செல்லங்களா... கொஞ்சும் தமிழ் கற்போமா? பாடம் 20!

மரபுப் பிழைகள் நீங்க: தமிழ் மரபுச் சொற்கள் அறிவது எப்படி? - முழு வழிகாட்டி
மரபுச் சொற்கள்
மரபுச் சொற்கள்Image credit: Chatgpt
பெ. சிவக்குமார்

வணக்கம்!  என்னுடைய பெயர் பெ.சிவக்குமார். விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள குலசேகரநல்லூர் என்னும் குக்கிராமத்தில் இருந்து எழுதி வருகிறேன்.நான் பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே தமிழ் மொழியில் எனக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. கல்லூரிக்கு வந்த பிறகு தான் கவிதை, கட்டுரை, சிறுகதை போன்றவைகளை  எழுத சிறப்பாகக் கற்றுக் கொண்டேன்.  கவிதை, கட்டுரை, சிறுகதை போன்ற எல்லாப் போட்டிகளிலும் கலந்து கொண்டு மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் பல பரிசுகளைப் பெற்றுள்ளேன். என்னுடைய எழுத்துகள் எப்பொழுதும் வாசகர்களின் மனதில் “பசுமரத்தாணி போல” பதியுமாறுதான் எழுதுவேன்.  என்னுடைய படைப்புகள் அனைத்தும் கரிசல் மண் சார்ந்தவைகளாக இருக்கும். என்னுடைய படைப்புகளை வெளியிடும் கல்கி குழுமத்திற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

Updated on

முனியசாமி ஐயா வகுப்பறைக்குள் நுழைந்தார். எல்லாம் மாணவர்களும் எழுந்து  நின்று, 

“வணக்கம் ஐயா!” என்று கூறினார்கள்.

“ வணக்கம் மாணவர்களே! வாழ்க வளமுடன் வளர்க தமிழுடன்!”

“ஐயா! இன்று நாம் என்ன பாடம் பார்க்கப் போகிறோம்?”

“செல்வம் மிகவும் ஆர்வமாக இருக்கிறாய்! ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. சரி பாடத்திற்குச் செல்வோம். நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கப் போகிறேன்?”

“கேளுங்கள் ஐயா!”

“காலையில் நீங்கள் எழுந்தவுடன் என்னவற்றையெல்லாம் பார்ப்பீர்கள்?”

“ஐயா!, காலையில் கோழி கூவியதும் நான் எழுந்து விடுவேன். என் அம்மாவிற்கு தேவையான உதவிகளைச் செய்ய ஆரம்பிப்பேன் ஐயா!”

“அருமை! செல்வி”

“காகங்கள், மயில், குயில் என அனைத்தும் கத்திக் கொண்டிருக்கும் ஐயா!”

"பரவாயில்லை! எல்லாத்தையும் கவனித்து இருக்கிறீர்கள். நீங்கள் கூறியதில் சில தவறுகள் உள்ளன என்பதை நீங்கள் அறியவில்லை. கோழி கொக்கரிக்கும், சேவல் கூவும், காகங்கள் கரையும், குயில் கூவும், மயில் அகவும். இப்படித்தான் சொல்ல வேண்டும். இதற்கு பெயர்தான் மரபுச் சொற்கள். நீங்கள் மரபுப் பிழையோடு பேசிக் கொண்டிருக்கிறீர்கள்”

“மரபுப் பிழை என்றால் என்ன ஐயா?”

“எப்பொருளை எச்சொல்லால் முன்னோர் வழங்கினாரோ அச்சொல்லை அப்பொருளால் வழங்குவது மரபு. இன்று நாம் பார்க்க இருக்கிற பாடம் 'மரபுச் சொற்கள் அறிதல்' வாருங்கள் பாடத்திற்குள் செல்லலாம்.

மரபுச் சொற்கள் இரண்டு வகைகளாக உள்ளன. அவை,

1. பெயர் மரபுச் சொற்கள் 

2. வினை மரபுச் சொற்கள் 

1. பெயர் மரபுச் சொற்கள்:

பறவை, விலங்குகளின் இளமைப் பெயர்கள்:

எலிக்குஞ்சு

ஆட்டுக்குட்டி

பசுக்கன்று

நாய்க்குட்டி

குருவிக்குஞ்சு

கழுதைக்குட்டி

பன்றிக்குட்டி

புலிக்குட்டி

கோழிக்குஞ்சு

குதிரைக்குட்டி

மான்கன்று

பூனைக்குட்டி

கீரிப்பிள்ளை

குரங்குக்குட்டி

யானைக்கன்று

சிங்கக்குருளை

தாவரங்களின் உறுப்புப் பெயர்கள்:

