

பண்டிதர் ஒருவருக்கு வீடு திரும்பிக்கொண்டிருக்கும்போது தொண்டையில் ஏதோ சிக்கியிருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. தொண்டையைச் செருமி, இருமித் துப்பினார். வாய்க்குள்ளிருந்து நாரையின் சிறிய பூஞ்சிறகு வெளிப்பட்டது. அதைக் கண்டு ஆச்சரியப்பட்டார். நாரையின் இறகு எப்படி தனது வாய்க்குள் போனது என்று அவரால் புரிந்துகொள்ள இயலவில்லை. இது எப்படி நடந்திருக்கும் என ஆழ்ந்து சிந்தித்தபடி வீடு வந்து சேர்ந்தார்.
நடந்த சம்பவத்தை மனைவியிடம் தெரிவித்தார். அவளும் அதைக் கேட்டு புதிர்மைக்கு உள்ளானாள்.
“சரி, இதை நீ யாரிடமும் சொல்ல வேண்டாம். மக்கள் கேட்டால் இது ஏதோ அபசகுனம் என்று கருதுவார்கள். நமக்குக் கெட்ட பேர் ஆகிவிடும்.”
மனைவி ஒத்துக்கொண்டாள்.
ஆனால், அவள் ஒரு பெண்ணாயிற்றே! இந்த விஷயத்தைத் தனக்குள் ரகசியமாக வைத்திருக்க அவளால் முடியுமா? யாரிடமேனும் அதைச் சொல்லாவிட்டால் தலை வெடித்துவிடும் போல் இருந்தது.
பக்கத்து வீட்டுக்காரியிடம் சென்று, கிசுகிசுப்பான குரலில், “ஒரு ரகசியம்” என்றாள்.
“சொல்லு, சொல்லு!” பக்கத்து வீட்டுக்காரிக்குக் காதுகள் விடைத்தன.
பண்டிதரின் மனைவி தனது கணவருக்கு நடந்த சம்பவத்தை நேரில் பார்த்தது போல விவரித்தாள். ஆனால், ஒரு சிறிய பூஞ்சிறகு என்று சொன்னால் அது ஆர்வமூட்டுவதாக இருக்காது என்பதற்காக, நாலைந்து பெரிய சிறகுகள் அவரது வாயிலிருந்து வெளிப்பட்டதாக மிகைப்படுத்தினாள்.
“இதை யாரிடமும் சொல்லிவிடாதே! அவருக்குத் தெரிந்தால் என்னைக் கோபித்துக்கொள்வார்.”
“அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்! எனது வாய்க்கு பூட்டுப் போட்டுக்கொண்டுவிட்டேன்!”
பண்டிதரின் மனைவி சென்றதிலிருந்து பக்கத்து வீட்டுக்காரி இதைப் பலருக்கும் சொல்ல வேண்டும் எனத் துடித்துக்கொண்டிருந்தாள்.
அப்போது சாலை வழியே சலவைக்காரரின் மனைவி வரவே, அவளுக்கு ஆவி துள்ளியது.
‘ஆஹா,… இவள்தான் சரியான நபர்! இவளிடம் சொன்னால் செய்தி ஊடகத்தில் சொன்ன மாதிரி ஆயிற்றே! வீடு வீடாகச் செல்லும் அவள், ஊர் முழுக்கப் பரப்பிவிடுவாள். நமக்கு வேலை மிச்சம்’ எனக் களி கூர்ந்து, “இந்த அதிசயத்தைக் கேட்டாயா?” என்று, பண்டிதரின் மனைவி கூறிய தகவல்களைப் பரிமாறினாள்.
ஆனால், வெறும் இறகுகள் வந்ததாகச் சொன்னால் அவ்வளவு சுவையாக இருக்காது என்பதால், பண்டிதரின் வாயிலிருந்து ஒரு நாரை வெளியே வந்தது என்று சொன்னாள்.
