

மிழ் சொற்களில் இடையில் மற்றும் இறுதியில் வரும் எழுத்துகள் யாவை? தமிழ் இலக்கண விதிகளை எளிமையாகப் புரிந்து கொண்டு எழுத்துப் பிழைகளைத் தவிருங்கள்.
மொழிக்கு இடை மற்றும் இறுதியில் வரும் எழுத்துகள்
“வணக்கம் அம்மா!”
“வணக்கம் குழந்தைகளே!”
“எல்லோரும் காலையில் சாப்பிட்டீர்களா?”
“சாப்பிட்டோம் அம்மா“
“அருமை! காலை உணவை யாரும் தவிர்க்கக் கூடாது!”
“சரிங்க அம்மா!”
“அன்று மொழி முதல் எழுத்துகள் பார்த்தோம் மாணவர்களே! அது உங்களுக்கு புரிந்ததா?”
“புரிந்தது அம்மா!”
“அப்படி என்றால் உங்களுக்கு ஒரு கேள்வி? ட என்ற எழுத்து மொழி முதல் எழுத்தாக வருமா?”
“ட என்ற எழுத்து மொழி முதல் எழுத்தாக வரும். ஆனால் டகரவரிசையில் தொடங்கக்கூடிய எந்த ஒரு சொல்லும் தமிழ்ச் சொல் இல்லை அம்மா”
“அருமை! அருமை. நன்றாக புரிந்து கொண்டீர்கள்”
“அன்று நாம் மொழி முதலெழுத்துகளைப் பார்த்தோம். இன்று மொழி இடை எழுத்துகள் மற்றும் இறுதியில் எழுத்துகளைப் பற்றி பார்ப்போம் வாருங்கள்”
மொழிக்கு இடையில் வரும் எழுத்துகள்:
தமிழில் மொழிக்கு இடையில் ர், ழ் ஆகிய மெய்யெழுத்துகள் தத்தம் எழுத்தோடு சேர்ந்து வருவதில்லை. அவை தவிர்த்த பதினாறு மெய்யும் தத்தம் மெய்யோடு மொழிக்கு இடையில் வரும்.
(எ.கா.) சக்கரம், எங்ஙனம், மச்சம், மஞ்ஞை, வட்டம், எண்ணம், மொத்தம், அந்நியன், அப்பம், அம்மி, மெய்யன், பல்லி, கொல்லை, உள்ளம், குற்றம், அன்னம்.
மேலும், க், ச், த், ப் தவிர்த்து ஏனைய மெய்கள், பிறமெய்களோடு சேர்ந்தும் மொழிக்கு இடையில் வரும். (எ.கா.) சங்கம், வஞ்சி, வெட்கம், இரண்டு, கந்தம், கம்பன், கொய்சகம், சேர்க்கை, செல்வம், தெவ்யாது, கள்வன், வாழ்க, கற்க, அன்பு.
மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துகள்:
பன்னிரண்டு உயிரெழுத்தும் பதினொரு மெய்யெழுத்தும், குற்றியலுகரமும் ஆக மொத்தம் 24 எழுத்தும் மொழிக்கு இறுதியில் வரும்.
மொழி இறுதி எழுத்துகள் இங்குச் சொல்லின் ஈற்றில் நிற்கும் எழுத்துகள் குறித்துக் கூறப்படுகிறது.
உயிர் எழுத்துப் பன்னிரண்டும் மொழி இறுதியில் வரும்.
சில, பலா, கிளி, தீ, சுடு, பூ, சே (ஒருவகை மரம்) தே (தெய்வம்), மலை, நொ (துன்பம்), போ, கெள (கவ்வுதல்)
சில என்பதை சில்+அ என இறுதி உயிர்மெய்யைப் பிரித்துக் கணக்கிட வேண்டும்.
தீ என்பது ஓரெழுத்து ஒருமொழி. த் + ஈ எனப்பிரித்துக் கணக்கிட வேண்டும்.
