
நண்பர் ஒருவர் அழைத்ததால்
நண்பகல் உணவு உண்பதற்கு
செந்தமிழ்ப் பாரதி போனாராம்
சாப்பிட இலைமுன் அமர்ந்தாராம்.
அழைத்தவர் விருந்தில் பலவேறு
அன்ன வகைகள் வைத்தாராம்
'தின்னத் திகட்டும் பலபண்டம்
தின்ன வைத்தீர்! அகம்மகிழ்ந்தேன்!
இருந்தும் இலையில் ஒன்று இல்லை!!
எனக்கு வருத்தம்!' என்றாராம்.
விருந்துக் கழைத்தவர் வேதனையில்,
'வேந்தே! சொன்னால் ஓர் நொடிக்குள்
விருந்தில் அதனைச் சேர்த்திடுவேன்!
வேதனை தீர்ந்து அகம்மகிழ்வேன்!
சொல்ல வேண்டும்!' எனப்பணிந்து
சொன்னார் பாரதி தோழரவர்.
“வீரப்பலகாரம்!” இவ்விலையில்
வைக்க மறந்தீர்! வேதனைதான்!
விரும்பும் உணவு அதுஒன்றே
விரைந்து வைக்க ஆவனசெய்!
வைத்தால் நிறையும் மனமென்றார்!”
விருந்துக்கு அழைத்த அந்நண்பர்
அக்கம் பக்கம் அயலார்கள்
இருக்கும் மக்கள் பலரிடத்தும்
“வீரப் பலகாரம் என்றாலோ
என்ன?” என்றே கேட்டாராம்!
யார்க்கும் அங்கே தெரியவில்லை!
யாரும் அதனை உண்டதில்லை!
கேட்டுச் சொல்வீர் கவிஞரிடம்
என்றார் அழைத் தவர் மனையாள்.
பாரதி தன்னை மிகப்பணிந்து,
'நீர் கேட்ட வீரப்பலகாரம்
எதுவென விளக்கிச் சொன்னாலோ
அதனைப் படைப்பேன்' என்றாராம்!
'வீரப் பலகாரம் எதுவென்று
பாண்டியா! உனக்குத் தெரியாதா?!!
எதனைச் சொல்ல நாடிநரம்பு
எல்லாம் ஏறும்? முறுக்கு!
என்று முறுக்கே வீரப் பலகாரம்!
விரைந்ததைக் கொண்டா!' எனக்கேட்டு,
பாரதி முறுக்கை விருப்போடு,
பிள்ளை போல மகிழ்வோடு
மொறுக்மொறுக்கென உண்டாராம்.
இருக்கையில் வாழ்வின் முழுநேரம்
இறந்து சாய்கிற அந்நேரம்
முறுக்காய் இருந்தவர் நம்மன்பு
முண்டாசுக் கவிஞர் பாரதியாம்!
பிறக்கையில் பதினொன்று என ரெண்டு
இறக்கையில் பதினொன்று என ரெண்டு
ஒன்று இருக்கப் பிறந்தவராம் - நாம்
ஒன்றாய் இருக்கச் சொன்னவராம்!