சிறுவர் சிறுகதை: சூரியனைத் திருடிய காகம்!

வெண்மையாக இருந்த காகம் எப்படி கரிய நிறமானது? ஒரு சுவாரஸ்யமான அலாஸ்கா த்லிங்கிட் (Tlingit) பழங்குடி சிறுகதை!
சிறுகதை | crow and sun
சிறுகதை | crow and sunImage credit: Chatgpt
Updated on

அமெரிக்காவின் வடமேற்கு முனையில் உள்ள, பனியும் பனிப்பாறைகளும் சூழ்ந்த நாடு அலாஸ்கா. அதன் கடற்கரையோரப் பகுதிகளில் 'த்லிங்கிட்' (Tlingit) எனப்படும் பழங்குடி மக்கள் வசிக்கின்றனர்.

அலாஸ்கா துருவப் பகுதியில் உள்ளது. எனவே அங்கு ஆண்டின் அதிகமான நாட்களில் உறைபனியும், கடுமையான குளிரும் நிலவும். குளிர்காலம் நீண்ட இரவுகள் கொண்டதாக இருக்கும்.

அலாஸ்காப் பழங்குடி நம்பிக்கைகளின்படி, காகம் என்பது வெறும் பறவை அல்ல; அது மாயாஜால சக்தி கொண்ட தந்திரக்காரன்; உலகின் மறுஉருவாக்கி. உலகெங்கும் விடியலின் அடையாளமாக உள்ள காகம் பற்றிய அலாஸ்காவின் த்லிங்கிட் பழங்குடிக் கதை இது.

ஆதிகாலத்தில் உலகம் முழுவதும் அடர்ந்த காரிருளில் மூழ்கியிருந்தது. மனிதர்களும் விலங்குகளும் வழியறியாமல் தடுமாறி விழுந்தனர். வேட்டையாட முடியாமலும், உணவைக் கண்டுபிடிக்க முடியாமலும் பெரும் துயரத்திற்கு ஆளாயினர். தாவரங்கள் ஒளியின்றி வாடின. உலகமே உறக்கத்தில் ஆழ்ந்தது போல மந்தமாக இருந்தது.

ஆனால், நிலத்தின் ஒரு தொலைதூரக் கரையில் அமைந்திருந்த மாபெரும் மர வீட்டில் மட்டும் பேரொளி வீசியது. அவ்வீட்டின் உரிமையாளர் பேராசை பிடித்த செல்வந்தர். அவர் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் அனைத்தையும் மரப்பெட்டிகளுக்குள் பூட்டித் தன் வீட்டின் ரகசிய அறையில் வைத்திருந்தார். உலகின் மற்ற உயிர்கள் இருளில் தவிப்பதைப் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படவில்லை.

அப்போது காகம் தூய வெண் நிறத்தில் இருந்தது. அதற்குத் திருட்டுப் புத்தியும் இருந்திருக்கவில்லை. அது உலகை இந்த மாறா இருளிலிருந்தும், தூக்கத்திலிருந்தும் காப்பாற்ற எண்ணியது. நேரடியாகச் சென்று கேட்டால் அந்தப் பேராசைக்காரர் தரமாட்டார். எனவே, அவரது வீட்டிற்குள் நுழைய ஒரு தந்திரமான வழிமுறையைக் கடைபிடித்தது.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: வதந்திகளுக்கு ஆயிரம் சிறகுகள் (வங்காள நாட்டுப்புறக் கதை)!
சிறுகதை | crow and sun

அந்தச் செல்வந்தருக்கு ஒரு மகள் இருந்தாள். அவள் தினமும் அருகில் உள்ள சுனைக்குச் சென்று நீர் அருந்துவது வழக்கம். காகம் தன் மாயாஜாலச் சக்தியால் ஒரு சிறிய பைன் மர ஊசியாக உருமாறி, செல்வந்தரின் மகள் பருகவிருந்த நீர்த்துளிக்குள் மிதந்தது. அதை அறியாத அவள் அந்த நீரைக் குடித்தாள்.

சில மாதங்களிலேயே, அவளது வயிற்றில் அந்தப் பைன் ஊசி ஒரு குழந்தையாக வளர்ந்தது. அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

செல்வந்தர் தன் பேரக் குழந்தையின் மீது அளவற்ற பாசமும் நேசமும் வைத்திருந்தார். குழந்தை கேட்பதையெல்லாம் தட்டாமல் செய்து கொடுத்தார்.

