சிறுகதை: 'போலீஸ் மாமா...'

Boy With Police Uncle
Boy With Police Uncle
Published on

சாயங்காலம் பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வரும்போது பிள்ளையார் கோவில் அருகில் கூட்டமாய் இருந்தது.

"அய்யோ... அம்மா..." என்று யாரோ கூட்டத்துக்குள் அலறும் சத்தமும் கேட்டது. ஆவல் அதிகம் மேலிட, கூட்டத்தை விலக்கிக்கொண்டு உள்ளே நுழைந்தான். அங்கே அவனுடன் படிக்கும் செந்திலும் நின்றிருந்தான்.

கொடிக் கம்பத்தில் ஒருவனைக் கட்டிப்போட்டு குச்சியால் நான்கைந்து பேர் அடித்துக் கொண்டிருந்தனர். இவனுக்கு கொஞ்சம் பயம் வந்தது. ஓரிருமுறை அவனது அப்பா அவனை குச்சியால் அடித்திருக்கிறார், அதனால்தான்.

செந்தில், தானாகவே சொன்னான், "இட்லி ஆச்சி இல்லே... அதோட சங்கிலியைப் பிடிச்சி இழுத்திருக்கான்... ஆச்சி குய்யோ முறையோனு கத்தவும் அக்கம் பக்கம் இருந்தவங்க ஓடிவந்து பிடிச்சிட்டாங்க. அதான் கம்பத்துல கட்டி வெளுக்கறாங்க..."

அதற்குள் "ஒதுங்கு... ஒதுங்கு..." என்ற அதட்டல் சத்தம் பக்கத்திலிருந்து கேட்டது.

இரண்டு போலீஸ்கார்கள் கையில் லத்தியுடன் கூட்டத்தை விலக்கிக்கொண்டு உள்ளே வந்தனர். சட்டென பின்வாங்கினான் கண்ணன்.

அவனுக்கு போலீஸைக் கண்டாலே பயம். எப்போது ஆரம்பித்தது அந்த பயம் என்று அவனுக்குத் தெரியாது. ஆனால் அவனுக்கு நினைவு தெரிந்த நாள் முதலாகவே காக்கிச் சட்டையை கண்டாலே நடுங்குவான். இப்போதும் மெல்ல பின்னோக்கி ஒதுங்கி மற்றொவருக்கு பின்னால் எட்டிப்பார்த்தபடி நின்றுகொண்டான்.

"நகருப்பா... போதும் நகரு..." என்றபடி அங்கே குச்சிகளுடன் நின்றிருந்தவர்களை ஒதுக்கிவிட்டு, ஒரு போலீஸ்காரர் திருடனின் கட்டுகளை அவிழ்த்தார். இன்னொருவர் அவனது ஒரு கையை இறுகப் பிடித்துக் கொண்டார்.

ஜீப் ஒன்று உறுமியபடி மெல்ல கூட்டத்தை விலக்கிக்கொண்டு உள்ளே நுழைந்தது.

"யாருப்பா அது போன்ல கூப்பிட்டது..."

"நான்தாங்க... சுந்தரேஷன்... கவுன்சிலர்..."

"யாரோட சங்கிலிய பறிச்சான்..."

"அதோ அழுதுக்கிட்டு உட்கார்ந்திருக்கு பாருங்க பாட்டி... இட்லி கடை வச்சு நடத்துதுங்க அது... கடையை மூடிட்டு வீட்டுக்குப் போய்க்கிட்டிருந்ததோட கழுத்துல கிடந்த சங்கிலியைப் பிடிச்சி இழுத்திருக்கான்... அது கூச்சல் போடவும், எல்லாரும் சேர்ந்து பிடிச்சு கட்டி வச்சிட்டோம்..."

"கட்டி மட்டுமா வச்சிருக்கீங்க... போட்டு இப்படி அடிச்சிருக்கீங்களே... செத்துக்கித்து போயிட்டானா அத்தனை பெரும் கொலை கேஸுல உள்ளே போயிருப்பீங்க..." என்று மிரட்டியவர் திரும்பி மூக்கச் சிந்திக்கொண்டிருந்த பாட்டியைக் கூப்பிட்டார்.

"பாட்டி... திருடனத்தான் பிடிச்சாச்சே... அப்புறம் ஏன் அழுதுக்கிட்டிருக்கே..."

"சங்கிலியைப் பிடிச்சு இழுத்ததுல காயம் பட்டிடுச்சுங்க..." ஒரு அம்மா குறுக்கிட்டார். அந்த பாட்டி மெல்ல எழுந்து வர அந்தம்மாள் பாட்டியின் கழுத்தில் தெரிந்த ரத்தக் கீரலையும் காண்பித்தார்.

கவுன்சிலர் என்று சொன்னவரைப் பார்த்து, "பாட்டியை ஸ்டேஷன்வரை கூட்டிட்டு வர ஏற்பாடு பண்ணுங்க... ஒரு ஸ்டேட்மெண்ட் எழுதி வாங்கிட்டு அனுப்பிச்சுடறோம்..."

