செல்லங்களா... கொஞ்சும் தமிழ் கற்போமா? பாடம் 21!

ண, ந, ன எழுத்துப்பிழைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் எளிய தமிழ் இலக்கண வழிகாட்டி.
நெடுங்கணக்கு | Teacher and students in class
நெடுங்கணக்கு | Teacher and students in classImage credit: Gemini AI
பெ. சிவக்குமார்

வணக்கம்!  என்னுடைய பெயர் பெ.சிவக்குமார். விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள குலசேகரநல்லூர் என்னும் குக்கிராமத்தில் இருந்து எழுதி வருகிறேன்.நான் பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே தமிழ் மொழியில் எனக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. கல்லூரிக்கு வந்த பிறகு தான் கவிதை, கட்டுரை, சிறுகதை போன்றவைகளை  எழுத சிறப்பாகக் கற்றுக் கொண்டேன்.  கவிதை, கட்டுரை, சிறுகதை போன்ற எல்லாப் போட்டிகளிலும் கலந்து கொண்டு மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் பல பரிசுகளைப் பெற்றுள்ளேன். என்னுடைய எழுத்துகள் எப்பொழுதும் வாசகர்களின் மனதில் “பசுமரத்தாணி போல” பதியுமாறுதான் எழுதுவேன்.  என்னுடைய படைப்புகள் அனைத்தும் கரிசல் மண் சார்ந்தவைகளாக இருக்கும். என்னுடைய படைப்புகளை வெளியிடும் கல்கி குழுமத்திற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

Updated on

அன்று முதல் பாடவேளை தமிழ். முருகேஸ்வரி அம்மா வகுப்பறைக்குள் நுழைந்தார்கள். 

“வணக்கம் அம்மா”

“வணக்கம் மாணவர்களே எல்லோரும் நலமாக இருக்கிறீர்களா?”

“இருக்கிறோம் அம்மா!”

“இன்று நம் தமிழ் பாடத்தில் நெடுங்கணக்கு பற்றி அறிந்து கொள்ளப் போகிறோம் மாணவர்களே!”

“அம்மா நீங்கள் தமிழ்ப் பாடம் தானே நடத்தப்போகிறீர்கள். நெடுங்கணக்கு என்று கூறுகிறீர்கள் எனக்கு ஒன்றும் புரியவில்லையே! தமிழ்ப்பாடத்தில் எதற்காக கணக்கு வருகிறது”

“செல்வம் நெடுங்கணக்கு என்பது நீங்கள் படிக்கின்ற கணிதம் கிடையாது. அதனை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். நெடுங்கணக்கு என்பது தமிழ் எழுத்துகளின் வரிசைகளை அறிதல் என்று பொருளாகும். தமிழ் எழுத்துகளின் வரிசைகளின் அவற்றின் உச்சரிப்பு முறைகளையும் அறிவது இந்தப் பாடத்தின் நோக்கமாகும். வாருங்கள் பாடத்திற்குள் செல்லலாம்…..

தமிழ் நெடுங்கணக்கு என்பது தமிழ் எழுத்துகளின் பிறப்பு அடிப்படையில் சான்றோரால் அமைக்கப்பட்ட தமிழ் எழுத்து வரிசை முறையாகும்.

இவ்வரிசையை அறிந்தாலே ண, ந, ன இவற்றைப் பயன்படுத்துவதில் பிழை ஏதும் வராது. இந்த ஒலிநுட்பம் தமிழுக்கே உரியது. எழுத்தை எளிதாகக் கற்பிக்கிறோம் என்று முதலில் ட, பின்னர் ப, அடுத்து ம எனச் சொல்வது பிழையாகும்.

உயிரின் இயல்பே சுழியம் தான். அதுவும் வலச்சுழியம்தான். குழந்தை முதல் கிழவன்வரை அப்படித் தொடங்குவதே இயல்பு. அதனால்தான், எல்லா மொழிகளுக்கும் அகரம் முதன்மையாக உள்ளது. அந்த அகர எழுத்தின் அமைப்பே எல்லா மொழிகளின் அமைப்புக்கும் மூலமாகும்.

இதையும் படியுங்கள்:
செல்லங்களா... கொஞ்சும் தமிழ் கற்போமா? பாடம் 20!
நெடுங்கணக்கு | Teacher and students in class

முதலில் ஒரு சுழி - பின்னர் பிறை, அடுத்துப் படுக்கைக் கோடு, நிறைவாக நிலைக்கோடு ஆகியவற்றால் அமைந்ததே அகரம்! இவை இல்லாமல் உலகில் எந்த மொழி எழுத்தும் இல்லை. மாணவர்களுக்குக் கற்பிக்கையில் எழுத்துகளை நெடுங்கணக்கு வரிசையை ஒட்டியே பெயர் அமைக்க வேண்டும்.

'ட' எனும் எழுத்தை அடுத்துவரும் ணகரத்தை - டண்ணகரம் எனச் சொல்ல வேண்டும், த என்னும் எழுத்தை அடுத்து வரும் நகரத்தை - தந்நகரம் எனச் சொல்ல வேண்டும். வல்லின றகரத்திற்குப் பின்வரும் னகரத்தை றன்னகரம் எனச் சொல்ல வேண்டும்.

இவ்வண்ணம் சொல்லக்கூடாது மூன்று சுழி ண, நாய்க்குப் போடுகிற ந, இரண்டு சுழி ன என இவ்வண்ணம் சொல்ல கூடாது. இம்மூன்று எழுத்துகளையும் (ண, ந, ன) பயன்படுத்துவதில் அனைவருக்கும் மயக்கம் உண்டு.

