

நாம் பேசும்போது சில பொருட்களை சுட்டி காட்டுகின்றோம். அப்படி சுட்டிக்காட்டும் போது சில வார்த்தைகளைக் கூறி சுட்டிக்காட்டுகின்றோம். அந்த வார்த்தைகளை நாம் எழுத்து வடிவில் எழுதும் போது அது சுட்டு எழுத்துகள் என்று அழைக்கப்படுகின்றன. சுட்டெழுத்துக்களை பற்றி ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு அழகாக நடத்தும் பாடத்தை இன்று நாம் அனைவரும் விரிவாய்க் காண்போம்.
"வணக்கம் அம்மா!"
“வணக்கம் தங்கங்களா! எல்லோரும் எப்படி இருக்கீங்க?”
“நல்லா இருக்கோம் அம்மா!"
"ரொம்ப சந்தோசம்.. தம்பி ரமேஷ் அவன் பேரு என்ன?"
"அவன் பேரு சதீஷ் அம்மா!"
"இவன் பேரு என்ன?"
"முகில் அம்மா!"
"சரி உட்காரு”
“முகில் அங்கே என்ன இருக்கிறது?”
“அங்கு கடிகாரம் இருக்கிறது அம்மா!”
“இந்த மேசையில் என்ன இருக்கிறது?"
"இந்த மேசையில் புத்தகம் இருக்கிறது அம்மா!”
"இப்போது நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்டேன். அதற்கு நீங்கள் அருமையான முறையில் பதிலை சொன்னீர்கள். நான் உங்களிடம் கேட்ட கேள்விகளில் இந்த வார்த்தைகள் அதிகமாக இருந்தன....
அவன், இவள், அங்கு, இங்கு, அந்த, இந்த ஆகிய சொற்களைக் கவனியுங்கள். அவை ஒன்றைச் சுட்டிக் காட்டுகின்றன அல்லவா? இவ்வாறு சுட்டிக்காட்டுவதற்கு அச்சொற்களின் முதலில் அமைந்துள்ள அ, இ ஆகிய எழுத்துக்களே காரணம்.
இவ்வாறு ஒன்றைச் சுட்டிக் காட்ட வரும் எழுத்துக்களுக்குச் சுட்டு எழுத்துகள் என்று பெயர்.
இப்பொழுது உங்களுக்கு புரிகிறதா குழந்தைகளே?
"நன்றாகவே புரிகிறது அம்மா!"
“சுட்டெழுத்துகள் மொத்தம் எத்தனை இருக்கிறது அம்மா? அதை பற்றி கூறுங்கள்!”
“அருமையான கேள்வி தம்பி!"
"அ, இ, உ ஆகிய மூன்று எழுத்துகளும் சுட்டு எழுத்துகளாகும்."
"‘உ’ என்ற எழுத்து நம் வாழ்க்கையில் பயன்படுத்துகிறோமா அம்மா?"
"இன்று 'உ' என்னும் எழுத்தைச் சுட்டாகப் பயன்படுத்துவது இல்லை. இது பெரும்பாலும் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது.
நாம் பேசுகின்ற வார்த்தைகளில்,
இவன், அவன், இது, அது - இச்சொற்களில் உள்ள சுட்டு எழுத்துக்களை நீக்கினால் பிற எழுத்துக்கள் பொருள் தருவதில்லை. இவ்வாறு, சுட்டு எழுத்துக்கள் சொல்லின் உள்ளேயே (அகத்தே) இருந்து சுட்டுப்பொருளைத் தருவது அகச்சுட்டாகும்.
நாம் பேசும்போது சில வார்த்தைகளை இப்படி கூறுகின்றோம்.
அவ்வானம், இம்மலை, இந்நூல் - இச்சொற்களில் உள்ள சுட்டு எழுத்துகளை நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தரும். இவ்வாறு சுட்டு எழுத்துகள் சொல்லின் வெளியே (புறத்தே) இருந்து சுட்டுப்பொருளைத் தருவதால் இது புறச்சுட்டாக கூறப்படுகிறது.
பக்கத்தில் உள்ள பொருட்களையோ நபரையோ நாம் குறிப்பதற்கு இந்த வார்த்தைகளை பயன்படுத்துகின்றோம்.
இவன், இவர், இது, இவை, இம்மரம், இவ்வீடு - இச்சொற்கள் நம் அருகில் (அண்மையில்) உள்ளவற்றைச் சுட்டுகின்றன. எனவே, இது அண்மைச்சுட்டாகும். அண்மைச்சுட்டுக்குரிய எழுத்து 'இ' ஆகும்.
ஒரு குறிப்பிட்ட தூரத்தில் உள்ள பொருள்களையும் நபர்களையும் நாம் அழைப்பதற்கு இந்தச் சொற்களை பயன்படுத்துகின்றோம்.
அவள், அவர், அது, அவை, அவ்வீடு, அம்மரம் - இச்சொற்கள் தொலைவில் (சேய்மையில்) உள்ளவற்றைச் சுட்டுகின்றன. எனவே, இது சேய்மைச்சுட்டு எனப்படும். சேய்மைச்சுட்டுக்குரிய எழுத்து 'அ' ஆகும்.
அருகில் உள்ளவற்றிற்கும் தொலைவில் உள்ளவற்றிற்கும் இடையில் இருப்பதைச் சுட்டிக் காட்ட 'உ' என்ற சுட்டெழுத்து அக்காலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
(எ.கா.) உது, உவன்
“இப்பொழுது உங்களுக்கு இந்த சுட்டெழுத்துகள் பற்றி புரிந்ததா மாணவர்களே?”
“நன்றாகவே புரிந்தது அம்மா!”
“நான் ஒரு கேள்வி கேட்கிறேன்!”
“கேளுங்கள் அம்மா!”
பக்கத்தில் உள்ள ஒருவனுக்கும் தூரத்தில் உள்ள ஒருவனுக்கும் இடையில் இருக்கும் ஒருவனை நாம் எவ்வாறு கூப்பிட வேண்டும்?”
“உவன்” என்று கூப்பிட வேண்டும் அம்மா.”
“அருமை! நன்றாக புரிந்து கொண்டீர்கள்!”
இந்த ‘உவன்’ என்ற வார்த்தை இப்போது அதிகமாக பயன்படுத்தப்படுவதில்லை. ஆகையால் உவர், உவன், உவள் போன்ற வார்த்தைகளை சரியான இடத்தில் நாம் பயன்படுத்தினால் சாலச் சிறந்ததாக இருக்கும்.
அடுத்த வகுப்பில் மற்றொரு இலக்கணத்தோடு சந்திப்போம். வணக்கம் தங்கங்களா!"
"வணக்கம் அம்மா!"