சிறுவர் சிறுகதை: சிங்கம் ஏன் ராஜாவாக இருக்கிறது?

Lion
Lion
Published on

கரடி பியரோ மிகுந்த மகிழ்ச்சியோடு “ராஜா... ராஜாதி ராஜன் இந்த ராஜா” என்று பாடியபடியே நடந்து சென்று கொண்டிருந்தது. எதிரே வந்து கொண்டிருந்த நரி நட்டு, இதைப் பார்த்துத் துணுக்குற்றது.

“என்னடா பியரோ. என்ன ரொம்ப குஷியா பாடிகிட்டிருக்கே. ராஜா அது இதுன்னு பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்லி பாடறே?”

“இந்த காட்டுக்கு நான் ராஜாவாகப் போறேன்!”

“அது எப்படி உன்னாலே ராஜாவாக முடியும்? இந்த காட்டைப் பொறுத்த வரைக்கும் சிங்கம்தான் எப்பவுமே ராஜா. இப்ப கூட அவருக்கு வயசாயிடுச்சு இல்லே. அவரோட வாரிசை ராஜாவாக்கணும்னு பேசிகிட்டிருக்கிறதா கேள்விப்பட்டேன்”

நரியன் நட்டு தன் மனதில் பட்டதை போட்டு வைத்தான். அப்போதுதானே பிரச்னை உருவாகும்!

“அதெப்படி? சிங்கமே எப்பவும் ராஜாவா இருக்கணும்னு ஏதாவது சட்டமா என்ன? கொஞ்ச நாளைக்கு நான் ராஜாவா இருக்கேனே.”

“நீ மட்டும் சொன்னா எப்படி? இந்த காட்டிலே இருக்கிற எல்லார்கிட்டேயும் போய் நியாயம் கேளு. நானும் உனக்கு பக்கபலமா இருக்கேன்.”

கரடி பியரோ மீண்டும் “ராஜா... ராஜாதி ராஜன் இந்த ராஜா” என்று பாடியபடியே உற்சாகமாக நடந்து சென்றது.

நரியன் நட்டு இப்போது மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஒரு பிரச்னை கையில் கிடைத்து விட்டது. இதை ஊதிப் பெரிதாக்க வேண்டியதுதான் என்று நினைத்துக் கொண்டே தன் நண்பனைச் சந்திக்கப் புறப்பட்டுச் சென்றது.

கரடி பியரோ பல விலங்குகளையும் சந்தித்து இந்த காட்டின் ராஜாவை மாற்ற வேண்டும் என்று ஆதரவு திரட்டியது. கரடி பியரோ ராஜாவாக ஆவதை எவரும் விரும்பவில்லை. சில விலங்குகள் மட்டுமே குழப்பத்துடன் ஆதரித்தன.

நரியன் நட்டு சிங்கராஜா லாயாவைச் சந்தித்து, கரடி பியரோவும் மற்ற விலங்குகளும் அதற்கு எதிராக சதித்திட்டம் தீட்டுவதாகச் சொன்னது.

ஒருநாள் சிங்கராஜா அனைத்து விலங்குகளையும் வழக்கமாகக் கூடும் இடத்தில் கூட வேண்டும் என்று கட்டளையிட, அனைத்து விலங்குகளும் அந்த இடத்தில் கூடின. ஒரு கர்ஜனை செய்த பின்னர் ராஜா லாயா பேசத் தொடங்கினார்.

“எல்லாருக்கும் வணக்கம். நான் இந்த காட்டுக்கு ராஜாவா பல வருஷங்களா இருக்கேன். இப்ப எனக்கு வயசாயிடுச்சு. அதனாலே இந்த காட்டுக்கு தகுதியான ஒருத்தரை ராஜாவா நியமிக்க நான் கடமைபட்டுள்ளேன். ஆனா கொஞ்ச நாளா இந்த காட்டிலே சிலர் நாங்களே ராஜாவா இருக்கணுமா அப்படின்னு எங்களைப் பார்த்து கேள்வி கேட்கறாங்கன்னும் கேள்விபட்டேன். காலம் காலமா அப்படித்தான் நடந்துகிட்டிருக்கு. இப்ப அதை மாத்தணும்னு விரும்பறீங்க. உங்க ஆசையும் நியாயமானதுதான். உங்கள்ள யார் வேணுமானாலும் இந்த காட்டுக்கு ராஜாவாகலாம்,” என்றது.

ராஜா லாயா இப்படிப் பேசுவார் என்று எவருமே நினைக்கவில்லை. அதனால் சற்று நேரம் மௌனம் நிலவியது.

