
"நரக சதுர்த்தின்னு சொல்ற தீபாவளிக் கதை என்ன, சொல்லுங்க தாத்தா?"
பேத்தி ரம்யா கேட்கையில், அப்பாசாமி தாத்தாவிற்கு அது பற்றிச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை. தீபாவளிக் கதை தெரிந்திருந்தாலும், அநேகர் மறந்து விடுகின்றனர். அப்பாசாமி தாத்தாவும் அந்த வகைதான். இவர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டு அப்போது அங்கே வந்த சீதாப் பாட்டி, அவர்களிடம் கூறிய தீபாவளிக் கதையை நாமும் தெரிந்துகொள்ளலாமா?
மகாவிஷ்ணுவிற்கும், பூமாதேவிக்கும் மகனாகப் பிறந்தவன் தான் நரகாசுரன். தாய் பூமாதேவி, தன்னுடைய மகன் நரகாசுரனைத் தீயவர்களுடன் சேரவிடாமல், வீட்டிற்குள்ளேயே வைத்துச் சிறந்த முறையில் வளர்த்து வந்தாள். நாராயணன் நாமத்தைச் சொல்லிக் கொடுத்து, அதைத் தினமும் ஜெபம் செய்யச் சொன்னாள். ஆனால்... இறைவனுக்கு மகனாகப் பிறந்தும், நரகாசுரனிடம் அசுரகுணம் தலை தூக்கியது. பூமாதேவியின் எண்ணம் நிறைவேறவில்லை.
"அப்புறம் என்னாச்சு பாட்டி?"
"அப்புறம்... நரகாசுரன், அசுரர்களுடன் சேர்ந்து போர்ப்பயிற்சிகள் பலவற்றைப் பெற்று, அசுரர்களின் தலைவனானான். கடுந்தவம் செய்து, பல வரங்களைப் பெற்றான். அது மட்டுமல்ல; தன் தாயைத் தவிர, வேறு யாராலும் தான் மரணமடையக் கூடாது என்கிற வரத்தை பிரம்மதேவனிடமிருந்து பெற்றான். நரகாசுரனுக்கு அகம்பாவம் தலைக்கேறியது.
"மக்களைத் துன்புறுத்தியதோடு, தவம் செய்யும் முனிவர்கள் மற்றும் தேவர்களையும் கொடுமைப்படுத்தினான். அவதிப்பட்ட அனைவரும் கிருஷ்ண பகவானிடம் சென்று முறையிட்டனர். நரகாசுரனுக்கு முடிவுகட்ட எண்ணிய கிருஷ்ணர், அவனுடன் போர் புரியச் சென்றார். கிருஷ்ணரின் தேரை, பூமாதேவியின் அம்சமாகிய சத்தியபாமா ஓட்டிச் சென்றாள். மிகவும் கடுமையான போர் நடந்தது.
நரகாசுரன், கிருஷ்ணர் மீது அம்பு எய்தான். அம்பு கிருஷ்ணரின் மேல் பட, கிருஷ்ணர் மயக்கமடைந்து தேரில் சாய்ந்துவிட்டார். இதைக் கண்ட சத்தியபாமா பதறிப் போனாள். கடுங்கோபமடைந்தாள்.
"அப்புறம்... என்ன ஆச்சு? சீதா, சஸ்பென்ஸ் வைக்காம சீக்கிரமா தீபாவளிக் கதையைச் சொல்லு. ரொம்ப சுவாரசியமா இருக்கு!" அப்பாசாமி அவசரப்பட்டார்.
"வெயிட் தாத்தா. பாட்டிதான் சொல்றாங்க இல்ல. அவசரப்படாதீங்க!" ரம்யா கூறவும், சீதாப் பாட்டி பேத்திக்குக் கன்னத்தில் முத்தமிட்டுத் தீபாவளிக் கதையைத் தொடர்ந்தாள்.
கிருஷ்ணர் மீது அம்பு எய்த நரகாசுரனின் மீது கோபம் கொண்ட சத்தியபாமா, தன்னுடைய வில்லில் நாணேற்றி நரகாசுரனுடன் போர் தொடுத்தாள். நரகாசுரனைக் கொன்றாள். கிருஷ்ணர் மயக்கம் தெளிந்து எழுந்தார்.
"பாட்டி! நரகாசுரனுக்கு வரம் ஏதாவது கொடுத்தாரா கிருஷ்ணர்?"
"கொடுக்காம இருப்பாரா கிருஷ்ணர்? இரு, சொல்றேன்" என்ற சீதாப் பாட்டி தீபாவளிக் கதையைத் தொடர்ந்தாள்.
இறக்கும் தருவாயில், தான் செய்த தவறுகளை உணர்ந்த நரகாசுரன், கிருஷ்ணரிடம், "தான் செய்த பாவங்களைப் பொறுத்துக்கொண்டு, கொடியவனாகிய நான் இறந்த நாளை, மக்கள் அனைவரும் மங்களகரமான நாளாகக் கொண்டாடி மகிழ வேண்டும். இந்த நாளில் என்னை நினைத்து நீராடி, புத்தாடை அணிந்து, கோவிலுக்குச் சென்று வழிபடுபவர்களுக்கு, அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்க வேண்டும்" என வேண்டினான்.
கிருஷ்ணரும் நரகாசுரன் கேட்டவாறே, வரமளித்தார். அந்த நாளே தீபாவளிப் பண்டிகையாகக் கொண்டாடப் படுகிறது.
"பாட்டி, தெரிஞ்சுடுத்து!"
"என்ன தெரிஞ்சுது?"
"நரகாசுரனுக்கு, கிருஷ்ணர் வரம் கொடுத்து, அருளியதால் தான், தீபாவளியை நாம 'நரக சதுர்த்தி'ன்னு சொல்றோம். சரிதானே பாட்டி?"
"ரொம்ப ரொம்ப சரி" என்ற சீதாப் பாட்டி, பேத்தி ரம்யாவை அன்புடன் அணைத்துக் கொண்டாள்.
கதையைப் படு சுவாரசியமாகக் கேட்டுக்கொண்டிருந்த அப்பாசாமிக்கும், தீபாவளிக் கதை ஞாபகம் வந்தது. உங்களுக்கு...?