குழந்தை உருவில் இருந்த காகத்திற்கு இதுவே சரியான வாய்ப்பாக அமைந்தது. ஊர்ந்து செல்லும் வயதை அடைந்தவுடன், அது வீட்டின் ரகசிய அறைக்குச் சென்று, நட்சத்திரப் பெட்டகமான மரப்பெட்டியைச் சுட்டிக்காட்டி அழுதது.

தாத்தா தன் பேரனின் அழுகையைப் பொறுக்க முடியாமல், அப்பெட்டியைத் திறந்து அதிலிருந்த நட்சத்திரங்களை வெளியே எடுத்தார். குழந்தை அதை வைத்து விளையாடுவது போல் நடித்து, வீட்டின் புகைபோக்கி வழியாக வானத்திற்கு வீசியது. நட்சத்திரங்கள் வானத்தில் சிதறி மின்னின.

அடுத்த நாள் குழந்தை மீண்டும் பிடிவாதமாக அழுது, சந்திரனைக் கொண்டிருந்த இரண்டாவது பெட்டியைப் பெற்றது. அதையும் தந்திரமாக ஜன்னல் வழியாக வானத்திற்குள் எறிந்தது.

சிறுகதை | White crow and sun
சிறுகதை | White crow and sunImage credit: Gemini AI

இறுதியில், சூரியன் பூட்டி வைக்கப்பட்டிருந்த கடைசிப் பெட்டிக்காகக் குழந்தை பேரிரைச்சலிட்டு அழுதது. செல்வந்தர் சற்றுத் தயங்கினாலும், பேரனின் பிடிவாதத்திற்குப் பணிந்து, சூரியன் இருக்கும் பெட்டியைத் திறந்து கொடுத்தார்.

பெட்டி திறக்கப்பட்ட கணமே, அதிலிருந்து தங்க நிறச் சூரியனின் பேரொளி அந்த அறை முழுவதையும் நிறைத்தது.

குழந்தை உருவில் இருந்த காகம், சட்டென்று தன் சுய உருவத்திற்கு மாறியது. தன் கூர்மையான அலகால் சூரியனைக் கவ்விக்கொண்டு, புகைபோக்கி வழியாக வானத்தை நோக்கிப் பறந்தது.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த செல்வந்தர் வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்து காகத்தைத் துரத்தினார். ஆனால், காகம் உயரே பறந்து சென்று, தன் அலகில் இருந்த சூரியனை வானத்தின் நடுவே தூக்கி வீசியது.

சூரியன் வானத்தில் நிலைபெற்று, உலகம் முழுவதற்கும் தன் பிரகாசமான வெளிச்சத்தையும் வெப்பத்தையும் வழங்கி இருளை விரட்டியது.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: ரோபோவும் ராமுவும்..!
சிறுகதை | crow and sun

மனிதர்களும் விலங்குகளும் முதன்முதலாக வெளிச்சத்தைக் கண்டு மகிழ்ச்சியில் ஆரவாரித்தனர்.

புகைபோக்கி வழியே சூரியனைச் சுமந்து சென்றதால், அதுவரை வெண்மையாக இருந்த காகத்தின் இறகுகள் கரிய நிறமாக மாறின. சூரியனை இப்படித் திருடி வந்ததால் அதற்குத் திருட்டு புத்தியும் நிலைத்துவிட்டது.

அன்று சூரியனை அடைத்து வைத்திருந்த இருளை விரட்டி உலகிற்கு வெளிச்சத்தைக் கொண்டுவந்ததால், காகத்திற்கும் சூரியனுக்கும் இடையே ஒரு பிரிக்க முடியாத பிணைப்பு உருவாகியது. அதனால்தான், இன்றளவும் தினமும் காலையில் சூரியன் உதிப்பதற்கு முன்பாகவே காகங்கள் விழித்தெழுந்து 'கா... கா...' என்று உரக்கக் கரைந்து உலக உயிரினங்களைத் தூக்கத்திலிருந்து எழுப்புகின்றன.

காகங்களின் குரலைக் கேட்ட பிறகே சூரியனும் தன் கதிர்களைப் பரப்பி விடியலைக் கொண்டுவருகிறது. காகமும் சூரியனும் இணைந்தே தினமும் உலகை விழிக்கச் செய்து, புதிய நாளுக்கான வாழ்க்கையைத் தொடங்கி வைக்கின்றன என்று த்லிங்கிட் மக்கள் நம்புகின்றனர்.

logo
Kalki Online
kalkionline.com