போலீஸ் ஜீப் கிளம்பிவிட கூட்டம் கரைந்தது.

கண்ணனும் மெல்ல கிளம்பினான். அந்த போலீஸ்காரரின் உடல்கட்டும் கிடா மீசையும், கையில் இருந்த லத்தியும் கம்பீரமான தொப்பியும் இன்னும் கண்களுக்குள்ளேயே இருந்தன, அவனுக்கு. அப்போது உண்டான நடுக்கம் இன்னும் குறையவேயில்லை.

வீட்டுக்கு வந்த அவனை பார்த்த அவனது அம்மா கேட்டாள், "ஏன்டா என்னவோ மாதிரியா இருக்கே..."

நடந்ததை விவரித்தான்.

"போலீஸைப் பார்த்ததும் கழிஞ்சிருப்பியே..."

பதில் சொல்ல முடியாமல் முழித்தான்.

"அவங்களும் நம்மள மாதிரி மனுஷங்கதானேடா... ஏன் உனக்குமட்டும் உதறுதுன்னு தெரியலை..."

பதில் சொல்லத் தெரியாமல் திருதிருவென முழித்தான் இவன்.

அதேநேரம் ஒரு போலீஸ்காரர் துண்டால் முகம் துடைத்துக்கொண்டு பாத்ரூமிலிருந்து வெளிப்பட்டார்.

திடுக்கிட்டான். "ஐயோ..." என்று அலறியே விட்டான்.

அம்மாவும் அங்கே வர, "மாமன்டா... தருமபுரி சங்கர் மாமன்..." என்றாள். அவனுக்குத் தெரியும் அம்மாவின் மூன்றாவது தம்பி சங்கர்தான் அது.

"போன மாசம் போலீஸ்ல சேர்ந்துட்டான்..." என்றாள் சிரித்தபடியே.

"இந்தப் பயலுக்கு போலீஸைக் கண்டாலே பயம்... இப்போ வீட்டுக்குள்ளேயே போலீஸ்... என்ன பண்ணப் போறானோ..."

அவள் சொல்லிக்கொண்டிருக்கையிலேயே சிரித்தபடியே அவனை நெருங்கிய சங்கர், "மாப்ளே... பயப்படாத வாடா..." என்று அவனை வலுக்கட்டாயமாக இழுத்து அங்கே இருந்த நாற்காலியில் உட்கார்ந்து அப்படியே அவனை அவனது மடியில் உட்காரவைத்துக் கொண்டான்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை; ராட்சஸி!
Boy With Police Uncle

அவனது உடல் நடுங்குவதை உணர்ந்த சங்கர், "டேய்... மாமாடா... தெரியலையா... நல்ல பாரடா..." என்றவன், "யூனிபார்ம்ல இருக்கவும் பயந்துட்டான் போல..." என்று சிரித்தான் தன் அக்காவைப் பார்த்து.

மெல்ல அவனது பிடியிலிருந்து இறங்க முற்பட்டான் கண்ணன். அதேசமயம் கையில் டீ கிளாஸுடன் வந்த அம்மா தம்பிக்கு கொடுத்துவிட்டு, மகனிடம், "போயி முகம் அலம்பிட்டு வா... உனக்கும் டீ தாரேன்..." என்றாள்.

முகம் அலம்பிக்கொண்டு வந்தவனை மறுபடியும் இழுத்துக்கொண்டான் சங்கர்.

"மாப்ளே... இன்னுமா பயம்... ஏன் முழிக்கறே... நான் சங்கர்டா..." கலகலவென சிரித்தான்.

இப்போது அவனது பிடியில் நின்றிருந்தவனுக்கு கொஞ்சம் தைரியம் வந்தது. நிமிர்ந்து மாமாவைப் பார்த்தான். அங்கே கூட்டத்தில் பார்த்த அதே கிடா மீசை... ஆனால் இது மாமா என்று இப்போது ஒரு தைரியம் உண்டானது.

அம்மா அவனுக்கு டீ கிளாஸை கொண்டு வந்து கொடுத்தாள்.

அவனிடம் ஒரு பொட்டலத்தை நீட்டினான் சங்கர். கேக் வாசனை மூக்கைத் துளைத்தது. டீயை வைத்துவிட்டு, பொட்டலத்தை பிரித்து கேக்கை சாப்பிட்டான். அவனுக்குப் பிடித்த தேங்காய் பன் உள்ளே இருந்தது.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: பாட்டு பாடவா!
Boy With Police Uncle

மெல்ல எழுந்தான் சங்கர். "அக்கா வர்றேங்கா... அப்படியே ஸ்டேஷன் போயிட்டு அப்படியே ஊருக்கு கிளம்பறேன்... வரட்டா... மாப்ளே... வர்றேன்டா..."

சங்கர் கிளம்ப அம்மாவுடன் சேர்ந்து கண்ணும் வாசல் வரை வந்து டாட்டா காட்டினான்.

அதற்கப்புறம் எங்கே போலீஸைப் பார்த்தாலும் முன்னைப் போல பயம் வருவதில்லை, அவனுக்கு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com