“அடக் கடவுளே! இது என்ன அதிசயமாக இருக்கிறது? இப்படியும் கூட நடக்குமா?” சலவைக்காரி மூக்கில் விரல் வைத்தாள். “அவர்கள் சுத்த சைவமாக இருந்தும் கூட, எப்படி அவரது வாயிலிருந்து ஒரு முழு நாரையும் வெளிப்பட்டது?”
“அதுதான் எனக்கும் புரியவில்லை! இருந்தாலும் இந்த ரகசியத்தை நீ யாரிடமும் சொல்லிவிட வேண்டாம்!” என்று அவளைத் தூண்டும் விதமாகக் கேட்டுக்கொண்டாள்.
“இல்லை, இல்லை! நான் வாயே திறக்க மாட்டேன். எனது உதடுகள் ஒட்டிக்கொண்டுவிட்டன!” என்ற அவள், சலவைத் துணிக்குப் பணம் கூட அடுத்த வாரம் வாங்கிக்கொள்வதாகச் சொல்லிவிட்டு, தனது மோளிக்குள் இந்த ரகசியத்தையும் வைத்துக் கட்டிச் சுமந்தபடி நடந்தாள்.
வீடு வீடாக சலவைத் துணிகளோடு நாரை விவகார விநியோகமும் நடந்தது. ஒரு நாரை என்று சொன்னால் அவ்வளவு சுவாரஸ்யமாக இராது என்பதால், இரு நாரைகளும், ஒரு கொக்கும் பண்டிதரின் வாயிலிருந்து வெளிப்பட்டதாகத் தெரிவித்தாள்.
ஊர்ப் பெண்கள் தமது கணவர்களிடம் அதைத் தம் பங்குக்கு மிகைப்படுத்தி, கொக்கு மற்றும் நாரைக் கூட்டங்கள் பண்டிதரின் வாயிலிருந்தது வந்ததாகக் கூறினர்.
இந்தக் கதை அண்டை அயல் ஊர்களுக்கும் பரவியது. அப்போது, வெளிநாட்டுப் பறவையான, பெரிய அளவில் உள்ள பெலிக்கான்கள் பண்டிதரின் வாயிலிருந்து வந்ததாகவும், ஐந்தடி உயரம் உள்ள ஆஸ்த்ரேலியக் கொக்குகள் வெளிப்பட்டதாகவும் சம்பவம் மாறியது. இறுதியில், அது, தீக்கோழிகள், ஈமுக் கோழிகள் உட்பட விதவிதமான – வெவ்வேறு அளவில் உள்ள பறவைகள், நூற்றுக்கணக்கில், ஒரு பறவைச் சரணாலயத்திலிருந்து ஒட்டுமொத்தமாகக் கிளம்பியது போல பண்டிதரின் வாயிலிருந்து பல மணி நேரங்களுக்கு வந்துகொண்டேயிருந்தது என்பதாக ஆயிற்று.
சுற்று வட்டார மக்கள் இந்த அற்புதம் நிகழ்ந்த பண்டிதரைக் காண அவரது வீட்டை முற்றுகையிட்டனர். மக்கள் சொன்னதைக் கேட்டு பண்டிதருக்குப் பேயதிர்ச்சி.
“என்னுடைய வாயிலிருந்து எந்தப் பறவையும் வெளிப்படவில்லை. ஒரே ஒரு சிறிய பூஞ்சிறகு மட்டும்தான் வந்தது.” அவர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். மக்கள் கூட்டம் நம்பவில்லை.
அவர்களின் விசாரிப்புகளுக்கு அஞ்சி பண்டிதர் தனது வீட்டிலிருந்து வெளியேறி, காட்டுக்குள் சென்று ஒளிந்துகொண்டார்.
அப்போதும் வதந்திகள் நிற்கவில்லை.
பண்டிதர் ஆஸ்த்திரேலியக் கொக்கு போன்ற பிரம்மாண்டமான நாரையாக மாறி, காட்டுக்குள் பறந்து சென்றுவிட்டதாக புதிய வதந்தியும் கிளம்பியது.