

குட்டீஸ்... இன்று ஒரு கதை சொல்லப் போகிறேன்.. அது ரோபோ பற்றியது.. சரி குட்டீஸ் உங்களுக்கு ரோபோ என்றால் என்ன தெரியுமா? மனிதர்கள் செய்யும் சில வேலைகளைச் செய்யும் வகையில் உருவாக்கப்படும் ஒரு இயந்திரம் தான் ரோபோ.. சில ரோபோக்கள் பேசும், சில ரோபோக்கள் பொருட்களைத் தூக்கும்.. இன்னும் சில ரோபோக்கள் மனிதர்களுக்கு உதவி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன..
ஆனால் ஒரு ரோபோ நமக்கு நண்பனாக இருந்தால் எப்படி இருக்கும்?
நான் சொல்லப் போகும் கதையில் வரும் ராமுவுக்கு அப்படி ஒரு ரோபோ நண்பன் இருந்தான்.. அவன் பெயர் டோபி.. டோபி பார்ப்பதற்கு சிறியதாகவும் மிகவும் அழகாகவும் இருப்பான்.. அவனுடைய தலையில் இரண்டு சிறிய விளக்குகள் இருக்கும்.. ராமு ஏதாவது கேள்வி கேட்டால் "பீப் பீப்.." என்று சத்தம் எழுப்பி விட்டு யோசித்து பதில் சொல்வான்..
ராமுவும் டோபியும் நல்ல நண்பர்கள் .. இருவரும் சேர்ந்து விளையாடுவார்கள்.. சில சமயங்களில் சின்னச் சின்ன சாகசங்களிலும் மாட்டிக் கொள்வார்கள்..
அப்படித் தான் ஒரு நாள் ராமு செய்த ஒரு தவறு அவனையும் டோபியையும் ஒரு பெரிய பிரச்சினையில் சிக்க வைத்தது..
அன்று என்ன நடந்தது? வாங்க குட்டீஸ்.. ராமுவுக்கும் டோபிக்கும் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.. அன்று ஞாயிற்றுக்கிழமை.. ராமுவின் அம்மா சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருந்தார்.. அப்பா செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தார்.. "டோபி.. இன்று நாம் என்ன விளையாடலாம்?" என்று கேட்டான் ராமு..
"பீப் பீப்.. முதலில் படிப்பு.. பிறகு விளையாட்டு" என்றான் டோபி.. "அடடா டோபி டியர் நீயும் அம்மா சொல்கிற மாதிரி சொல்கிறாயே?" என்று சிரித்தான் ராமு..
அப்போது அவனுடைய பார்வை மேசையின் மீது இருந்த ஒரு அழகான பூந்தொட்டியின் மீது விழுந்தது..
அது அம்மாவுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.. "டோபி.. இதைப் பாரேன்.. அழகாக இருக்கிறது அல்லவா" என்று சொன்னான் ராமு..
"ஆம் அழகாக இருக்கிறது.. ஆனால் ரொம்ப கவனமாக இரு.. அது கீழே விழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்று பதில் அளித்தான் டோபி..
"எனக்கு தெரியும் டோபி.. நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று சொல்லி விட்டு ராமு பூந்தொட்டியை எடுக்க முயன்றான்.. அவ்வளவு தான்.. அடுத்த நொடி... டமார்!!! பூந்தொட்டி கீழே விழுந்து உடைந்தது .. ராமு அதிர்ச்சியில் நின்று விட்டான்..
"அய்யய்யோ" என்று கத்தியபடி கீழே உடைந்த துண்டுகளைப் பார்த்தான்.. அம்மா ஓடி வந்து விட்டால் என்ன செய்வது? என்று பயந்து விட்டான் ராமு..
"டோபி டோபி.. அம்மாவிடம் சொல்லாதே" என்றான் ராமு.. டோபி அமைதியாக ராமுவைப் பார்த்தான்.. "ராமு பொய் சொல்லக்கூடாது.. உண்மையை சொல்லி விடலாம்" என்றான் ரோபோ டோபி..
"இல்லை டோபி.. நான் சொல்ல மாட்டேன்.. நீயும் சொல்லக் கூடாது!!" என்றான் ராமு..
"ராமு.. அங்கே என்ன சத்தம்" என்ற அம்மாவின் குரல் கேட்டது.. "ஒன்றுமில்லை அம்மா" என்று கத்தினான் ராமு..
அதற்குள் அம்மா அறைக்குள் வந்து விட்டார்.. தரையில் உடைந்த பூந்தொட்டியைப் பார்த்ததும் முகத்தில் கவலையுடன், "ராமு இதை யார் உடைத்தது?" என்று கோபமாக கேட்டார்.. ராமு பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தான்..
பிறகு டோபியைப் பார்த்தான்.. டோபியும் ராமுவை பார்த்தான்.. சில நொடிகளில் ராமுவின் மனதில் ஏதோ தோன்றியது..
நான் செய்த தவறை மறைத்தால் இன்னும் பெரிய பிரச்சனையாகி விடுமே என்று நினைத்து மெதுவாக அம்மாவின் அருகில் சென்று, "அம்மா.. அதை நான் தான் உடைத்தேன்.. தெரியாமல் செய்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்" என்றான்..
அம்மா அதைக் கேட்டு சிரித்தார்..
"நீ உடைத்தது வருத்தம் தான்.. ஆனால் நீ உண்மையைச் சொன்னதில் எனக்கு ரொம்ப சந்தோஷம்.." என்று கூற ராமுவுக்கு நிம்மதியாக இருந்தது..
"ரொம்ப தேங்க்ஸ் அம்மா" என்று அம்மாவை கட்டி அணைத்தபடி சொன்னான் ராமு..
"உடைத்ததுக்கு ஸாரி அம்மா" என்று மறுபடி ராமு கூற, டோபிக்கு ஒரே சந்தோஷம்.
"பீப்..பீப்.. உண்மை சொன்ன ராமுவுக்கு என் வாழ்த்துக்கள்" என்றான் டோபி..
"நன்றி டோபி.. இன்று நீ எனக்கு ஒரு பெரிய விஷயத்தை கற்றுக் கொடுத்து விட்டாய்.." என்ற ராமு விடம், "என்ன?" என்று டோபி கேட்க, "தவறு நடக்கலாம்.. அப்படி நடந்தால் பயப்படாமல் உண்மையைச் சொல்ல வேண்டும்" என்று பதில் சொன்னான் ராமு..
டோபியின் இரண்டு கண்களும் மின்னின.. "சரியாக சொன்னாய் ராமு" என்றான் டோபி..
குட்டீஸ்... இந்த கதையில் இருந்து நாம் என்ன கற்றுக் கொண்டோம் தெரியுமா?தவறு செய்வது மனித இயல்பு.. ஆனால் செய்த தவறை மறைக்காமல் உண்மையைச் சொல்லும் துணிச்சல் முக்கியம்.. உண்மை பேசும் துணிச்சல் நல்ல மனிதர்களாக நம்மை மாற்றும்..
அன்றிலிருந்து ராமு ஏதாவது தவறு செய்தால் அதை மறைக்காமல் உண்மையைச் சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டான்.. டோபியும் அவனுடைய நல்ல நண்பனாக இருந்து ஒவ்வொரு நாளும் நல்ல நல்ல விஷயங்களை கற்றுக் கொடுத்தான்..