
சுஷ்மாவும், ரேஷ்மாவும் ஒரே வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார்கள்.
சுஷ்மா அழகாய் இருப்பாள்; நன்றாக பாடவும் செய்வாள். ஆதலால் கர்வமாய் நடந்து கொள்வாள். சுஷ்மாவுக்கு அவளுடைய வகுப்பில் பிள்ளைகள் எல்லோரும் தன்னையே புகழ்கிறார்கள் என்ற பெருமிதம்.
ஆனால், ரேஷ்மா சுமாரான அழகுதான். ரேஷ்மாவிற்கு பணிவாக நடப்பது மிகவும் பிடிக்கும். வகுப்பில் எல்லா பிள்ளைகளிடமும் சரிசமமாக நடந்து கொள்வாள். ஆதலால், அவளிடம் பிள்ளைகள் அன்பு காட்டுவார்கள்.
”நம்மிடம் திறமையும், அழகும் இருக்கிறது. ஆதலால் நம்மை புகழ்கிறார்கள். ஆனால், ரேஷ்மாவிடம் திறமை அவ்வளவாக இல்லை, அழகும் சற்று குறைச்சல்தான். இருந்தாலும் அவளிடமுள்ள நல்ல குணங்களுக்கு பள்ளி ஆசிரியர்களும், பிள்ளைகளும் அவள் மேல் தனிகவனம் செலுத்தி அன்பு பாராட்டுவார்கள்..." என்று சுஷ்மாவிற்கு பொறாமையாக இருந்தது. அவளின் பொறாமைக் குணத்தால், ரேஷ்மாவை விளையாடும் போது ஒதுக்கலானாள்.
சுஷ்மாவின் செயலைப் பார்த்த வகுப்பு ஆசிரியர், சுஷ்மாவிற்கு நல்ல புத்திமதிகள் சொன்னார். அப்படியும் அவள் திருந்தவில்லை.
பள்ளியில் ஒரு நாள் சுற்றுலா செல்வதாய் ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு பூங்காவில் வகுப்பு பிள்ளைகள் மரத்தடியில் கூடியிருந்தனர்.
அந்த மரத்தின் கிளையில், காகத்தின் கூடு இருந்தது. அந்த கூட்டினருகே, ஒரு குயில் அமர அதனை காகம் விரட்டியடித்தது. மீண்டும் மீண்டும் விரட்டியடிக்க வகுப்பு பிள்ளைகள், "டீச்சர், ஏன் அந்த காகம் குயிலை விரட்டியடிக்கிறது” என்று கேள்வி கேட்டனர்.
அதற்கு டீச்சர், ”குயிலுக்கு இனிமையான குரலிருக்கிறது. அதன் கூவல் எல்லோருக்கும் பிடிக்கும், ஆனால் அதற்கு குஞ்சு பொரிக்க தெரியாது, ஆகவே, காக்கையின் கூட்டில் முட்டையிட்டு விட்டு பறந்துவிடும். அதனை காகம், தனது முட்டையென்று நினைத்து குஞ்சுபொரிப்பதற்காக அடைகாத்து நிற்கும். குஞ்சு பொரிந்து அது வளர்ந்த பின்தான் அது தன்னுடைய குஞ்சு இல்லை என்பது புரிந்து, விரட்ட ஆரம்பிக்கும். குயில் அழகானதுதான், அதனுடைய குரல் இனிமையானதுதான். ஆனால் அதனுடைய குஞ்சை பொரிப்பதற்கு, இன்னொரு பறவையின் தயவு தேவைப்படுகிறதல்லவா” என்று சொல்லி விட்டு ரேஷ்மாவையும், சுஷ்மாவையும் ஜாடை மாடையாக பார்த்தார்.
சுஷ்மா இதைக் கேட்டவுடன் ரேஷ்மாவின் மேலிருந்த பொறாமைக் குணத்தை அன்றே விட்டுவிட்டு, எல்லா பிள்ளைகளிடமும் ரேஷ்மாவைப் போல அன்பை செலுத்த துவங்கினாள். ரேஷ்மாவும், சுஷ்மாவும் நெருங்கிய தோழிகளாகி விளையாடினார்கள்.