

முல்லா மிகவும் அறிவாளி என்றும், எவ்வளவு பெரிய ஆபத்து வந்தாலும் தன் அறிவைப் பயன்படுத்தித் தப்பி விடுவார் என்றும், நாட்டு மக்கள் பேசிக்கொள்வது மன்னரின் காதுக்கு எட்டியது.
மன்னர், முல்லாவின் அறிவாற்றலைச் சோதிப்பதற்காக, ஒரு நாள் அவரைத் தன் சபைக்கு வரவழைத்தார்.
முல்லா மன்னரை வணங்கினார்.
மன்னர் முல்லாவிடம், "உன் அறிவைப் பரிசோதனை செய்ய நினைக்கிறேன். நீ ஏதேனும் ஒன்றைக் கூறு. நீ சொல்வது உண்மையாக இருந்தால், உன் தலை வெட்டப்படும். நீ சொல்வது பொய்யாக இருந்தால், நீ தூக்கில் ஏற்றப்படுவாய்" என்றார்.
முல்லா உண்மை சொன்னாலும், பொய் சொன்னாலும், அவருடைய உயிருக்கு ஆபத்து நிச்சயம்! முல்லா இந்த நிலைமையை எப்படிச் சமாளிக்கப் போகிறார் என்று சபையில் இருந்தவர்கள் அவரை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
முல்லா பதற்றம் ஏதுமின்றி, மன்னரை நோக்கி, "மன்னர் அவர்களே, தாங்கள் என்னை தூக்கில் போடப் போகிறீர்கள்!" என்று கூறினார்.
அதைக்கேட்ட மன்னர் திகைப்படைந்தார்.
முல்லா சொன்னதை ஆராய்ந்து பார்த்தால்:
முல்லா சொன்னது உண்மையானால், அவர் கூறியபடி மன்னர் அவரைத் தூக்கில் போட வேண்டும். ஆனால், நிபந்தனைப்படி, உண்மை சொன்னால் அவருடைய தலைதான் வெட்டப்பட வேண்டும். அவ்வாறு தலை வெட்டப்பட்டால், "நீங்கள் என்னைத் தூக்கில் போடப் போகிறீர்கள்" என்று முல்லா சொன்னது பொய்யாகிவிடும்.
முல்லா சொன்னது பொய் என்று வைத்துக்கொண்டால், நிபந்தனைப்படி, அவரைத் தூக்கில் போட வேண்டும். அவ்வாறு தூக்கில் போட்டால், "நீங்கள் என்னைத் தூக்கில் போடப் போகிறீர்கள்" என்று முல்லா சொன்னது உண்மை என்று ஆகிவிடும். உண்மை எனக் கருதினால், அவரைத் தூக்கில் போடாமல் கழுத்தை வெட்ட வேண்டும்.
இப்படி ஒரு குழப்பத்தை முல்லா தன் அறிவாற்றலால் ஏற்படுத்தி, மன்னரைத் திக்குமுக்காடச் செய்துவிட்டார். இதனால், மன்னரால் அவருக்கு எந்தத் தண்டனையும் கொடுக்க முடியவில்லை.
முல்லாவின் அறிவாற்றலைக் கண்ட மன்னன் மிகவும் மகிழ்ச்சி அடைந்து, பொன்னையும் பொருளையும் பரிசாகக் கொடுத்து அவரை அனுப்பிவைத்தார்.
குட்டீஸ்... தெரிந்துகொண்டீர்களா?
எந்த இடத்திலும் நமது அறிவாற்றலைப் பயன்படுத்தினால், நாம் முன்னேறலாம். செய்வீர்களா?