செல்லங்களா... கொஞ்சும் தமிழ் கற்போமா? பாடம் 7!

வல்லினம் மிகும் இடங்கள் என்ன? எப்போது வல்லினம் சேர்க்க வேண்டும்? மாணவர்களுக்கு எளிய உதாரணங்களுடன் விளக்கும் தமிழ் இலக்கண வழிகாட்டி.
Tamil grammer
Tamil grammerImage credit: AI Image
Updated on
இதையும் படியுங்கள்:
செல்லங்களா... கொஞ்சும் தமிழ் கற்போமா? பாடம் 6!
Tamil grammer

தமிழ் படித்த தாத்தாவுடன் ரமேஷ் சென்று கொண்டிருக்கிறான்‌. அப்போது தாத்தா கேட்கிறார். 

“ரமேஷ் வீட்டுப்பாடம் செய்து விட்டாயா?”

“செய்துவிட்டேன் தாத்தா!”

“ஓ அருமை! என்ன வீட்டுப்பாடம் உனக்கு கொடுத்தார்கள்?”

“வல்லினம் மிகும் இடங்கள் பற்றி எழுதி வரச் சொன்னார்கள் தத்தா!”

“பலே! நல்ல தலைப்புதான்!”

“ஆமா தாத்தா! ஆனால் எனக்கு சிறிது குழப்பமாக இருக்கிறது!”

“இதில் என்ன குழப்பம் இருக்கிறது? ரமேஷ் நான் உனக்கு கூறுகிறேன் நீ நன்றாக கவனி. உனக்கு புரியும்!”

வாழ்க்கையில் நாம் பேசுவதை போன்றே எழுதுகிறோமா, என்றால் கிடையாது. எழுதுவதைப் போன்று பேசுகிறோமா என்றால் அதுவும் கிடையாது. எழுதும்போது வல்லின மெய் எழுத்துகளை இட்டு எழுதினால் ஒரு பொருள் தருகிறது. இடாமல் எழுதினால் மற்றொரு பொருள் தருகிறது. எடுத்துக்காட்டாக, 

'செல்வம் கத்தி, சண்டை போட்டான்!' 

'குமார் கத்திச் சண்டை போட்டான்!'

இந்த இரண்டு வாக்கியத்திற்கும் என்ன வித்தியாசம் என்று உனக்குப் புரிகிறதா ரமேஷ்!”

“புரிகிறது தாத்தா! செல்வமும் குமாரும் இருவரும் கத்தியை வைத்து சண்டை போட்டுக் கொள்கிறார்கள்!”

“இல்லை ரமேஷ்! நான் சொல்வதை நன்றாகக் கேள்! உனக்கு இப்போது புரியும்!”

“செல்வம் கத்தி சண்டை போட்டான் என்ற வாக்கியம் அவனுடைய வாயால் கத்தி சண்டை போட்டான் என்ற பொருளைத் தருகிறது.

ஆனால் “குமார் கத்திச் சண்டை போட்டான்” என்ற வாக்கியம் கத்தி என்ற ஆயுதத்தை வைத்து சண்டை போட்டான் என்ற பொருளை தருகிறது. இதில் வல்லின மெய் எழுத்தான 'ச்' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்த்தையை ஒரு இடத்தில் இட்டு எழுதினால் ஒரு பொருளையும், இடாமல் எழுதினால் மற்றொரு பொருளையும் தருகிறது. ஆகையால் வல்லின மெய்களை இட்டு எழுதுமிடங்களை நன்றாகத் தெரிந்து வைத்துக் கொள்வது முக்கியம். அவற்றைப் பற்றி நான் உனக்கு இனி விரிவாய்க் கூறுகிறேன் ரமேஷ்! இது உனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்”

“கூறுங்கள் தாத்தா! நன்றாக இருக்கிறது உங்களின் விளக்கம்!”

  • "அ, இ என்னும் சுட்டெழுத்துகளுக்குப் பின்னும், அந்த, இந்த என்னும் சுட்டுத் திரிபுகளின் பின்னும், எ என்னும் வினாவெழுத்தின் பின்னும், எந்த என்னும் வினாச்சொல்லின் பின்னும் வல்லினம் மிகும். எடுத்துக்காட்டுகள்: அச்சட்டை, இந்தக்காலம், எத்திசை?எந்தப்பணம்?

