

ஒரு வழியாக மன்னரின் கனவு பலித்து விட்டது.
ஒரு புலியை, அது இரையுண்டு தூங்கிக்கொண்டிருக்கும் போது, தான் மரத்தின் மேல் ஏறி, ஒரு கிளையில் அமர்ந்த படி குறி தவறாமல் சாமர்த்தியமாக அம்பை புலியின் வயிற்றில் விட்டு, அதை கொன்று பெருமையுடன் வீரர்கள் புடை சூழ நாட்டுக்கு வந்து சேர்ந்தார் சர்வ வல்லமை பொருந்திய மாமன்னர் மகுடபூபதி.
"மன்னர் புலியார்.. வாழ்க..! வாழ்க..!" என்ற மக்களின் கோஷத்தின் ஊடே மன்னர் மக்களுக்கு கை ஆட்டி அரண்மனைக்கு சென்று விட்டார்.
அந்த நாட்டு மரபுப்படி புலி வேட்டையாடிய மன்னர், மக்களுக்கு அறுசுவை விருந்து படைக்க வேண்டும். ஆகையால், "நாளை விருந்து" என்று அமைச்சர் அறிவிக்கவும் மக்கள் கூட்டம் பெரும் மகிழ்வுடன் கலைந்து சென்றது.
மறு நாள் பெரும் மக்கள் கூட்டம். அனைவருக்கும் அறுசுவை விருந்து வைக்கப்பட்டது. மக்கள் மிகுந்த மகிழ்வுடன் உண்டு மன்னர் புகழ் பாடி சென்ற போது, எதிர்பாராத திருப்பம். சிங்கம் தலைமையில் ஆயிரக்கணக்கான விலங்குகள் அரண்மனை நோக்கி வந்து கொண்டிருந்தன.
ஒருவன் தப்பித்து ஓடியபோது, சிங்கம் அவனை பிடித்து கவ்வியபடி அரண்மனை அருகில் போட்டது. அவன் விழுந்தடித்து அரண்மனைக்குள் ஓடினான்.
வெளியில் ஏதோ அசம்பாவிதம் என்று கேள்விப்பட்டு மன்னர் தன் புடைசூழ வந்தார். அப்போது அவர் உடல் நடுங்க ஆரம்பித்தது.
"யோவ்.. நீதான் மன்னரா" என்றதும், அவரும் "ஆம்" என்று தலையாட்டினார்.
"அது சரி.. நீ ஏதோ புலியை வேட்டையாடி கொன்றாயாமே. புலியை வேட்டையாடினால் உங்க நாட்டு மன்னர்களுக்கு அவ்வளவு பெருமையாமே. அதற்காக மக்களுக்கு அறுசுவை விருந்து வைப்பீர்களாமே. அப்படித்தானே..?" என்று சிங்கம் கோபத்துடன் கேட்க, மன்னர் நடுங்க ஆரம்பித்து விட்டார். உடன் அமைச்சர்தான் பதில் கொடுத்தார். "ஆம்..! புலி வேட்டை எங்கள் நாட்டின் பெருமை. அதை கொண்டாடுவதில் என்ன தவறு இருக்கிறது" என்று ஆணித்தரமாக கேட்டார்.
"ஓ.. அப்படியா? அப்ப உங்க மன்னர் புலியை வேட்டையாடித்தான் கொன்றாரா?"
"ஆம்.. அதில் என்ன சந்தேகம்?" என்றார் தளபதி.
"ஓ... அப்படி என்றால் இதோ நாங்கள் ஆயிரமாயிரம் விலங்குகள் இருக்கிறோம். அதோ இருக்கிறதே சிறிய விலங்கான முயல். அதை வேட்டையாடச் சொல்லுங்கள்" என்று கர்ஜித்தது சிங்கம்.
அமைச்சரும் தளபதியும் மன்னரை பார்த்தனர்; மன்னர் சுதாகரித்துக்கொண்டு பேசினார்.
"எங்கள் நாட்டு வழக்கப்படி புலியைத்தான் வேட்டையாடுவோமே ஒழிய, சிறிய விலங்கான முயலை எல்லாம் வேட்டையாடும் பழக்கம் எங்களிடம் கிடையாது. பாவம் அப்பாவி அந்த விலங்கு. அது பிழைத்துப்போகட்டும்" என்றதும் மக்கள் பலத்த கரவொலி எழுப்பி மன்னரை உற்சாகப்படுத்தினர்.
