

ஒரு கிராமத்தில் இருந்த அப்பாவி மருத்துவர் கைராசியற்றவர் என்ற பெயர் எடுத்திருந்தார். இதனால் நோயாளிகள் பலரும் அவரிடம் சிகிச்சைக்கு வருவதில்லை. எப்போதாவது ஓரிருவர் வருவதோடு சரி. வேலை சரிவர இல்லாததால் அவர் பெரும்பாலான நேரங்களிலும் கிராமத்தில் சுற்றித் திரிந்து பொழுதுபோக்கிக்கொண்டிருப்பார்.
ஒரு நாள் அவ்வாறு சென்றுகொண்டிருந்தபோது ஒரு நாய்க் குட்டி அவரை நோக்கி 'பொவ் பொவ்' எனக் குரைத்து வந்தது. குழந்தைகள் கூட அதைப் பார்த்தால் பயப்படாது. சூ… என்று முடுக்கிவிட்டிருந்தால் தலைதெறிக்க ஓடிப் போயிருக்கும்.
ஆனால், மருத்துவர் அதைக் கண்டு அஞ்சி நடுங்கினார். அவரது பயத்தைக் கண்டு குஷியான குட்டி நாய், கடித்துக் குதறிவிடுவது போல பூச்சாண்டி காட்டிக்கொண்டு பாய்ந்து வந்தது. அப்புராணி மருத்துவர் அலறி ஓடினார்.
ஓடுகிறவர்களைக் கண்டால் நாய்கள் கொண்டாட்டமாகித் துரத்தும். அந்த நாய்க் குட்டியும் படு குஷியாகி அவரைத் துரத்தலாயிற்று. அவரும் அலறியபடியே தெருக்களிலும் சந்துகளிலும் முட்டி ஓடினார். நாய்க் குட்டியும் விடாது துரத்தியது. நாய்க்குட்டிக்கு பயந்து அவர் அலறி ஓடுவது ஊராருக்கு நல்ல வேடிக்கையாயிற்று. பெரியவர்கள் கெக்கலித்துச் சிரித்தனர். குழந்தைகளும் சிறார்களும் கைகொட்டிக் குதித்து சிரித்து மகிழ்ந்தனர்.
நாய்க் குட்டி விடாமல் துரத்திக்கொண்டே இருந்தது. அதனிடமிருந்து தப்பிப்பதற்காக ஒரு மரத்தில் ஏறிவிட்டார் மருத்துவர். சற்று நேரம் அண்ணாந்து அவரைப் பார்த்துக் குரைத்துக்கொண்டிருந்த நாய்க் குட்டி திரும்பிச் சென்றுவிட்டது.
‘அப்பாடா…! பயங்கரமான நாயிடமிருந்து தப்பித்துவிட்டோம்!’ என நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொண்டு கீழே பார்த்தவர் மீண்டும் பேரச்சத்திற்குள்ளானார்.
காரணம் அவர் அந்த உயரமான மரத்தின் உச்சாணிக்கே சென்றுவிட்டிருந்தார். அங்கிருந்து கீழே இறங்க அவரால் இயலவில்லை. கைகளும் கால்களும் நடுங்கின.
என்ன செய்வது? எப்படியாவது இறங்கித்தானே ஆக வேண்டும்! நடுங்கிக்கொண்டே தட்டுத் தடுமாறி இறங்கினார். ஒரு வழியாக தரையை அடைந்ததும்தான் போன உயிர் திரும்பி வந்தது போல நிம்மதி. கை, கால்களில் நடுக்கம் நின்றது.
அதற்குப் பிறகுதான் தனது பார்வையில் ஏதோ கோளாறு இருப்பது கவனத்துக்கு வந்தது. வலது கண் தெரியவில்லை. கண்ணுக்கு என்னாயிற்று என்று தொட்டுப் பார்த்தார். அங்கே கண்ணே இல்லை!
பலத்த அதிர்ச்சிக்குள்ளானவர், ஒரு கண்ணைத் தொலைத்துவிட்டோமே என்று பதறினார்.
