

ஒரு அடர்ந்த காட்டில் ஒரு வாரமாக மற்ற விலங்குகள் அனைத்தும் கவலையாக இருந்தன. அதற்குக் காரணம் காட்டின் மிகப் பெரிய சிங்கராஜா குகையை விட்டு வெளியே வராததுதான்.
ஒரு மலைப்பகுதியைச் சுற்றிப் பார்க்க சென்ற சிங்கம், கூழாங்கல் மீது கால் வைத்த போது சறுக்கி கால் சுளுக்கியதால் காலை ஊன்ற முடியாமல் வலியால் துடித்தது. அதனால் குகைக்குள் படுத்துக் கொண்டது.
தங்கள் ராஜா இப்படிப் படுத்தே இருப்பதைப் பார்த்து மற்ற விலங்குகளுக்கு வருத்தம் ஏற்பட்டது. காட்டு மருத்துவரான கரடி பச்சிலைச் சாற்றை சுளுக்கின் மீது தடவியது. தடவியதும் வலி பொறுக்க முடியாத சிங்கம் கோபத்தில் கரடியை விரட்டியது.
அடுத்து புலியும் தனக்குத்தெரிந்த மருந்தை கொண்டு சென்று
தடவியது. சிங்கத்தால் வலியை தாங்க முடியவில்லை புலியை ஓங்கி உதை விட்டது. தப்பித்தால் போதும் என்று ஓடிவிட்டது புலி.
"கால் சுளுக்கை குணமாக்க நாம் இருவரும் மருத்துவம் செய்யப் போனா, சிங்க ராஜா இப்படி நம்மை அடித்து விரட்டுகிறாேரே" என்று கரடியும் புலியும் பேசிக்கொண்டன.
"சிங்கராஜா, இப்படி மருத்துவம் செய்ய மறுத்தால் எப்படி சுளுக்கு நீங்கும்?" என்று மற்ற விலங்குகள் பேசிக்கொண்டன. இனி எழுந்து நடப்பது கடினம் தான் என்று முடிவுக்கு வந்தன.
காட்டில் இருந்த ஒரு புத்திசாலியான குரங்கு நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தது. இதற்கு ஒரு முடிவு கட்டும் விதமாக சிங்கத்தின் குகை வாயிலுக்கு சென்றது.
"சிங்கராஜா உங்களால் எழுந்து நடக்க முடியவில்லையாமே, உங்களை கண்டதும் வணக்கம் சொல்லவில்லை என்றால் என் மீது எப்படி கோபப்படுவீர்கள்? இன்று நான் உங்களுக்கு வணக்கம் சொல்லவில்லை பார்த்தீர்களா?" என்று கேட்டது.
குரங்கு சொல்வதைக்கேட்டு சிங்கத்துக்கு கோபம் வந்தது. அது படுத்தபடியே "என்ன குரங்கே வாய் ரொம்ப நீள்கிறது? உன்னை என்ன செய்கிறேன் பார்" என்று கர்ஜித்தது.
இதைக்கேட்டு குரங்கு சிரித்தது.
"சிங்கராஜா, அதெல்லாம் அந்த காலம். இப்போது என் வாய் மட்டும் இல்ல, கை கூட நீளும் பார்க்கறீங்களா? முன்பு நான் செய்த சிறு தவறுக்கும் எனக்கு தண்டனை கொடுத்தீங்க. அதுக்கு பழி வாங்க இப்போதுதான் நல்ல நேரம் வந்திருக்கிறது" என்ற குரங்கு, சிங்கத்தின் முன்னங்காலில் ஒரு அடி கொடுத்தது.
கோபமடைந்த சிங்கம், குரங்கை உதைப்பதற்காக காலை நீட்டியது. ஆனால் முழுவதுமாக நீட்ட முடியவில்லை.
"குரங்கே என்னிடமே உன் வேலையை காட்டுகிறாயா? நான் எழுந்தேன் என்றால் உன்னை என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது. இங்கிருந்து ஓடி போய் விடு" என்று கர்ஜித்தது சிங்கம்.
"என்ன சொன்னீங்க? எழுந்து வந்து என்னை அடிக்க போறீங்களா முதலில் எழுந்து நிற்க முடியுமா? என்று பாருங்கள்" என்று கேலியாக சிரித்து சொன்ன குரங்கு, மீண்டும் சிங்கத்தின் காலில் ஒரு அடி கொடுத்தது.
