தெரிந்து கொள்வோமே 2 - பாலைவன பயணம்!

பாலைவனம்: ஒரு சுவாரசியப் பயணம்!
Kids in the desert with a camel
Kids in the desert with a camelAI Image
ரெ. ஆத்மநாதன்

எழுத்தாளர் ரெ.ஆத்மநாதன் பொருளாதாரத்திலும், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். கதை, கவிதை, நாடகம் என்று முத்தமிழுக்கும் பணி செய்பவர். கதை, கவிதைகளை மாத,வார, ஆன்லைன் இதழ்களில் எழுதி வருபவர். இவரின் 4 நாடகங்கள் சென்னை, திருச்சி வானொலி நிலையங்களால் ஒலி பரப்பப் பட்டன. இளங்கலை முதலாண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வில் (1972-73) மாநில முதன்மை பெற்றவர்.பட்டி மன்றம், கவியரங்கம் ஆகியவற்றில் பங்கேற்பவர். அமெச்சூர் நாடகங்களில் நடித்தவர். தமிழக அரசின் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சி முன்னவராகச் சேர்ந்து, அத்துறையின் பொறுப்பு இயக்குனராக ஓய்வு பெற்றவர். “தொடர்கதைகளும் முற்றும்” என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவர்.

Updated on

கடந்த முறை ஆறுகளைப் பற்றிப் பார்த்தோம்! ஆறுகள்தான் பசுமைக்குத் தாயகம்; பல பயிர்கள் வளர உதவுபவை! உயிர் காக்கும் நீரை, வேண்டிய இடங்களுக்கு எடுத்துச் செல்லும் தூதுவன்!

இந்த வாரம் அப்படியே நாம் பாலைவனத்திற்கு ஒரு விசிட் அடிப்போமா குட்டீஸ்! மழைக்கு ஏங்கும் வறண்ட பிரதேசங்களைத்தான் நாம் ‘பாலைவனம்’ என்று அழைக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியும்தானே! போதுமான மழையோ, பனிப்பொழிவோ இல்லாத இடங்களைத்தான் பாலைவனம் என்கிறோம். இப்பகுதிகளில், ஆண்டிற்கு 250 மி.மீ-க்கும் குறைவாகவே மழை பெய்யும். மழையே பார்க்காத பாலைவனங்களும் உண்டென்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

வறட்சியும் வெப்பமும்

  • மிக வறண்ட இடம்: உலகிலேயே மிக வறண்ட பாலைவனமாகக் கருதப்படுவது சிலி நாட்டிலுள்ள ‘அடகாமா’ (Atacama) என்ற இடம்தான்! மனித வாழ்வின் நினைவு தெரிந்த நாள் முதலாய், தற்போது வரை இப்பகுதியில் மழையே பெய்ததில்லையாம்! நம்பவே முடியவில்லைதானே குட்டீஸ்? ஆனால், அதுதான் உண்மை!

  • அதிக வெப்பம்: இதுவரை அதிக வெப்பம் பதிவான இடம் லிபியா நாட்டின் ‘அல் அஸீஸ்யா’. அங்கு பதிவான அதிகபட்ச வெப்பம் எவ்வளவு தெரியுமா? மண்டை காய்ந்துவிடும் அளவிற்கு 57.8°C!

குளிர் பாலைவனங்கள்

பாலைவனம் என்றால் வெயில் மட்டும் கிடையாது, குளிர் பாலைவனங்களும் உண்டு! அங்கெல்லாம் கோடையே கிடையாது; அதிகக் குளிர் மட்டுமே காணப்படும். மத்திய ஆசியாவில் உள்ள ‘கோபி’ (Gobi) பாலைவனத்தில் நிலவிய அதிகபட்ச குளிர் -40°C! படிக்கும்போதே நடுங்குகிறது இல்லையா!