'எ' என்ற குறில் உயிர் எழுத்து மெய்யெழுத்துடன் சேர்ந்து சொல்லின் இறுதியில் வராது. அளபெடையாக மட்டுமே இறுதி எழுத்தாக வரும். (அவனேன)
'ஒ' என்பது நொ என்றும், 'ஔ' என்பது 'கௌ' என்றும் மட்டுமே இறுதி எழுத்தாக வரும். பிறமெய்யுடன் சேர்ந்து இறுதி எழுத்தாக வராது. நொ, கௌ என்ற இரண்டும் இன்று வழக்கில் இல்லை.
மெய் எழுத்தில் ஞணநமன – யரலவழள என்ற பதினோரு எழுத்துகள் மட்டுமே மொழியின் இறுதியில் நிற்கும்.
உரிஞ், மண், வெரிந் (முதுகு), மரம், பொன், காய், வேர், வேல், தெவ் (பகை), வாழ், வாள் என பதினோரு மெய் எழுத்துகளும் சொல்லின் ஈற்றில் வந்தன.
இவற்றுள் ஞ, ந், வ் என்ற மெய்கள் ஈற்றில் வருவது இன்று வழக்கம் இல்லை.
குற்றியலிகரம் சொல்லின் ஈற்றில் வரும். பத்து, தெரியாது. ஆக,
உயிர் எழுத்து - 12
மெல்லின மெய் - 5
இடையினமெய் - 6
குற்றியலுகரம் - 1
_____________________
மொத்தம் - 24
என்ற இருபத்து நான்கு எழுத்துகளும் மொழியின் இறுதியில் வருவன ஆகும்.
இவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் ஈற்றுப்புணர்ச்சி, மெய்யீற்றுப் புணர்ச்சி, குற்றியலுகர ஈற்றுப்புணர்ச்சி எனப் புணர்ச்சி இலக்கணம் கூறப்படுகிறது.
உயிர்மெய் எழுத்தில் மெய் முதலிலும், உயிர் ஈற்றிலுமாக ஒலிப்பதால் (க்+அ=க) அந்த வரிசைப்படியே, உயிர்மெய் எழுத்திற்கு மெய் எழுத்து முதலாகும். உயிர் எழுத்து ஈறு ஆகும்.
அம்மா – உயிர் முதல் உயிர் இறுதிச்சொல் (அம்ம+ஆ)
அவன் – உயிர் முதல் மெய் இறுதிச் சொல் (அவ்+அன்)
மரம் – மெய்முதல் மெய் இறுதிச் சொல் (ம்+அம்)
பலா – மெய்முதல் உயிர் இறுதிச்சொல் (ப்+ஆ)
எனக் கொள்ள வேண்டும்.
உயிர்மெய் எழுத்தை எந்த இடத்திலும் மெய்யும் உயிருமாகப் பிரித்தே கொள்ள வேண்டும்.
(உயிர்மெய் எழுத்துப்பற்றிக் கூறும் இடம் ஒன்றைத்தவிர.)
இதுதான் மாணவர்களே! மொழி இடை எழுத்துகள் மற்றும் இறுதி எழுத்துகள். வெற்றி மற்றும் நீங்கள் தெளிவாக புரிந்து கொண்டால், உங்களுக்கு எழுதுவதில் எந்த ஒரு சிக்கலும் இருக்காது. மொழியின் முதல், இடை, கடை ஆகியவற்றில் எஃத எழுத்துகள் வரும் என்று அறிந்து தெரிந்து எழுதினால் உங்களுடைய எழுத்து சிறக்கும். என்றுமே நமது தமிழ் இலக்கணம் இனிக்கும்.
தமிழ் இலக்கணத்தின் அடிவேரான எழுத்துக்களின் அமைப்பைத் துல்லியமாகத் தெரிந்துகொள்வதன் மூலம், எழுத்துகளில் எந்தவிதத் பிழையும் இல்லாமல் தூய தமிழில் எழுதவும் பேசவும் முடியும்; இது உங்கள் எழுத்துத் திறனை அடுத்த கட்டத்திற்கு உயர்த்திப் பெருமிதம் சேர்க்கும்.