வெற்றியும் தோல்வியும்
கண்ணனுக்கு ஓவியம் வரைவதில் சிறு வயதிலிருந்தே மிகுந்த ஆர்வம் உண்டு. அவனது பெற்றோரும் அவனை அருகில் இருந்த ஓவியப் பள்ளியில் சேர்த்தனர். ஓவியம் வரைவதற்குத் தேவையான வண்ணங்கள், பென்சில்கள், தூரிகைகள் (Brush), உறுதியான சார்ட் தாள்கள், வண்ணத்தாள்கள் மற்றும் பலகைகள் என எல்லாவற்றையுமே வாங்கித் தந்தனர்.
பள்ளி விட்டு வீட்டுக்கு வந்தவுடன் சிற்றுண்டி சாப்பிடுவான்; பிறகு வீட்டுப்பாடம் ஏதேனும் இருந்தால் அதனை முதலில் முடிப்பான். பின்னரே ஓவியப் பள்ளிக்குச் செல்வான். அதற்குப் பிறகுதான் தெருவில் நண்பர்களுடன் விளையாட்டு.
தனது புத்தகங்களில் உள்ள ஓவியங்களைத் தத்ரூபமாகத் தனது ஓவியக் கையேட்டில் வரைந்து பார்ப்பான். இயற்கைக் காட்சிகள் மற்றும் சூழலியல் பற்றிய ஓவியங்களை வரைவான். அவனது ஓவியங்கள் மிகச் சிறப்பாக இருக்கும்.
சில சமயங்களில், வண்ணம் தீட்டுவது அல்லது ஓவியத்தின் இறுதிநிலைத் திருத்தங்கள் செய்வதில் அவன் கவனம் செலுத்த மாட்டான். அவனது அம்மா அதைச் சுட்டிக்காட்டுவார்; பின்னர் அதனைச் சரி செய்வான். அவனது வகுப்பில் அவன் வரைந்த பல படங்கள் சுவரை அலங்கரித்தன.
தான் நன்றாக ஓவியம் வரைகிறோம் என்ற எண்ணமும் பெருமையும் அவனுள் மெல்ல வளர ஆரம்பித்தது. பள்ளி அளவிலான போட்டிகளில் முதலிடம், பள்ளியின் கண்காட்சி நிகழ்வுகளில் பங்களிப்பு மற்றும் அனைவரின் பாராட்டுகள் அவனை மகிழ்வித்தன.
நாளடைவில், தனது ஓவியங்களில் ‘இறுதிக்கட்ட திருத்தங்கள்’ செய்வதைப் பற்றிய அம்மாவின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுப்பதை அவன் நிறுத்திவிட்டான். “அதெல்லாம் பரவாயில்லை அம்மா! ஒருத்தரும் கவனிக்க மாட்டாங்க,” எனச் சொல்ல ஆரம்பித்தான்.
எல்லாம் அவனது பள்ளியில் வசந்த் எனும் புது மாணவன் வந்து சேரும் வரைதான்!
வசந்த் வேறு வகுப்பு மாணவன்; அவனும் நன்றாக ஓவியம் வரைந்தான். அவனது ஓவியத் திறமையைக் கண்டு அவனுக்கும் பல வாய்ப்புகளை ஆசிரியர்கள் தந்தனர்.
அடுத்த பருவத்தில் நடைபெற்ற பள்ளி அளவிலான ஓவியப் போட்டியில் கண்ணன் பெயரைக் கொடுத்திருந்தான். அதில் முதலிடம் பெறுபவர்கள் மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் பங்கு பெறத் தகுதி பெறுவார்கள். கண்ணன், நீர் நிலைகளைப் பாதுகாப்பது குறித்து மிக அழகானதொரு ஓவியத்தை வரையத் தீர்மானித்தான்.
போட்டி முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. கண்ணனுக்கு அதிர்ச்சி! அவனது ஓவியம் இரண்டாம் இடம்தான் பெற்றது. புது மாணவன் வசந்த் முதலிடம் பெற்றான். பள்ளியில் யாருடனும் பேசாமல் வீட்டுக்கு வந்து, அம்மாவிடம் சொல்லி அழுதான்.
“போட்டியில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும். நமது திறமைகளை வெளிக்கொணரும் ஒரு யுக்திதான் போட்டிகள். முடிவுகளைப் பற்றிக் கவலைப்படக் கூடாது,” என அம்மா ஆறுதல் சொன்னார்.
“அம்மா! நான்தான் முதலிடம் பிடிப்பேன் என நினைத்தேன், கிடைக்கவில்லையே!” என கண்ணன் அழுதான். அம்மா அவனை மீண்டும் தேற்றினார்.
“வசந்த் வரைந்துள்ள ஓவியத்தைப் பார். அதில் உள்ள சிறப்புகளைக் கவனி. அதுபோல உனது ஓவியத்தில் ஏதேனும் சிறு குறைகள் இருக்கிறதா என்பதையும் கவனி.”
“புரிகிறது அம்மா! இனிமேல் கவனமாக இருப்பேன். ஓவியத்தின் முழுப் பரிமாணத்திற்கும் முழு கவனம் தருவேன். அடுத்த முறை பரிசு...”
“கண்ணா! பரிசு யாருக்குக் கிடைத்தாலும் சக போட்டியாளர்களைப் பாராட்ட வேண்டும். நாம் நம்முடைய திறமையைச் செம்மைப்படுத்த வேண்டும். பிறர் மீது காழ்ப்புணர்ச்சியையும் வெறுப்புணர்வையும் வளர்த்துக்கொள்ளக் கூடாது.”
“சரி அம்மா!”
“நாளை வசந்துக்கு வாழ்த்துத் தெரிவித்துப் பாராட்டு!”
“நிச்சயமாக அம்மா.”
கண்ணனின் ஓவியம் இனி நிச்சயமாக மிளிரும்!