இனிமேல் பொறுக்க முடியாது என்று முடிவுக்கு வந்த சிங்கம், சிரமப்பட்டு எழுந்து நின்றது. குரங்கை நோக்கி காலை உதைத்தது. சுதாரித்துக்கொண்ட குரங்கு சட்டென்று அங்கிருந்து ஓடிவிட்டது.
சிங்கம் எழுந்து நின்றபடியே இருந்தது. சிறிது நேரம் கழித்து, குரங்கு திரும்பி வந்தது.
"சிங்கராஜா இனி உங்களால் என்னை ஒண்ணும் செய்ய முடியாது. இனி நான் தான் இந்த காட்டுக்கு ராஜா" என்று சிரித்துக் கொண்டே சொன்னது குரங்கு.
"இனி உன்னை விடமாட்டேன்" என்று சொல்லிக் கொண்டே குரங்கு நோக்கி பாய்ந்தது சிங்கம்.
சற்று தூரம் ஓடிய குரங்கு சட்டென்று விலகி ஓடியது. கடும் கோபத்தில் இருந்த சிங்கம் குரங்கை துரத்தியது. குரங்கும் சிங்கத்தின் பிடியில் அகப்படாமல் ஓடியது. குரங்கை துரத்திய சிங்கமும் விடாமல் ஓடிக்கொண்டே இருந்தது.
சற்று தூரம் ஓடிய குரங்கு, உயர்ந்த மரத்தின் மீது ஏறி உச்சி கிளையில் அமர்ந்து கீழே பார்த்தது. சிங்கம் மரத்தடியில் நின்றபடியே "குரங்கே இப்படி கீழே இறங்கி வரத்தானே செய்வாய். அப்பொழுது உன்னை என்ன செய்கிறேன் பார்" என்று கர்ஜித்தது.
உடனே குரங்கு, "என்னை மன்னிக்க வேண்டும் ராஜா உங்கள் காலில் சுளுக்கு ஏற்பட்டு, ஒரு வாரமாக குகைக்குள்ளேயே படுத்து கிடந்தீங்க, இப்ப என்னை துரத்தியபடி எவ்வளவு தூரம் ஓடி வந்திருக்கீங்க?உங்கள் காலில் உள்ள சுளுக்கும் குணமாகிவிட்டது என்று நினைக்கிறேன். அதுக்காகத்தான் உங்களை இப்படி வம்புக்கு இழுத்தேன். ஓடி வர செய்தேன்" என்று பணிவாக சொன்னது குரங்கு.
"ஆமாம்! சுளுக்கு நீங்கி விட்டேதே" என்று நினைத்து சிங்கம் குரங்கை அண்ணாந்து பார்த்தது.
"உங்களை மதிக்காமல் பேசியதற்காக என்னை மன்னித்து விடுங்கள் நீங்கள் எழுந்து நடமாட முடியாமல் படுத்து கிடப்பது எனக்கு வருத்தமாக இருந்தது. உங்களை நடக்க வைக்கவே இப்படி ஒரு திட்டம் போட்டேன். அது நன்றாக வேலை செய்து விட்டது .
இனி நீங்கள் முன்பு போல் கம்பீரமாக இந்த காட்டில் நடந்து செல்லலாம்" என்றது குரங்கு.
குரங்கின் நல்ல மனதை புரிந்து கொண்ட சிங்கம், "நீ எந்த தவறும் செய்யவில்லை நான் உண்மையை புரிந்து கொண்டேன்.
உன் மீது கோபம் இல்லை. உனக்கு நன்றி தான் சொல்லணும்" என்றது.
"உனக்கு பரிசாக வாழைப்பழங்களை நாளை அனுப்பி வைக்கிறேன் என் அன்பை ஏற்றுக் கொள்" என்று கூறிவிட்டு கம்பீரமாக நடந்து சென்றது சிங்கம்.
குரங்குக்கு இதைக் கேட்டதும் மகிழ்ச்சி ஏற்பட்டது.
குட்டீஸ்.... ஒருவர் நமக்கு உதவி செய்தால் அவர்களுக்கு நன்றி சொல்லி பாராட்ட வேண்டும்.
இனிசெய்வீர்கள் தானே!