

1970-களின் காலகட்டம்... சின்ன வயதில் மாலை இருட்டி ஏழு மணி வாக்கில், 'டிங்... டிங்' என அந்த மணி சத்தம் கேட்கும். தெரு முனையில் சோன்பப்டி தள்ளுவண்டி வருகிறது என்று அர்த்தம்!
அம்மாவிடம் பத்து பைசா வாங்கித் தந்தால், வண்டிக்காரர் ஒரு வார இதழின் கிழித்த பேப்பரில், கண்ணாடி ஜாடி மூடியைத் திறந்து கையால் நிறைய அள்ளி வைப்பது போன்ற பாவனையில் கொஞ்சம் தருவார். ஆஹா... என்ன ருசி!
இன்று பல இனிப்புக் கடைகள் சோன்பப்டி விற்றாலும், கும்பகோணம் கடைத்தெரு 'முராரி கடை' சோன்பப்டி ருசி அலாதியானது. அறுபது, எழுபது வருஷத்துப் பழமையான கடை அது.
ஐம்பது கிராம் வாங்கினால் போதும். ஒரு சதுர வில்லை... பழைய பட்டு வேஷ்டி நிறத்தில் இருக்கும்; லேசான நெய் வாசனை வீசும். மென்மையாக அமுக்கினால் மையத்தில் விரிசல் விடும். உள்ளே சிறு சிறு கம்பிகள் போல ஜீனி இழைகள் தென்படும்; அது லேசாக நாக்கில் குத்துவது போல வருடும். விரலால் அழுத்தினால் அமுங்க வேண்டும், அதுதான் நல்ல பதமான சோன்பப்டி.
வாயில் போட்டு அப்படியே விழுங்காமல், நாக்கு முழுதும் படுமாறு சுவைக்க வேண்டும். மெல்லக் கரைய ஆரம்பிக்கும் பாருங்கள்... அந்த ருசியை வர்ணிக்க கம்பர், காளிதாசன் அல்லது கண்ணதாசன் தான் வரவேண்டும்! "இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே" என்பார் மகாகவி பாரதியார்; இது நாக்கில் கரையும்போது அந்தப் பாட்டின் உண்மைப் பொருள் புரியும். அது ஒரு சுகமான அனுபவம்.
மற்ற இனிப்புகளைப் போலச் சாப்பிடச் சாப்பிடத் திகட்டாது; சுவை மரத்துப் போகாமல் கடைசித் துகள் வரை ருசிக்கும். கையில் ஏதும் ஒட்டியிருந்தால், யாரும் பார்க்காத வண்ணம் நக்கிவிடலாம். இதற்குப் பக்கத் துணையாகக் காரசேவோ, மிக்சரோ தேவையில்லை; இது 'தனிக்காட்டு ராஜா' சோன்பப்டி!
கடைத்தெரு குறுகலான நாற்சந்தியில், மெயின் ரோட்டில் இருக்கிறது முராரி கடை. பெரிய பெரிய கார்களை நிறுத்தி அவசர அவசரமாகச் சோன்பப்டி வாங்கிச் செல்லும் வெளியூர்க்காரர்களை அங்கே பார்க்கலாம். எல்லாம் இணையச் செய்திகளின் வேலை! இந்தச் சோன்பப்டிக்குத் துணையாக முந்திரி பக்கோடாவும் சிறப்பு, ஆனால் விலை தான் கொஞ்சம் அதிகம்.
இப்போது அடிக்கடி சோன்பப்டி வாங்க முடிவதில்லை, எல்லாம் 'சுகர்' பிரச்சினைதான்! எப்போதாவது நூறு கிராம் வாங்கி வீட்டு அம்மணியுடன் பங்கிடும்போது, "இத்தனை சுகரை வச்சுக்கிட்டு இது தேவையா?" என்பாள். ஆனால், அதைச் சாப்பிட்டு முடித்ததும், "கும்பகோணத்துக்காரங்களுக்கு நாக்கு நீளம் தான்" என்று மெச்சிக் கொள்வாள்!