“சரி. நீங்களே யார் ராஜாவாகணும்னு இப்பவே முடிவு பண்ணி சொல்லுங்க. எனக்கு பதிலா அவரை ராஜாவா நான் இப்பவே நியமிக்கிறேன். ஆனா அப்படிப்பட்டவரை உங்கள்லே ஒருத்தர் எதிர்த்தாக்கூட அவர் ராஜாவாக முடியாது.”

உடனே கரடி பியரோ எழுந்து “இந்த காட்டுக்கு ராஜாவாக நான் விரும்பறேன்,” என்று தெரிவித்துக் கொண்டது.

இதையும் படியுங்கள்:
சிறுவர் கதை - பொய்யால் வந்த வினை
Lion

“பியரோவை இந்த காட்டுக்கு ராஜாவா எல்லோரும் சம்மதிக்கிறீங்களா?”

உடனே சிலரிடமிருந்து ஆதரவும் பலரிடமிருந்து பலத்த எதிர்ப்பும் கிளம்பியது.

“சரி. அப்ப அடுத்ததா யார் ராஜாவாக விரும்பறீங்க?”

புலி டைகோ எழுந்து “நான் ராஜாவாக விரும்பறேன்” என்று சொன்னது.

ஆனால் டைகோ ராஜாவானால் இந்த காட்டில் உள்ள எல்லா விலங்குகளையும் அடித்துக் கொன்று தின்று விடும் என்று பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஒரு யானை எழுந்து “நான் ராஜாவாகப் போறேன்” என்றது.

காட்டிலிருந்து பல விலங்குகள் யானை பீம்ஸ் மிகவும் இளகிய மனது உடையவன். அவனால் துணிச்சலாக செயல்பட்டு இந்த காட்டைக் காப்பாற்ற முடியாது என்று தெரிவித்தன.

இப்படியே ஒவ்வொருத்தராக எழுந்து தான் ராஜாவாக விரும்புவதாகத் தெரிவிப்பதும் அதை பலர் எதிர்ப்பதுமாக நடந்து கொண்டே இருந்தது. இறுதியாக யாரும் யாரையும் முழுமையாக ஆதரிக்காததால் யாராலும் ராஜாவாக முடியவில்லை.

“உங்க விருப்பப்படியே யாரை வேணுமானாலும் ராஜாவா ஏத்துக்கறதா முடிவு பண்ணி உங்க ராஜாவை தேர்வு செய்யற பொறுப்பை உங்ககிட்டேயே விட்டேன். ஆனா உங்களாலே உங்க ராஜாவை தேர்வு செய்ய முடியலை. இதை நீங்க எல்லாரும் ஒப்புக்கறீங்களா?”

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை - 'அக்கா - அண்ணன் - தங்கை'
Lion

அனைவரும் மௌமாக நின்றார்கள்.

“சரி. இதை நீங்க அனைவரும் ஒப்புக்கறீங்க. அதனாலே நீங்க எல்லோரும் உங்க ராஜாவை முழுமனதா தேர்வு செய்யற வரைக்கும் என்னோட வாரிசு மிஸ்டர் லியன் அவர்களை இந்த காட்டுக்கு ராஜாவா இன்னையிலே இருந்து உங்க எல்லோரோட ஒப்புதலோட நியமிக்கிறேன். உங்க ராஜாவை நீங்க தேர்வு செய்து உங்க எல்லோரோட ஒப்புதலோட எப்ப வேணா கொண்டு வந்து என் முன்னாலே நிறுத்தலாம். அப்பவே மிஸ்டர் லியனை ராஜா பதவியிலே இருந்து நீக்கிட்டு நீங்க தேர்வு செய்தவரை நானே ராஜாவா இந்த காட்டுக்கு நியமிக்கிறேன். புது ராஜாவுக்கு வாழ்த்து சொல்லிட்டு எல்லோரும் கிளம்பி அவங்கங்க வேலைகளைப் பாருங்க.”

ராஜா லாயா இப்படிச் சொன்னதும் வேறு வழியின்றி கரடி பியரோ உட்பட அனைத்து விலங்குகளும் தங்கள் புது ராஜா மிஸ்டர் லியனை வாழ்த்தி விட்டுப் புறப்பட்டார்கள்.

இந்த புத்திக்கூர்மையினால்தான் சிங்கமே எப்போதும் காட்டுக்கு ராஜாவாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
சிறுவர் கதை: 'விளையாட்டு, விளையாட்டாதான் இருக்கணும்'
Lion

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com