  • 'ஐ' என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடர்களில் வல்லினம் மிகும். எடுத்துக்காட்டுகள்: கதவைத்திற, தகவல்களைத்திரட்டு, காட்சியைப்பார்.

  • '​கு' என்னும் நான்காம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடர்களில் வல்லினம் மிகும். எடுத்துக்காட்டுகள்: முதியவருக்குக்கொடு, ​மெட்டுக்குப்பாட்டு, ​ஊருக்குச்செல்.

  • ​'என, ஆக' போன்ற சொல்லுருபுகளின்பின் வல்லினம் மிகும்.​எடுத்துக்காட்டுகள்: ​எனக்கேட்டார், ​வருவதாகக்கூறு.

  • 'அதற்கு, இதற்கு, எதற்கு' என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகும். எடுத்துக்காட்டு: அதற்குச் சொன்னேன், இதற்குக் கொடு, எதற்குக் கேட்கிறாய்?

  • 'இனி, தனி' ஆகிய சொற்களின்பின் வல்லினம் மிகும். எடுத்துக்காட்டு:  இனிக் காண்போம், தனிச் சிறப்பு.

  • 'மிக' என்னும் சொல்லின்பின் வல்லினம் மிகும். எடுத்துக்காட்டு: மிகப் பெரியவர்.

  • 'எட்டு, பத்து' என்னும் எண்ணுப்பெயர்களின்பின் வல்லினம் மிகும். எடுத்துக்காட்டு: எட்டுத்தொகை, பத்துப்பாட்டு.

  • ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வல்லினம் மிகும். எடுத்துக்காட்டு: தீப் பிடித்தது, பூப் பந்தல்.

  • ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின்பின் வல்லினம் மிகும். எடுத்துக்காட்டு: கூவாக் குயில், ஓடாக் குதிரை.

இதையும் படியுங்கள்:
செல்லங்களா... கொஞ்சும் தமிழ் கற்போமா? பாடம் 5!
Tamil grammer
  • வன்தொடர்க் குற்றியலுகரங்கள் நிலை மொழியாக இருந்து புணர்கையில் வல்லினம் மிகும். எடுத்துக்காட்டு:  கேட்டுக் கொண்டான், விற்றுச் சென்றான்.

  • (அகர, இகர ஈற்று) வினையெச்சங்களுடன் புணர்கையில் வல்லினம் மிகும். எடுத்துக்காட்டு: ஆடச் சொன்னார், ஓடிப் போனார்.

  • ஆறாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகும். எடுத்துக்காட்டு: புலித்தோல்.

  • திசைப்பெயர்களின்பின் வலிமிகும். எடுத்துக்காட்டு: கிழக்குப் பகுதி, வடக்குப் பக்கம்

  • இரு பெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் மிகும். எடுத்துக்காட்டு: மல்லிகைப்பூ, சித்திரைத்திங்கள்.

  • உவமைத்தொகையில் வல்லினம் மிகும். எடுத்துக்காட்டு:  தாமரைப்பாதம்.

  • சால, தவ, தட, குழ என்னும் உரிச்சொற்களின்பின் வல்லினம் மிகும். எடுத்துக்காட்டு: சாலப்பேசினார், தவச்சிறிது.

  • தனிக் குற்றெழுத்தை அடுத்துவரும் ஆகார எழுத்தின்பின் வல்லினம் மிகும். எடுத்துக்காட்டு: நிலாச் சோறு, கனாக் கண்டேன்.

  • சில உருவகச் சொற்களில் வல்லினம் மிகும். எடுத்துக்காட்டு:  வாழ்க்கைப்படகு, உலகப்பந்து.

இந்தச் சொற்களில் எல்லாம் வல்லினம் மிகும் என்பதை நீ நன்றாகத் தெரிந்து கொண்டாய் என்று நம்புகிறேன் ரமேஷ்! இதனை உன் வகுப்பறையில் நண்பர்களுக்கும் நீ கூறினால் இலக்கணத்தில் நன்றாகத் தேர்ந்து நன்மை அடைவாய்!”

“நன்றி தாத்தா! நாளை பள்ளிக்குச் சென்று, கண்டிப்பாக என்னுடைய வகுப்புத் தோழர்களுக்கு வல்லினம் மிகும் இடங்களைப் பற்றி நான் அழகாக எடுத்துக் கூறுவேன்!”

என்று கூறிவிட்டு வீட்டுக்குள் சென்று விட்டான் ரமேஷ்!.

logo
Kalki Online
kalkionline.com