சிறுவர் சிறுகதை: குட்டி முயலின் அம்மா யார்? சிங்க ராஜாவின் தீர்ப்பு!

ஒரே குட்டி முயலுக்கு உரிமை கொண்டாடிய இரு தாய்மார்கள் - கிர் காட்டு சிங்க ராஜாவின் சாதுரியமான தீர்ப்பும், நரியின் ரகசிய மந்திரமும் கலந்த சுவாரசியமான நீதி கதை!
Wild animals
Tamil short story: Wild animalsImage credit: AI Image
Updated on

குஜராத்தில் கிர் வனம். இந்தியாவில் சிங்கங்கள் இங்குதான் உள்ளன. கிர் வனம் பெரிய வனமானதால் மூன்று அல்லது நான்கு ராஜ்யங்கள் செயல் புரிந்தன.

நாம் இங்கே ஒரு ராஜ்ய விசாரணையைப் பார்க்கப் போகிறோம்.
காட்டுக்கு ராஜா சிங்கம்தான். வெறும் சிங்கம் அல்ல கர்ஜிக்கும் சிங்கம்.

சிங்கம் ஒரு மந்திரி சபை வைத்து இருந்தது. யானை, நரி, நாய், கரடி, சிறுத்தை என்று 5 பேரைக் கொண்ட சபை. ராணுவம் அல்லது காவல்துறை குரங்குகளைக் கொண்டது. இவை எதற்கும் அஞ்சுவதில்லை.

இன்று சபைக்கு ஒரு வித்தியாசமான வழக்கு வந்தது. வழக்கு என்ன என்றால் இரண்டு பெரிய முயல்கள் ஒரு குட்டி முயலை தமது குழந்தையாக உரிமைக் கொண்டாடினார்கள்.

விசித்திரமான இந்த வழக்கில் அரசன் ராஜா சிங்கம்… இருவரையும் எப்படி எல்லாமோ கேட்டார். ஏன்? மிரட்டிக்கூட கேட்டுப் பார்த்தார். ஆனால், 2 பெரிய முயல்களும் தங்கள் முடிவை மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லை. ராஜா, நரி அமைச்சருடன் ரகசியமாக பேசினார். பின்னர் பிற மந்திரி சபை உறுப்பினர்களிடமும் பேசினார்.

ராஜா சிங்கம் முடிவு எடுத்துவிட்டார். கடைசியாக ஒரு முயலைக் கேட்டார். “இது உன் குழந்தையா?”

“ஆமாம். கடவுள் சத்தியமாக...” என்று சொன்னது.

பிறகு மற்றொரு முயலிடம் அதே கேள்வியைக் கேட்டார்…

அந்தப் பெரிய முயல்… “ஆம் கடவுள் சத்தியமாக…” என்றது.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: புத்திசாலி குரங்கு!
Wild animals

ராஜா சிங்கம் ஒரு முடிவுக்கு வந்தது.

“நீங்கள் இருவருமே குட்டி முயல் உங்கள் குழந்தை என்று சொல்கிறீர்கள்… எனவே, நான் தீர்ப்பை சொல்லப் போகிறேன்.

இந்த குட்டி முயலை இரண்டாக வெட்டி இருவருக்கும் ஒரு துண்டு தருவது என்பதே என் தீர்ப்பு. இதுதான் இந்தச் சபையின் முடிவு. ராணுவ தளபதியே…! வந்து குட்டியை இரு துண்டு போடுங்கள்…!” என்று ஆணித்தரமாகத் தீர்ப்பு வழங்கியது.

“அய்யோ... அம்மா…! நான் என்ன செய்வேன்…? அரசே… என் குட்டி எங்கே இருந்தாலும் வாழவேண்டும்; என் குட்டியைத் துண்டு போட வேண்டாம்; என் குட்டியை அந்த முயலே வைத்துக்கொள்ளட்டும்“ என்று அழுது புலம்பியது ஒரு தாய் முயல்.

ராஜா கர்ஜனை செய்துவிட்டு, “பெற்ற தாய்க்குத்தான் தனது குழந்தை எங்கிருந்தாலும் வாழ்க… என்று சொல்லமுடியும். இவர்தான் உண்மைத் தாய். தளபதியே, அந்தப் பொய் சொன்ன முயலை கைது செய்து சிறையில் அடையுங்கள்… அந்தக் குட்டி முயலை அதன் தாயிடம் கொடுத்துவிடுங்கள்…! இத்துடன் சபை கலையலாம்.”

மந்திரி சபை மற்றும் ராஜ்ய சபையில் உள்ள அனைவரும் “நீதி வாழ்க…!” என்று கோஷம் போட்டார்கள். 

ராஜா தனியே வந்து மந்திரி நரிக்கு நன்றி தெரிவித்தார்.

"குட்டி முயலை இரண்டு துண்டு போடுவதுதான் தீர்ப்பாக இருக்க வேண்டும். அப்போது உண்மை தெரிந்துவிடும் என நீங்கள் கொடுத்த ஐடியாதான் இப்பிரச்னையைத் தீர்த்துவைத்தது."

நீதி பிழைத்தது…!  நியாயம் நிலைத்தது..!!

logo
Kalki Online
kalkionline.com