நாம ஏதாவது பெரிய தப்பு செஞ்சு அல்லது ஒரு பொருளை திருடிட்டு அதனை மறைக்க நினைக்கும் போது, அந்தத் தப்பு வெளியே தெரியும் போது, நம்மைப் பார்த்து ஒரு சிலர், “பாத்தியா முழு பூசணிக்காயையும் சோத்துக்குள்ள மறைக்க பாக்குறியா..?” என்றெல்லாம் கூறுவதை கேட்டிருப்போம். ஆனால் இதற்கான உண்மையான அர்த்தம் இது அல்ல. உண்மையான அர்த்தம் என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
நல்ல செல்வாக்கான ஜமீன்தார் ஒருவர், ஒரு நாள் தெருவில் செல்லும்போது, ஒரு வீட்டுக்கு பக்கத்தில் பூசணிக்காய் கொடி படர்ந்து இருந்தது. அதில் பூசணிக்காய்களும் பெரிய அளவில் காய்த்து இருந்தன. இதைக் கண்ட ஜமீன்தாருக்கு எப்படியாவது அந்த பூசணிக்காயை எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஒரு நப்பாசை மனதிற்குள் ஏற்பட்டது. ஆதலால், ஒரு நாள் தெருவில் ஆள் நடமாட்டம் இல்லாத போது அந்த வீட்டில் காய்த்து இருந்த பூசணிக்காயை எடுக்க முற்படுகிறார் ஜமீந்தார்.
பூசணிக்காயை பறிக்க முற்படும்போது அந்த வீட்டாளர்கள் ஜமீன்தாரை பார்த்து விடுகிறார்கள். வேகவேகமாக ஜமீன்தார் பூசணிக்காயை எடுத்துக்கொண்டு கிளம்புகிறார்.
மறுநாள் இந்த செய்தி தெருவிலும், ஊரிலும், பக்கத்து ஊரிலும் பரவ ஆரம்பிக்கிறது. அப்போதிலிருந்து ஒரு சில மக்கள் பூசணிக்காயை திருடிய ஜமீன்தார் என்று மனதிற்குள்ளும், வெளிப்படையாகவும் பட்டம் கட்ட ஆரம்பித்தார்கள். பூசணிக்காய் திருடின ஜமீன்தார் வீட்டு பக்கத்துல தான் அந்த டீக்கடை இருக்கு. பூசணிக்காய் திருடுன ஜமீன்தார் வீட்டுக்கு பக்கத்துல தான் மாரியம்மன் கோவில் இருக்கு... என்று கூற ஆரம்பித்தார்கள்.
அதேபோல் வெளியூரிலிருந்து வழி கேட்டு வரும் நபர்களிடமும், “ஓ அதுவா... பூசணிக்காய் திருடுன ஜமீன்தார் வீட்டுக்கு போற வழியில தான் நேரா போகணும்..!” என்று ஊர் மக்கள் ஒவ்வொருவரும் பேச ஆரம்பித்தார்கள். இந்தப் பேச்சு சத்தம் ஜமீன்தாரின் காதிலும் விழத் தொடங்கியது. அப்படியே நாட்கள் செல்ல செல்ல இந்த பூசணிக்காய் திருடிய சொல் மட்டும் அழியவே இல்லை. அடுத்த தலைமுறை வருகிறது அதே போல் பூசணிக்காய் திருடிய ஜமீன்தார் என்கிற பட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
மூன்றாம் தலைமுறை முடிந்து நான்காம் தலைமுறையும் வந்தது. அப்போதும் அந்தப் பட்டம் அழியவே இல்லை. இதைக் கண்ட ஜமீன்தாரின் எள்ளுப் பேரன், “எங்க தாத்தா பண்ண ஒரு சின்ன தப்புக்கு இப்ப வரைக்கும் அந்த பட்டம் அழியவே இல்லையே..!” என்று கவலைப்படுகிறான். அப்போது அவனிடம் ஒருவர், “இங்க பாருப்பா தம்பி... உங்க தாத்தா ஜமீன்தார இருந்தப்போ பூசணிக்காய திருடுனதுனால இந்த பட்டம் அப்படியே நிலைச்சு வந்துருச்சு..! இந்தப் பட்டம் அழியனும்னா நீ தினமும் மதியம் ஒரு பத்து பேருக்காவது சோறு போடு.. அப்படி போட்டினா இந்த அவச்சொல் கண்டிப்பா மாறும்,” என்று கூறுகிறார்.
அதற்கு அவனோ, “ஐயா 10 பேருக்கு, என்ன 100 பேருக்கு கூட அன்னதானம் போட நாங்க தயார் தான். அதனால நாளிலிருந்து இந்த அன்னதானம் போடுற வேலைய நாங்கள் செய்ய ஆரம்பிக்கிறோம்..!” என்று கூறி கிளம்பி விடுகிறான்.
அதன்படியே தினமும் மதிய வேளையில் 100 பேருக்கு அந்த ஜமீன்தார் குடும்பம் அன்னதானம் போட ஆரம்பிக்கிறது. அப்படியே படிப்படியாக காலையிலும் அன்னதானம் போட ஆரம்பிக்கிறார்கள். கஷ்டப்படும் ஏழை மக்கள், வழிப்போக்கர்கள் போன்றவர்கள் அன்னதானத்தை உண்டு மனம் நிறைந்து ஜமீன்தாரின் குடும்பத்தை வாழ்த்தினார்கள்.
பூசணிக்காய் திருடிய பட்டம் நாளடைவில், எப்பவுமே சோறு போடுற ஜமீன்தார் வீட்டு பக்கத்துல தான் அந்த டீக்கடை இருக்கு, சோறு போடுற ஜமீன்தார் வீட்டு பக்கத்துல தான் அந்த பெரிய குளம் இருக்கு, நீங்க பசியாத்தனும்னா ஜமீன்தார் வீட்டுக்கு போங்க அங்க உங்களுக்கு சாப்பாடு போடுவாங்க.. என்று ஊர் மக்கள் பேச ஆரம்பித்தார்கள்.
ஒரு தப்பு பண்ணோம்னா அதை மறைக்கிறதுக்கு இன்னொரு தப்பு என்னைக்குமே செய்யக்கூடாது. அதை விட்டுட்டு நாம நல்லதையே செய்யணும் சரியா..!