

செல்வத்தின் அப்பா முருகன், கழிவுநீர் அகற்றும் வாரியத்தில் களப்பணியாளராக வேலை செய்து வருகிறார். இக்காலத்தில் இயந்திரங்களைக் கொண்டு கழிவுநீர் அகற்றினாலும், இன்னும் பல இடங்களில் மனித ஆற்றல் கொண்டே இந்த வேலை நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் முருகனின் களப்பணி மகத்தானது. அவர் தன்னுடைய பணியை அர்ப்பணிப்புடன் செய்வதைக் கண்டு பலரும் பாராட்டினர்.
முருகனின் மகன் செல்வம், அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். அவனுடன் சேர்ந்து படிக்கும் ராகவனின் தூண்டுதலின் பேரில், சக மாணவர்களும் அவனை, அவன் அப்பாவின் வேலையைக் கேலி செய்து பேசுவார்கள். அப்போது செல்வத்தின் மனம் வேதனைப்படும். ஆனாலும் அவன் படிப்பில் கவனம் செலுத்தி, நன்கு படித்து, முதல் மதிப்பெண் பெற்று வந்தான்.
அதிலும், செல்வத்தை அதிகம் கிண்டல் செய்து ரசித்தான் ராகவன். தன்னுடைய அப்பா வங்கியில் வேலை செய்வதால், இறுமாப்பு அவனிடம் தலைதூக்கிக் காணப்பட்டது.
ராகவன் வீட்டில், அவனுடைய அம்மா அடுப்படியில் வேலை செய்து கொண்டே ஏதோ முணுமுணுத்தாள். அதைக் கேட்ட ராகவன், "என்ன ஆச்சு அம்மா உனக்கு? ஏதோ புலம்பிக்கிட்டே இருக்கே?" என்றான்.
"குப்பை வண்டிக்காரன் நாலு நாளா வரலை. குப்பை சேர்ந்து, துர்நாற்றம் வீசுது. 'ஏண்டா வரலை'ன்னு கேட்கவும் பாவமா இருக்கும். எல்லோர் வீட்டுக் குப்பையையும் சுமந்துகிட்டு, துர்நாற்றத்தையும் சகிச்சுகிட்டு... என்னதான் அரசாங்க வேலைன்னாலும், இந்த மாதிரி பொதுச்சேவை செய்யும் இவர்கள் தெய்வத்துக்குச் சமம்," என்றாள் அம்மா.
அம்மாவின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் ராகவன் காதுகளில் விழும் போது, செல்வத்தின் அப்பா ஞாபகம் வந்தார். 'பாவம், அவர் செய்யும் வேலையும் பொதுச்சேவைதானே! அவருடைய வேலையைப் பற்றிச் செல்வத்திடம் கிண்டல் செய்ததும், அவனை அருவருப்பாகப் பார்த்ததும் எவ்வளவு கீழ்த்தரமான செயல்!'
தவறை உணர்ந்தவுடன், மனது சுத்தமானது. அவன் கண்களில் நீர்த்துளிகள் வெளிப்பட்டு சிதறின. தன்னுடைய தீய எண்ணங்கள் விலகியதால், அவனிடத்தில் செல்வத்தின் மீது மதிப்பு உயர்ந்தது. அதோடு, "செய்யும் தொழிலே தெய்வம்" என்றும் நினைத்துக் கொண்டான்.