சிங்கமும் மற்ற விலங்குகளும் கடும் கோபம் கொண்டன. "அப்படி என்றால் எங்கள் காட்டின் சுண்டெலிகளை விட்டு உன்னை வேட்டையாடச் சொல்கிறேன். நீ தயாரா..?" என்று சொல்லவும் ஆயிரக்கணக்கான சுண்டெலிகள் அரண்மனைக்குள் படை எடுக்க தயாராக இருக்கவும், விலங்குகள் அனைத்தும் கம்பீரத்துடன் குரலிட்டு சிங்கத்தை உற்சாகப்படுத்தின.
"முடியாது.. காரணம் புலிவேட்டையாடும் மன்னனை எலி வேட்டையாடுவது ஏற்றுக்கொள்ள முடியாது" என்றான் மன்னன். அமைச்சரும் தளபதியும் அதை ஆமோதித்தனர்.
"சரி அப்படி என்றால் உங்கள் மன்னர் வேட்டையாடித்தானே புலியை கொன்றிருக்க வேண்டும். அதுதானே வேட்டையாடுவது என்பது. அதுதானே மன்னருக்கு அழகு."
"ஆம்..! இதில் என்ன சந்தேகம். எம் மன்னரும் அப்படித்தானே செய்திருக்கிறார்."
அனைத்து விலங்குகளும் கேலியுடன் குரலிட்டன.
"அமைச்சரே..! உம் மன்னர் இரையுண்டு நன்கு உறங்கிய புலியை ஒரு மரம் ஏறி கிளையில் மறைந்து அமர்ந்து கொண்டு கை நடுங்க சரியாக குறியிட்டு உறங்கிய புலியை கொன்றிருக்கிறார். இது கொலையே அன்றி வேட்டையல்ல. இதை கண்ணால் கண்ட சாட்சி" என்று சிங்கம் திரும்பி பார்க்கவும், ஒரு கருங்குரங்கு ஓடி வந்தது. "ஆம்.. நான் அப்போது மரத்தின் உச்சியில் இருந்து கவனித்தேன்" என்றது குரங்கு.
"மன்னரே என்ன சொல்கிறீர் நீ வேட்டையாடினீர் என்றால் நாங்கள் ஏற்க மாட்டோம். நீர் பொய் கூறியதாக கூறி நாங்கள் இப்போது உங்கள் அனைவரையும் எங்கள் வலிமைகொண்டு வேட்டையாடுவோம். நீர் ஒத்துக்கொண்டால் இப்போதே உமக்கு அதற்கான பரிசளித்து காட்டுக்கு சென்று விடுவோம்" என்றதும், அமைச்சர் மன்னரை பார்த்தார். தளபதி என்ன சொல்ல இருக்கிறார் மன்னர், என்று யோசித்தபடி பார்க்க, தன்னுடன் வந்த வீரர்களை பார்த்த மன்னர், வேறு வழியில்லாமல், "ஆம்.. உறங்கிய புலியைத்தான் நான் வேட்டையாடினேன்" என்று கூற அனைத்து விலங்குகளும் கேலியுடன் உரத்த குரலிட்டன.
அமைச்சரும் தளபதியும், "இது வேட்டையல்ல.." என்று கூறவும் தலையசைத்து ஆமோதித்த சிங்கம் மன்னர் மீது சுண்டெலியை விட்டு முத்தம் கொடுக்க சொல்லி கட்டளையிட அதுவும் மன்னர் மீது ஏறி கன்னத்தில் மாறி மாறி முத்தம் கொடுத்து பின் திரும்பியது.
மன்னருக்கு பெருத்த அவமானமாய் போனது. விலங்குகள் சிங்கராஜா தலைமையில் காட்டிற்கு திரும்பி சென்றன.
மக்கள் மன்னர் பொய் கூறியதை கேட்டு இப்படி ஒரு மன்னரா நமக்கு, என்று வேதனைப்பட்டு அறுசுவை விருந்தில் கலந்து கொண்ட அனைவரும் சாப்பாட்டுக்காக ஒரு பொற்காசை சாப்பிட்ட இலையின் கீழ் வைத்து விட்டு சென்றனர்.