டகரத்துக்கு முன்னால் அதன் இனமாகிய ணகரம்தான் வரும்.

வண்டு - டகரத்தின் இன எழுத்து ணகரமே வரும்.

சந்தனம் - தகரத்தின் இன எழுத்து நகரமே வரும்.

நன்றி - றகரத்தின் இன எழுத்து னகரமே வரும். இவற்றைப் புரிந்து கொண்டால் ண, ந, ன - பயன்படுத்துவதில் பிழையே வராது.

கண்தன் - இவ்வண்ணம் வராது. 

தந்நகரமாகிய ந் எழுத்தே வரும் - கந்தன்.

பன்தம் - பிழை. தந்நகரமாகிய ந வரும் - பந்தம்.

நண்றி - பிழை. றகரத்துக்கு முன் றன்னகரமே வரும் - நன்றி.

பன்டம் - பிழை. டகரத்துக்கு முன் டண்ணகரமே வரும் - பண்டம்.

இவற்றுள் வல்லின மெய்கள் - க், ச், ட், த், ப், ற் - 6

இவற்றுள் மெல்லின மெய்கள் - ங், ஞ், ண், ந், ம், ன் - 6

இவற்றுள் இடையின மெய்கள் - ய், ர், ல், வ், ழ், ள் - 6

​3. உயிர் மெய் எழுத்துகள்:

​உயிரும் மெய்யும் இணைந்து வரும் எழுத்துகள்.

​க் + அ = க ................ ன் + ஔ - னெள - 216 எழுத்துகள்

​4. ஆய்தம்:

​நுண்மையான ஒலி உடைய முப்பால் புள்ளி எழுத்தே ஆய்தம் ஆகும்.

​ஆயுதம் என்று எழுதுதல் பிழை, இந்த எழுத்துக்கு முன் ஒரு குறிலெழுத்தும் பின் ஒரு எழுத்தும் பெற்று வரும்.

அஃது, இஃது, பஃறுளி, அஃகிய

இவ்வாறு தான் மாணவர்களின் எழுத்துகளை நன்றாகப் புரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதனுடைய உச்சரிப்பைப் பொறுத்து எழுத்தின் வரி வடிவம் மாறுகிறது.

எழுத்துகள் அறிதல்:

1. உயிரெழுத்துகள் - உயிர்போல தனித்து இயங்கும் எழுத்துகளாகும். அ முதல் ஔ வரை. 

குறுகிய ஓசையுடைய உயிரெழுத்துகள் - அ, இ, உ, எ, ஒ - 5 (குறில்)

​நீண்ட ஓசையுடைய உயிரெழுத்துகள் - ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ - 7 (நெடில்)

ஐ - அ + இ என்னும் கூட்டெழுத்து ஆகும். அய் என எழுதலாகாது.

​ஐ நெடில்; அ குறில்; ய் ஒற்று.

ஔ - அ + உ என்னும் கூட்டெழுத்து ஆகும். அவ் என எழுதலாகாது.

​ஔ நெடில்; அ குறில்; வ் ஒற்று.

நெடுங்கணக்கு | Teacher and students in class
நெடுங்கணக்கு | Teacher and students in classImage credit: Chatgpt

2. மெய்யெழுத்துகள்: உடம்பு - மெய்; உடம்பைப் போல தனித்து இயங்கா எழுத்துகள் மெய்யெழுத்துகள்.

​க் முதல் ன் வரை உள்ள 18 எழுத்துகள்; இவை புள்ளி பெற்று வரும்.

​ஒலிக்கும்போது உயிர் உதவி இல்லாமல் ஒலிக்க முடியாது - இக்கு - இங்கு - இன்னு - என உயிரெழுத்தோடுதான் ஒலிக்க முடியும்.

இதையும் படியுங்கள்:
செல்லங்களா... கொஞ்சும் தமிழ் கற்போமா? பாடம்19!
நெடுங்கணக்கு | Teacher and students in class

தமிழில் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு பொருள் இருக்கிறது. உயிர் எழுத்துகளை நாம் ஏன் உயிரெழுத்துகள் என்று அழைக்கிறோம்? ஏனென்றால் உயிர் வாழ்வதற்குக் காற்றுத் தேவை. அந்தக் காற்று மூலம் பிறப்பதால், இதற்கு உயிர் எழுத்துகள் என்று பெயர். காற்று இல்லை என்றால் உயிர் இருக்காது. அதேபோல உயிர் எழுத்துகள் இல்லை என்றால் தமிழ் மொழி என்பது ஒன்று இருக்காது.

மெய்யெழுத்துகளுக்கு ஏன் மெய் எழுத்து என்று பெயர் வைத்து அழைக்கிறோம்? மெய் என்றால் உடல் என்று பொருள். உடலில் உள்ள தலை, மூக்கு, மார்பு, கழுத்து ஆகியவற்றிலிருந்து மெய்யெழுத்துகள் பிறப்பதால், அதனை மெய்யெழுத்துகள் என்று அழைக்கிறோம். இவ்வாறு தமிழ் மொழியின் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு தனிச்சிறப்பு இருக்கிறது. ஆகையால் அப்படிப்பட்ட தமிழ் மொழியைப் படித்துச் சுவைத்துப் பார் போற்றும் வகையில் வாழ்வோம்.

logo
Kalki Online
kalkionline.com