சோளத்தட்டு

முருங்கைக் கீரை

வேப்பந்தழை

மாவிலை

தாழைமடல்

தென்னங்கீற்று

மூங்கில் இலை

நெல்தாள்

வாழையிலை

பனையோலை

கமுகங்கூந்தல்

வாழைக்கச்சல்

இதையும் படியுங்கள்:
செல்லங்களா... கொஞ்சும் தமிழ் கற்போமா? பாடம்18!
மரபுச் சொற்கள்

செடி, கொடி, மரங்களின் தொகுப்புப் பெயர்கள்:

பூந்தோட்டம்

மாந்தோப்பு

வாழைத்தோட்டம்

தேயிலைத்தோட்டம்

கருப்பங்கொல்லை

சோளக்கொல்லை

சவுக்குத்தோப்பு

தென்னந்தோப்பு

பனங்காடு

வேலங்காடு

தொகுப்புப் பெயர்கள்:

ஆட்டுமந்தை

எறும்புச்சாரை

பசுநிரை

யானைக்கூட்டம்

வீரர்படை

கற்குவியல்

திராட்சைக்குலை

வைக்கோல்போர்

2. வினை மரபுச் சொற்களை அறிக.

பறவை, விலங்குகளின் ஒலிப்புச் சொற்கள்:

ஆந்தை அலறும்

குயில் கூவும்

கோட்டான் குழறும்

வாத்து கத்தும்

வண்டு முரலும்

காக்கை கரையும்

குருவி கீச்சிடும்

கோழி கொக்கரிக்கும்

மயில் அகவும்

விலங்குகளின் ஒலிகள்:

கழுதை கத்தும்

சிங்கம் முழங்கும்

நாய் குரைக்கும்

பன்றி உறுமும்

புலி உறுமும்

குதிரை கனைக்கும்

நரி ஊளையிடும்

எருது மூக்காரமிடும்

யானை பிளிறும்

மரபுச் சொற்கள்
மரபுச் சொற்கள்Image credit: Gemini AI

பெயருக்கேற்ற வினைச் சொற்கள்:

அப்பம் தின்

இலை பறி

ஏர் உழு

கதிர் அறு

திரியைக் கொளுத்து

கல் உடை

களை பறி

காய் அரி

நாரைக் கிழி

நீர் பாய்ச்சு

நெல் தூற்று

பழம் தின்

ஊறுகாய் தொடு

பால் பருகு

கூரை வேய்

வெற்றிலை தின்

சோறு உண்

படம் வரை

கோலம் இடு

விடை கூறு

குடம் வனை

உணவு பரிமாறு

தயிர் கடை

சோறு சமை

பாய் பின்னு

நாற்று நடு

விளக்கை ஏற்று

அம்பை எய்

தீ மூட்டு

சந்தனம் பூசு

மேற்கண்டவாறு சொற்களை நன்றாக தெரிந்து கொண்டால் நான் பேசும் போதும் எழுதும் போதும் மரபுப் பிழைகளை தவிர்த்து விடலாம். முன்னோர்கள் வைத்த பெயரை தவிர்த்து மற்ற பெயர்களை நாம் வழங்குவது படித்தவர்களுக்கு ஏற்றதாக இருக்காது. 

இதையும் படியுங்கள்:
செல்லங்களா... கொஞ்சும் தமிழ் கற்போமா? பாடம்19!
மரபுச் சொற்கள்

ஒவ்வொருவரும் மரபுச் சொற்களை அறிந்து தெரிந்து கொண்டு இருப்பது சாலச்சிறந்தது மாணவர்களே! நீங்கள் அன்றாட வாழ்க்கையில் உங்களுடைய பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் மரபுச் சொற்களைக் கையாண்டு தமிழ் மொழியின் சிறப்பினைச் செம்மைப்படுத்துங்கள் மாணவச் செல்வங்களே!"

“ உறுதியாக மரபுச் சொற்களை எங்களுடைய வாழ்க்கையில் பயன்படுத்துவோம்!”

“அடுத்த வகுப்பில் மற்றொரு இலக்கணப் பாடத்தோடு சந்திப்போம். சென்று வருகிறேன்………”

"நன்றி ஐயா!”

இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், உங்கள் பேச்சிலும் எழுத்திலும் உள்ள இலக்கணப் பிழைகள் முற்றிலுமாக நீங்கி, தமிழ் மொழியின் மீதுள்ள ஈர்ப்பும் கௌரவமும் பலமடங்கு அதிகரிக்கும். மற்றவர்கள் வியக்கும் வண்ணம் மிகச் துல்லியமாகவும் நேர்த்தியாகவும் கருத்துக்களை வெளிப்படுத்தும் முழுத் திறனைப் பெறுவீர்கள்.

logo
Kalki Online
kalkionline.com