
ஒரு முறை அக்பரின் அரசவைக்கு, ஊழல் அதிகாரி ஒருவரைக் கைது செய்து விசாரணைக்குக் கூட்டி வந்தார்கள். அவர், களஞ்சியத்தில் அதிகாரியாக இருப்பதாகத் தெரிவித்தார்கள். விசாரணைக் கைதியாக அந்த அதிகாரியைச் சிறையில் அடைக்கும்படி உத்தரவிட்டார் அக்பர்.
அக்பர் பீர்பாலிடம் கேட்டார். "பீர்பால், ஒரு மனிதன் ஊழல் செய்கிறான் என்றால், அவன் வேலை செய்யும் இடத்தில் அதற்கான வாய்ப்புகள் இருக்கும் காரணத்தால் என்று சொல்லலாமா?" என்றார். "இல்லை, அரசே, ஊழல் பேர்வழிகள் எந்த வேலையிலிருந்தாலும், பணம் பறிப்பதற்கான வழியைக் கண்டுபிடித்து ஊழல் செய்ய முயற்சி செய்வார்கள்," என்றார் பீர்பால்.
அவையிலிருந்த மற்றொரு அமைச்சர் அதை மறுத்தார். "அவ்வாறு சொல்ல முடியாது. வாய்ப்புகள் இருப்பதால்தான் ஒரு மனிதன் ஊழல் செய்கிறான். அவன் வேலை செய்யும் இடத்தில் அதற்கான வாய்ப்புகள் இல்லையென்றால் அவனால் ஊழல் செய்ய முடியாது. ஏமாற்றிப் பணம் பறிக்க முடியாத அரசு வேலைகள் எத்தனையோ இருக்கின்றன. இந்த அதிகாரியை அதைப் போன்ற இடத்தில் பணியில் அமர்த்தினால், நிச்சயம் அவர் ஊழல் செய்ய மாட்டார். அவர் திருந்துவதற்கும் வாய்ப்பு கிடைக்கும்," என்றார்.
பீர்பால் அதை ஒத்துக் கொள்ளவில்லை. "நேர்மையற்ற மனிதன், எங்கிருந்தாலும், அவன் அங்கும் செய்யும் பணியினால், தனக்கு என்ன ஆதாயம் கிடைக்கும் என்று அறிந்து ஊழலில் ஈடுபடுவான்," என்றார்.
அந்த அமைச்சரிடம், ஊழல் செய்ய வாய்ப்பில்லாத வேலை ஒன்றைச் சொல்லும்படிப் பணித்தார் அக்பர். "அதிகாரியை, யமுனா நதிக்கரையில் அமர்ந்து, நதியில் எத்தனை அலைகள் ஏற்படுகின்றன என்று கணக்கெடுக்கச் சொல்லலாம். அந்த வேலையில் அவருக்கு ஊழல் செய்யும் வாய்ப்பே இல்லை," என்றார் அமைச்சர். சிறையிலிருந்த அதிகாரி, யமுனா நதிக்கரைப் பணிக்கு அமர்த்தப்பட்டார்.
சில நாட்கள் சென்றன. அந்த அதிகாரியைப் பற்றி புகார் ஒன்றும் வரவில்லை. அமைச்சர் அரசரிடம், "அரசே, நான் சொன்னது போல, அந்த அதிகாரிக்குப் புதிய வேலையில் ஊழல் செய்ய வாய்ப்பு இருக்கவில்லை. ஆகவே, ஊழல் நடப்பது, அந்த அதிகாரி பணி செய்யும் இடத்தைப் பொறுத்தது என்பது நிரூபணமாகிறது," என்றார்.
"நாம் நேரிலே சென்று பார்த்து வரலாம்," என்று யோசனை சொன்னார் பீர்பால்.
அரசர் ஒத்துக் கொள்ள, அடுத்த நாள் அக்பர், பீர்பால், அமைச்சர் மூவரும் மீன் பிடிப்பவர்கள் போல வேடமணிந்து, யமுனா நதியில் சென்றனர். அதிகாரி அமைந்திருந்த கரையருகே வந்தவுடன், அதிகாரி அவர்களைக் கூப்பிட்டார். "நீங்கள் நதியில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டார். "நாங்கள் மீனவர்கள். மீன் இருக்கும் இடம் தேடிச் சென்று கொண்டிருக்கிறோம்," என்றார் அக்பர்.
"மகாராஜா என்னிடம் யமுனையில் எழுகின்ற அலைகள் எத்தனை என்று கணக்கெடுக்கச் சொல்லி இருக்கிறார். நீங்கள், நதியில் இங்கும் அங்கும் செல்வதால் என்னுடைய வேலையைச் செய்ய முடியாமல் தடுக்கிறீர்கள். அரசு அதிகாரியைப் பணி செய்ய முடியாமல் தடுப்பவர்களுக்கு ஒரு வருடம் சிறைத் தண்டனை என்பது உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்.
"சின்ன தப்புக்கு ஒரு வருட சிறைத் தண்டனையா? நீங்கள் எங்களைப் பற்றி அரசரிடம் புகார் சொல்லாதீர்கள். உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்," என்றார் பீர்பால்.
"நீங்கள் சிறைத் தண்டனையிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால், எனக்கு 100 காசுகள் கொடுக்க வேண்டும். அப்போது, உங்களைப் பற்றி அரசரிடம் புகார் செய்ய மாட்டேன்," என்றார் அதிகாரி.
"நாங்கள் ஏழை மீனவர்கள். எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை," என்று சொன்னவுடன் பேரம் பேச ஆரம்பித்தார் அந்த அதிகாரி.
பொறுமையிழந்த அக்பர், காவலர்களைக் கூப்பிட்டு, அதிகாரியைச் சிறையில் அடைத்தார். "பீர்பால், நேர்மையற்ற மனிதர்கள் எந்த இடத்தில் பணியிலிருந்தாலும், மற்றவர்களை அச்சுறுத்திப் பணம் பறிக்க நினைப்பார்கள். ஊழல் மனிதர்களின் தன்மையைப் பொறுத்தது. அவர்கள் வேலை செய்யும் இடத்தைப் பொறுத்தது இல்லை. நீ சொன்னது முற்றிலும் சரி," என்றார் அக்பர்.