மகாகவியின் 'ஓடி விளையாடு பாப்பா' - பாடல் பிறந்த கதை!

Odi vilayadu pappa
Odi vilayadu pappa
Published on

மகாகவி பாரதியார் தேசப்பற்று நிறைந்த கவிதைகளை ஏராளமான அளவில் எழுதியிருந்தாலும் குழந்தைகளுக்காக “ஓடி விளையாடு பாப்பா” எனும் பாடலையும் எழுதியுள்ளார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்த பாடலை மகாகவி பாரதி புதுச்சேரியில் வாழ்ந்த காலத்தில் எழுதினார். இந்த பாடல் பிறந்த சூழ்நிலையினை நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பாரதியார் புதுச்சேரியில் வாழ்ந்த காலத்தில் இந்தியா பத்திரிகையின் ஆசிரியராக பணியாற்றி வந்தார். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இந்தியா பத்திரிகையிலிருந்து பாரதியார் விலக நேரிட்டது. இதன் பின்னர் சூர்யோதயம் எனும் பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். சூர்யோதயம் பத்திரிகையின் அலுவலகம் புதுச்சேரியில் வெள்ளாளர் வீதியில் இருந்தது. அப்போது அந்த வீதியில் வாழ்ந்து வந்த கிருஷ்ணசாமிப் பிள்ளை என்பவர் பாரதியாரின் நண்பரானார்.

ஒருநாள் பாரதியார் கிருஷ்ணசாமிப்பிள்ளையுடன் அவருடைய வீட்டில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வீட்டின் மாடியில் ஒரு சிறிய பெண் தடதடவென்று ஓடிய சத்தம் கேட்டது. உடனே கிருஷ்ணசாமிப் பிள்ளை கீழேயிருந்தபடியே குரல் கொடுத்தார்.

“ஓடாதே பாப்பா விழுந்துடப்போறே”

அதற்கு அந்த சிறு பெண் மாடியிலிருந்தே பதிலளித்தாள்.

“காக்கா கையிலே இருக்கிற ஆப்பத்தை பிடுங்க வருதுப்பா”

“சரி சரி கீழே இறங்கி வா பாப்பா”

பாரதியார் கிருஷ்ணசாமிப்பிள்ளையிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு தன்னுடைய வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்படித் திரும்பி வரும் வேளையில் அவருடைய மனதில் குழந்தைகள் ஓடி விளையாடினால் தானே நல்லது. பின் ஏன் கிருஷ்ணசாமிப்பிள்ளை குழந்தையை ஓடாதே பாப்பா என்று சொல்லுகிறார் என்று யோசித்தபடியே வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.

தன்னுடைய வீட்டை நெருங்கியதும் ஓடி விளையாடு பாப்பா என்று மனதுள் முணுமுணுத்தபடியே வீட்டிற்குள் நுழைந்தார். அவருடைய வீட்டின் வாசல் திண்ணையில் குழந்தை சகுந்தலா சோர்வாக உட்கார்ந்திருப்பதைக் கண்டார். உடனே பாரதி “ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா” என்று பாடிய படியே தனது குழந்தை சகுந்தலாவை தூக்கி தனது தோளில் சுமந்து கொண்டு வீட்டிற்குள் சென்றார். வீட்டிற்குள் சென்றதும் முதல் வேலையாக 'ஓடி விளையாடு பாப்பா' என்று தொடங்கும் அருமையான குழந்தைப்பாடலை முழுவதுமாக எழுதி முடித்தார்.

இதையும் படியுங்கள்:
பாரதியார் இறப்பில் உள்ள உண்மை காரணம் - முண்டாசு கவி பாரதியார் நினைவு தினம்!
Odi vilayadu pappa

ஓடி விளையாடு பாப்பா – நீ

ஓய்ந்திருக்க லாகாது பாப்பா

கூடி விளையாடு பாப்பா – ஒரு

குழந்தையை வையாதே பாப்பா

சின்னஞ் சிறுகுருவி போலே – நீ

திரிந்து பறந்துவா பாப்பா

வண்ணப் பறவைகளைக் கண்டு – நீ

மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா

காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு

கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு

மாலை முழுதும் விளையாட்டு – என்று

வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா

இதையும் படியுங்கள்:
பாரதியாரின் தன்னம்பிக்கை வரிகள்!
Odi vilayadu pappa

பாரதி தன் இளைய புதல்வி சகுந்தலாவின் மேல் அளவு கடந்த பிரியம் வைத்திருந்தார். சகுந்தலாவை எப்போதும் பாப்பா பாப்பா என்றே அழைப்பார். சகுந்தலாவிற்காக பாரதி பாடிய பாடல்தான் பாப்பா பாட்டு. இப்பாடல் சுப்பிரமணிய சிவா அவர்கள் நடத்தி வந்த “ஞானபாநு” இதழில் மார்ச் 1915 தேதியிட்ட இதழில் பிரசுரிக்கப்பட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com