பூமியிலுள்ள 5 பெரிய பாலைவனங்கள்

  1. சஹாரா (Sahara): இதுதான் மிகப்பெரிய பாலைவனம்! வட ஆப்பிரிக்காவில் உள்ள இதன் பரப்பளவு 91 லட்சம் ச.கி.மீ. வெப்பமயமான இது அமெரிக்கா நாடு அளவிற்குப் பெரியது! ஆப்பிரிக்காவின் 10 நாடுகளில் (அல்ஜீரியா, சாட், எகிப்து, லிபியா, மொராக்கோ, மௌரிடானியா, மாலி, நைஜர், சூடான் மற்றும் துனீசியா) இது பரந்து கிடக்கிறது.

  2. ஆஸ்திரேலியப் பாலைவனம்: ஆஸ்திரேலிய நாட்டிலுள்ள இதன் பரப்பளவு 34 லட்சம் ச.கி.மீ.

  3. அரேபியத் தீபகற்பம்: தென்மேற்கு ஆசியாவில் உள்ள இதன் பரப்பளவு 26 லட்சம் ச.கி.மீ.

  4. டர்கிஸ்டான் (Turkestan): மத்திய ஆசியாவிலுள்ள இது நான்காவது பெரிய பாலைவனம். இதன் பரப்பளவு 19 லட்சம் ச.கி.மீ.

  5. கோபி (Gobi): 13 லட்சம் ச.கி.மீ. பரப்பளவைக் கொண்ட இது ஐந்தாவது பெரிய பாலைவனமாகும். இதுவும் மத்திய ஆசியாவில்தான் உள்ளது.

வியப்பான தகவல்: மிகப்பெரிய பாலைவனமான சஹாராவின் பரப்பளவும், மீதமுள்ள நான்கு பாலைவனங்களின் ஒட்டுமொத்தப் பரப்பளவும் கிட்டத்தட்ட சமம்! (வெறும் ஒரு லட்சம் ச.கி.மீ. மட்டுமே வித்தியாசம்). இதிலிருந்தே சஹாரா எவ்வளவு பெரியது என்பதை நாம் உணரலாம்!

பாலைவனத்தில் தற்காப்பு முறைகள்

பாலைவனத்தில் வெப்பத்தினால் இறப்பவர்களைக் காட்டிலும், திடீரெனப் பெய்யும் மழையினால் ஏற்படும் வெள்ளத்தில் சிக்கி இறப்பவர்களே அதிகமாம்! சரி, பாலைவனத்தில் எப்படி வாழ்வது?

  • மெல்லிய ஆடைகள் அணிய வேண்டும்; தலைக்குத் தொப்பி கட்டாயம் அணிய வேண்டும்.

  • உடலில் நீர்ப்பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க, அடிக்கடி தண்ணீர் அல்லது பானங்கள் குடிக்க வேண்டும்.

  • பகல் நேரப் பயணத்தைத் தவிர்த்து, அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் பயணம் செய்வது நல்லது.

  • பாம்பு, சிலந்தி, தேள் போன்றவை இருக்கக்கூடும் என்பதால் தரையில் படுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

நமது நாட்டிலும் இப்போது கோடை வெயில் கொளுத்துகிறது! மேற்கண்ட பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம், நாமமே கதிரவனின் கொடுங்கரங்களிலிருந்து தப்பிக்கலாம்.

பாலைவனக் கப்பல்: பாலைவனத்தைக் கடக்க உதவும் நமது ஒட்டகங்கள்தான் ‘பாலைவனக் கப்பல்’ என்று அழைக்கப்படுகின்றன!

கொசுறுச் செய்தி: பெரும்பாலான பாலைவனங்கள் பூமத்திய ரேகையை ஒட்டியே உள்ளன. அங்குதானே சூரியனின் வெப்பம் அதிகம்!

குட்பை குட்டீஸ்! - டில் நெக்ஸ்ட்!

logo
Kalki Online
kalkionline.com