அவருக்கு தனது ஒரு கண் பறிபோனது பற்றியோ, பார்வைக் குறைபாடு ஏற்பட்டதை பற்றியோ அவ்வளவாகக் கவலையில்லை. ஏற்கனவே கைராசியற்றவர் என்று தொழில் பாதிப்பு. இப்போது ஒரு கண் இழந்ததையும் கிராமவாசிகள் அறிந்தால் தனது மதிப்பு இன்னும் குறைந்துவிடுமே என அஞ்சினார்.
எப்படியாவது கண்ணைத் தேடிக் கண்டுபிடித்தாக வேண்டும் என்று மரத்தடியிலும், தான் வந்த வழியிலும் மீண்டும் மீண்டும் தேடிக்கொண்டே இருந்தார். வெகு நேரத்திற்குப் பிறகு, புற்களுக்கிடையே அவரது கண் நழுவி விழுந்து கிடப்பது தெரிந்தது. விரைந்து அதை எடுத்துக்கொண்டார். சுற்றுமுற்றும் பார்த்து, யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, அவசர அவசரமாக கண்ணைப் பொருத்திக்கொண்டார்.
கண் நிலையாகப் பொருந்திக்கொண்டது. ஆனால் அவசரத்தில் அவர் ஒரு தவறு செய்துவிட்டார். கண் வெளியே பார்த்தபடியாக இல்லாமல், உள்ளே பார்த்தபடியாக வைத்துவிட்டார்.
அதனால் அந்த வலது கண்ணால் இப்போது வெளியே பார்க்க முடியவில்லை அதற்கு மாறாக அவரது உடலுக்குள் உள்ளவற்றை எல்லாம் அந்த கண் மூலம் நன்றாகப் பார்க்க முடிந்தது.
‘நாய்க்குப் பயந்து ஓடி வரும்போது கண்ணை நழுவவிட்டது போல, இப்போது அவசரத்தில் கண்ணைத் தவறாகப் பொருத்திவிட்டேனே…! இனி என்ன செய்வது?’ என்று வருந்தினார்.
வேறு வழியில்லை. பொருந்தியது பொருந்தியதுதான்.
ஆனால், அந்தக் கண் மூலமாக அவரது உடலுக்குள் உள்ள இதயம், கணையம், கல்லீரல், மண்ணீரல், நுரையீரல், சிறுகுடல், பெருங்குடல், சிறுநீரகம், நரம்புகள், எலும்புகள், ரத்த ஓட்டம், அனைத்தையும் அவரால் பார்க்க முடிந்தது.
அது மட்டுமல்ல. சாதாரண கண் பார்வைக்குப் புலப்படாததும், நுண்ணோக்கியில் மட்டுமே தென்படக் கூடியதுமான ரத்த அணுக்கள், நோய்க் கிருமிகள் ஆகியவற்றையும் தெளிவாகப் பார்க்க முடிந்தது.
இதனால் உடல் உறுப்புகள் செயல்படும் விதம், அவற்றுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள், நோய்க் கிருமிகளின் செயல்பாடுகள் யாவற்றையும் அனுபவபூர்வமாக நன்றாக அறிந்துகொண்டார்.
அதனால் நோயாளிகள் எந்த நோய் என்று வந்தாலும் அவரால் அதை எளிதாக குணப்படுத்த முடிந்தது. இதனால் திறமையான மருத்துவர் என்றும் கைராசிக்காரர் என்றும் பெயரெடுத்தார். நகரங்களில் உள்ள பெரிய மருத்துவமனைகளிலேயே குணப்படுத்த முடியாத வியாதிகளைக் கூட குணப்படுத்தினார். அவரது புகழ் நகரங்களுக்கும் பரவி, அங்கிருந்தும் நோயாளிகள் வரலாயினர்.
விரைவில் அவர் பணக்காரர் ஆனதோடு, கிராமத்திலேயே பல அடுக்கு மாடி மருத்துவமனையும் கட்டிக்கொண்டார்.
மருத்துவமனை வாசலில் ஒரு குட்டி நாயின் சிலையையும் வைத்தார். அதைப் பற்றி விசாரிப்பவர்களுக்கு, “அதுதான் எனக்கு வரமளித்த கடவுள்” என்று நன்றியுணர்வோடு பதிலளிப்பார்.