானமாகும். இதன் பிறப்பிடம் கிழக்கு யூரோப் ஆகும். இது இரைப்பை குடல் உறுப்புகளை சுத்தப்படுத்தவும், குடலிலுள்ள பாக்டீரியாக்களின் அளவை சமநிலைப்படுத்தவும் உதவுகிறது.
6. பட்டர் மில்க் அல்லது ச்சாஸ்: இது தயிரில் தண்ணீர் மற்றும் உப்பு, பெருங்காயம், இஞ்சி, மல்லி இலை போன்ற ஸ்பைஸஸ் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இது குடலை குளிர்விக்கும் தன்மை கொண்டது. இதிலுள்ள புரோபயாட்டிக்குகள் செரிமானம் சிறப்படையவும், கட் ஃபுளோரா (Gut Flora) விற்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்கித் தரவும் உதவுகின்றன.
7.லஸ்ஸி: புளித்த யோகர்ட்டிலிருந்து தயாரிக்கப்படும், புத்துணர்ச்சி ஊட்டக்கூடிய இந்திய பானம். இது உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து அருந்தப்படுகிறது. இதிலுள்ள புரோபயாட்டிக்குகள் ஜீரணத்தை மேம்படுத்துகின்றன. வயிற்றிலுள்ள வீக்கங்களை நீக்கவும், ஒட்டுமொத்த குடல் இயக்கங்கள் இயற்கை முறையில் ஆரோக்கியம் பெறவும் உதவி புரிகின்றன.
8. ஜிஞ்சர் பக் சோடா: இது நொதிக்கச் செய்த இஞ்சிச் சாறு, சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. நுரைத்து வரும் புரோபயாட்டிக்குகள் நிறைந்த இந்த பானம் குடல் இயக்க ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வயிற்றை அமைதிப்படுத்தவும், ஜீரணம் நல்ல முறையில் நடைபெறவும் உதவி புரிகிறது.