
ஒரு நாள் தெனாலிராமனும், கிருஷ்ணதேவராயரும் நகர்வலம் போய்க்கொண்டு இருந்தார்கள். அப்போது பக்கத்தில் இருந்த பொதுக் கிணறு அருகே ஒரே கூட்டமாக இருந்தது.
உடனே அரசர், அங்கிருந்தவர்களிடம் தெனாலிராமனை விட்டு விசாரிக்கச் சொன்னார்.
தெனாலிராமன் அங்கு சென்று விசாரித்தபோது, "இங்கு நீர் இறைக்கும் வாளி அடிக்கடி காணாமல் போகிறது. புது வாளி வாங்கி வைத்தாலும் திருடிவிட்டுப் போய்விடுகிறார்கள்," என்று அங்கிருந்தவர்கள் சொன்னார்கள்.
இதைக் கேட்ட அரசர், தெனாலிராமனிடம் அந்தத் திருடனைக் கண்டு பிடிக்கச் சொன்னார்.
உடனே அந்தக் கிணற்றுப் பக்கம் சென்ற தெனாலிராமன், அங்கு நிறைய தடங்கள் இருப்பதைக் கண்டு, அரசரிடம், "இந்தக் காலடித் தடம் மட்டும் வேகமாக வந்துவிட்டுப் போனது போல் தெரிகிறது. அதனால் இது திருடனுடையதாக இருக்கலாம்," என்று சொன்னார்.
உடனே அரசர், "தெனாலிராமா, இந்தத் திருடனை எப்படி கண்டு பிடிக்கப் போகிறீர்கள்?" என்று கேட்டார்.
உடனே தெனாலிராமன், "அரண்மனைக்குப் பக்கத்தில் இருக்கிற செருப்பு தைப்பவரைக் கூட்டி வந்து, இந்தக் காலடித் தடத்துக்கு ஏற்ற மாதிரி செருப்பு செய்யச் சொல்லுவோம். அது இந்தக் கிராமத்தில் இருக்கிற எல்லோரையும் போடச் சொல்லி, யாருக்குப் பொருந்துகிறதோ அவர்களை நாம் பாதாளச் சிறையில் வைத்து விசாரித்தால் உண்மை தெரிந்துவிடும்," என்று சொன்னார்.
உடனே அந்தச் செருப்பு தைப்பவரைக் கூட்டி வந்து, தடம் காண்பிக்கப்பட்டது. அவரும் இந்தக் காலடித் தடத்தை அளவெடுத்தார். அவர் செருப்பு தைக்க ஆரம்பிக்கும்போது தெனாலிராமன் மெதுவாக அவர் காதில் எதையோ சொன்னார்.
அதன் பின் அவர் ஒரு செருப்பு தைத்துக் கொடுத்தார்.
உடனே அரசர், "ஒவ்வொருத்தராக இந்தச் செருப்பைப் போட்டுப் பாருங்கள்," என்று சொன்னார்.
அதற்கு தெனாலிராமன், "அரசே, இந்தச் செருப்பு நல்லவர்கள் காலுக்குக்கூடப் பொருந்தலாம். அதனால் அவர்களுக்குக் கெட்ட பெயர் கிடைக்கக் கூடாது. அதனால் நாம் இந்தச் சோதனையைத் தனி அறையில் வைத்துப் பண்ணலாமா?" என்று கேட்டார்.
உடனே அரசரும், "சரி," என்று சொன்னார்.
கிராம மக்கள் ஒவ்வொருவராக அந்தச் செருப்பு வைத்திருந்த அறைக்குள் போய், செருப்பைப் போட்டுப் பார்த்துவிட்டு வெளியே வந்தனர். அங்கிருந்த அரசரிடமும் தெனாலிராமனிடமும் ரகசியமாக, "அரசே! எனக்கு அந்தச் செருப்பு சேருகிறது. ஆனா நான் திருடன் இல்லை," எனச் சொல்ல ஆரம்பித்தார்கள்.
கிட்டத்தட்ட எல்லோருக்கும் அந்தச் செருப்பு பொருந்திவிட்டது! உடனே அரசருக்குச் சிறியதாக ஒரு சந்தேகம் வந்தது. அப்போது ஒரு ஆள் வந்து, "எனக்கு அந்தச் செருப்பு சேரவில்லை. நான் திருடன் இல்லை," என்று சொன்னான். உடனே தெனாலிராமன், அவனைக் கைது செய்யச் சொல்லி காவலாளியிடம் கூறினார். இதைப் பார்த்த அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது.
"எங்கள் எல்லோரையும் விட்டுவிட்டு, 'சரியாகப் பொருந்தவில்லை' என்று சொன்ன திருடனை எப்படி கண்டுபிடித்தீர்கள்?" என்று தெனாலிராமனிடம் கேட்டார்கள். அதற்கு தெனாலிராமன், "அரசே! நான் உங்களிடம் காட்டிய காலடிக்கும் திருடனுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இந்தச் செருப்பு தைப்பவரிடம், அளவு எல்லாம் மனிதனுக்கும் பொருந்துகிற மாதிரி பெரிய செருப்பாகத் தைக்கச் சொல்லி ரகசியமாகச் சொன்னேன்.
அதனால் தான் எல்லோருக்கும் அந்தச் செருப்பு பொருந்திவிட்டது. ஆனால் சிறிய கால் உடைய அந்தத் திருடன் தனக்கு மட்டும் பொருந்தவில்லை என்று பொய் சொன்னான். அதனால் அவன்தான் திருடன் என்று கண்டுபிடித்தேன்," என்று சொன்னார்.
இதைக் கேட்ட அரசர் மட்டுமல்லாமல் அங்கிருந்த மக்கள் அனைவரும் மிகவும் ஆச்சரியப்பட்டார்கள். தெனாலிராமனை அரசரும் மற்றவர்களும் பாராட்டினார்கள். அதன் பின் அந்த ஊரில் எங்கும் திருட்டே நடைபெறவில்லை.
குட்டீஸ்... தெரிந்துகொண்டீர்களா? முன்யோசனையுடன் எந்தச் செயலிலும் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.