
ஹாய் குட்டீஸ்!
நாம கண்ணால பார்த்து அழகானது என்று ரசிக்கக்கூடிய எல்லாமே நமக்கு நன்மை தரக்கூடியதா? இல்லையா? என்பதை இந்த சிறுகதையின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க!
ஒரு காட்டில் அழகான மான் ஒன்று இருந்து வந்தது. அது வசந்த காலம் என்பதால் காடு எங்கும் பச்சைப் பசேலென்றும், பூக்களின் நறுமணத்தோடும் மிகவும் அழகாக இருந்தது. ஒரு நாள் அந்த மான் காட்டின் அழகை ரசித்துக் கொண்டே சென்றது. அப்பொழுது எதிரில் ஒரு குளம் தென்படவே தண்ணீர் குடிக்கலாம் என நினைத்து அந்த மான் குளத்தின் அருகே சென்றது. மற்ற விலங்குகள் எதுவும் குளத்தின் அருகில் இல்லாததால் குளத்து நீர் சலனமற்று மிகவும் அமைதியாக இருந்தது.
தண்ணீர் குடிப்பதற்காக கீழே குனிந்த மான் தண்ணீரில் பிரதிபலிக்கும் தன்னுடைய பிம்பம் முழுவதையும் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டது. "ஆஹா, நான் எவ்வளவு அழகாக இருக்கிறேனே! என்னுடைய கொம்புகள் எவ்வளவு அழகாக வலிமையாக இருக்கின்றன, என்னுடைய உடல் எவ்வளவு அழகாக இருக்கிறது!" என்று தன்னுடைய உடலின் ஒவ்வொரு பாகத்தையும் தண்ணீரில் தெரியும் பிம்பத்தை பார்த்து ரசித்துக் கொண்டே வந்தது.
பின்னர் காலைப் பார்க்கும்போது அதன் கால்கள் வளைந்து நெளிந்து காணப்பட்டன. "இவ்வளவு அழகான என்னுடைய உடலில் என்னுடைய கால்கள் மட்டும் அழகாக இல்லையே, அவை வளைந்து நெளிந்து காணப்படுகிறதே! ஒருவேளை என்னுடைய கால்கள் மட்டும் இன்னும் அழகாக இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்" என்று நினைத்தது.
சிறிது நேரம் கழித்து அந்த மான் தண்ணீர் குடித்து விட்டு குளத்தை விட்டு காட்டுக்குள் சென்று கொண்டிருந்தது. அப்போது அருகில் உள்ள ஒரு புதரில் மறைந்திருந்த புலி ஒன்று மானைப் பார்த்து துரத்த ஆரம்பித்தது. புலி துரத்துவதை உணர்ந்து கொண்ட மான் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இன்னும் வேகமாக ஓடியது. ஒரு அடர்ந்த புதரில் புகுந்து மான் ஓடும் போது அதன் கொம்புகள் அங்கிருந்த புதரின் கொடிகளுக்குள் மாட்டிக்கொண்டன. மான் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தும் அதனால் கொம்புகளை விடுவிக்கவே முடியவில்லை.
"அடடா! நான் எதை அழகு என்று நினைத்தேனோ அதுவே எனக்கு ஆபத்தாக மாறிவிட்டதே! எனது கொம்புகள் மாட்டிக்கொண்டதால் என்னால் ஓட முடியவில்லையே! ஆனால் நான் பார்த்து அசிங்கமாக நினைத்த என்னுடைய கால்கள் இவ்வளவு தூரம் போராடி என்னை புலியிடம் இருந்து காப்பாற்றி விட்டதே. ஆனாலும் என்ன பலன், இதோ என்னுடைய கொம்புகள் மாட்டிக்கொண்டதால் என்னுடைய இறுதிக்காலமும் நெருங்கி விட்டது," என நினைத்தது. மான் நினைத்தது போலவே புலியும் மானுக்கு மிக அருகில் வந்து அதனை உணவாக்கிக் கொண்டது.
இதைப்போல தான் குட்டீஸ், நாம் அன்றாடம் கண்ணால் பார்க்கும் பல உணவுப் பொருட்கள் நம் கண்களுக்கு வித்தை காட்டி நம்மை ஈர்க்க கூடியதாகவே இருக்கிறது. ஆனாலும் நாம் பெரியோர்களின் துணையோடு அவற்றை அலசி ஆராய்ந்து உடலுக்கு தேவையான ஆரோக்கியமான உணவுப் பொருட்களை மட்டுமே சாப்பிட வேண்டும். கண்களின் வழியாக ருசியை கடத்தும் கவர்ச்சி மிகுந்த விளம்பரங்களைப் பார்த்தோ, பல்வேறு வண்ணங்களைப் பார்த்தோ தரமற்ற உணவுப் பொருட்களை சாப்பிடக்கூடாது. மானின் கால்களை போன்று வலிமையான உடல் ஆரோக்கியத்தைப் பெற வேண்டுமானால் சத்து நிறைந்த உணவுகளையே சாப்பிட வேண்டும்.