
குறும்புகளும் அற்புதங்களும் நிறைந்த செல்லக் கண்ணனின் கதைப்பாடல் இதோ!
சின்னச் சின்னக் கண்ணனாம்
சிவந்த உதட்டுக் கண்ணனாம்
பீலி தலையில் சூடிய
பெருமை மிக்க கண்ணனாம்.
ஓரிடத்தில் பிறந்தவன்
வேறிடத்தில் வளர்ந்தவன்
யாரிடத்தும் வேற்றுமை
பார்த்திடாத மாலவன்!
ஆலிலையில் படுத்தவன்
அரவிலாட்டம் போட்டவன்
மாலவனாம் கண்ணன்போல்
மகிமையுள்ளோர் இல்லையே!
பார்த்தனுக்குச் சாரதி!
பாசத்திலே வாரிதி
ஆர்க்குமந்த பற்கடலின்
அன்பு பொழியும் மாநிதி!
மாடு கன்று மேய்த்தவன்
மன்னனாயுமிருந்தவன்
தேடு கின்ற இதயங்களின்
தேவை தீர்த்து வைப்பவன்!
மலையைக் குடையாய்த் தூக்கியே
மழையிலிருந்து காத்தவன்
ஆயர்பாடி மக்களின்
அல்லல் குறைகள் தீர்த்தவன்
கண்ணன் தன்னை வணங்கினால்
கவலை வறுமை போக்கலாம்
எண்ணம் செயல் யாவிலுமே
தூய்மை வரப் பார்க்கலாம்!