சிறுவர் சிறுகதை: அமுதன் கற்ற பாடம்..!

Amudhan and butterfly
Amudhan and butterfly Tamil children's short storyImg credit: AI Image
Updated on

​ஒரு அழகான கிராமத்தில் அமுதன் என்ற சிறுவன் வசித்து வந்தான். அவன் இயற்கையை நேசிப்பவன். அவனது வீட்டின் பின்புறம் ஒரு சிறிய தோட்டம் இருந்தது. அங்கு செடி, கொடிகளைப் பராமரிப்பதில் அவனுக்குப் மட்டற்ற மகிழ்ச்சி. 

ஒரு நாள், ஒரு செடியின் இலையில் ஒரு விசித்திரமான கூட்டைக் கண்டான். அது ஒரு வண்ணத்துப்பூச்சியின் கூட்டுப்புழு (Cocoon).
அந்தக் கூட்டிற்குள் ஏதோ ஒரு உயிர் துடித்துக்கொண்டிருப்பதை அவன் கவனித்தான். சில நாட்களாக அதை உற்றுப் பார்த்துக்கொண்டே இருந்தான். ஒரு நாள், அந்தக் கூட்டின் ஒரு முனையில் ஒரு சிறிய துளை விழுந்தது. அதற்குள் இருந்த வண்ணத்துப்பூச்சி வெளியே வரப் போராடிக் கொண்டிருந்தது.
அமுதன் நீண்ட நேரம் அமர்ந்து கவனித்தான். அந்தச் சிறிய துளை வழியாக வண்ணத்துப்பூச்சியால் வெளியே வர முடியவில்லை. அது தவிப்பதையும், சிறகுகளை அசைக்க முடியாமல் திணறுவதையும் கண்டு அமுதன் வருந்தினான். "பாவம், இதற்குத் தன்னால் வெளியே வரத் தெரியவில்லை போலிருக்கிறது. நான் உதவி செய்கிறேன்" என்று நினைத்தான்.

உடனே ஒரு சிறிய கத்தரிக்கோலை எடுத்து வந்து, அந்தக் கூட்டின் வாசலைச் சற்றுப் பெரிதாக வெட்டிவிட்டான். இப்போது வண்ணத்துப்பூச்சி மிக எளிதாக வெளியே வந்துவிட்டது. ஆனால், அமுதன் கண்ட காட்சி அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. வெளியே வந்த வண்ணத்துப்பூச்சியின் உடல் வீங்கியிருந்தது; அதன் சிறகுகள் மிகவும் சுருங்கி, ஒட்டிப் போயிருந்தன. அது பறக்கும் என்று அமுதன் ஆவலோடு காத்திருந்தான். ஆனால், அந்த வண்ணத்துப்பூச்சியால் ஒரு அங்குலம் கூடப் பறக்க முடியவில்லை. அது தரையிலேயே ஊர்ந்து கொண்டிருந்தது. சிறிது நேரத்திலேயே அதன் உயிர் பிரிந்தது. 

இதையும் படியுங்கள்:
மரணமே இல்லாத மெக்சிகோவின் சிரிக்கும் மீன்: இதயத்தையும் மூளையையும் மீண்டும் வளர்க்கும் மர்மம்!
Amudhan and butterfly

அமுதன் அழுதுகொண்டே தன் தாத்தாவிடம் ஓடினான். நடந்ததைச் சொன்னான். தாத்தா அவனை அருகில் அமர வைத்து மென்மையாகச் சொன்னார்: "அமுதா, நீ உதவி செய்வதாக நினைத்து அந்த உயிரைக் கொன்றுவிட்டாய். இயற்கை ஏன் அந்த வண்ணத்துப்பூச்சியை அத்தனை சிறிய துளை வழியாகப் போராடி வரச் சொல்கிறது தெரியுமா? அந்தப் போராட்டத்தின் போதுதான், அதன் உடலில் உள்ள திரவம் சிறகுகளுக்குள் பாயும். அந்தத் தள்ளுதல் மற்றும் நெருக்கடிதான் அதன் சிறகுகளைப் பலப்படுத்தும். அந்தப் போராட்டம் இல்லாமல் போனால், அதன் சிறகுகள் பறக்கத் தகுதியற்றதாகிவிடும்."

தாத்தா தொடர்ந்தார், "வாழ்க்கையில் கஷ்டங்களும் போராட்டங்களும் நமக்குத் தேவையில்லை என்று நாம் நினைக்கிறோம். ஆனால், அவைதான் நம்மைப் பலப்படுத்துகின்றன. ஒரு சிறுவன் தன் பாதையில் வரும் கற்களைத் தானே நகர்த்தக் கற்றுக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் அதைச் செய்து கொடுத்தால், அவன் நடக்கவே பழக மாட்டான்," என்றார்.

என்ன குட்டீஸ் தாத்தா சொன்னது புரிந்ததா?

நமது வாழ்க்கையில் வரும் தடைகள் நம்மைத் தடுப்பதற்கல்ல, நம் சிறகுகளைப் பலப்படுத்துவதற்கே. வலி இல்லாமல் வளர்ச்சி இல்லை. மற்றவர்களின் உதவி ஒரு எல்லை வரைதான் கை கொடுக்கும். நம்முடைய எல்லையை நாமே தாண்ட வேண்டும். கஷ்டங்கள் இல்லாமல் கிடைக்கும் வெற்றி, பறக்கத் தெரியாத வண்ணத்துப்பூச்சியைப் போன்றது. அது நீண்ட காலம் நிலைக்காது.

logo
Kalki Online
kalkionline.com