
டெல்லியிலிருக்கும் மகனும், மருமகளும் அலுவலக வேலை காரணமாக, பத்து நாட்கள் அமெரிக்கா செல்ல வேண்டியிருந்ததால், தங்களுடைய 13 வயது டீன் ஏஜ் மகள் அனைஷாவை கிராமத்திலிருக்கும் அவள் பாட்டி வீட்டிற்கு, தெரிந்தவர்கள் துணையுடன் அனுப்பி வைத்தனர். சற்றே மார்டனாக இருக்கும் அனைஷாவிற்கு கிராமத்திற்கு செல்வது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், மறுபக்கம் பாட்டியின் மூட நம்பிக்கைகள் பற்றி சற்றே யோசனையாகத்தான் இருந்தது.
பேத்தி அனைஷாவைக் கண்டதும், காமாட்சி பாட்டிக்கு ஒரே சந்தோஷம். பேத்திக்கு பிடித்த பலகாரங்கள் எல்லாம் செய்து கொடுத்தாள். வயல் வெளி, தோப்பு என அழைத்துச் சென்றாள். ஜாலியாக இருந்தது அனைஷாவிற்கு.
ஆனால், எப்போது வெளியே போய்விட்டு வந்தாலும், கைகள் மற்றும் கால்களை அலம்பிவிட்டுத்தான் உள்ளே வரவேண்டும் என்று பாட்டி கண்டிப்பு காட்டுவது அனைஷாவிற்கு ரசிக்கவில்லை. இதெல்லாம் வெறும் மூடநம்பிக்கை பாட்டி என்றாள்.
"அனைஷா! மூட நம்பிக்கை என்று எதையெல்லாம் நினைக்கிறாய்..? ஒவ்வொன்றாக கேளு. விஞ்ஞான ரீதியாக உனக்கு நான் புரியவைக்கிறேன். டீன் ஏஜ் இல் இருக்கும் நீ கண்டிப்பாக தெரிந்து கொள்ளவேண்டும்." காமாட்சி பாட்டி கூறியவுடன், ஓகே என்றவாறே அனைஷா ஆரம்பித்தாள்.
முதலாவது கேள்வி: வெளியிலிருந்து வந்தவுடன், கை-கால்களை ஏன் அலம்பவேண்டும்..??
வெளியில் சென்று வரும்போது நம் கண்களுக்குத் தெரியாத கிருமிகள் கை-கால்களில் ஒட்டிக்கொள்ளும். நன்றாக கை-கால்களை தேய்த்து அலம்புகையில், அவை இறந்துவிடும். சோம்பல் பட்டு கை-கால்களை அலம்பாமல் வீட்டினுள் வந்து சோபாவில் ஹாயாக அமர்ந்தால், பெட் ரூமிற்குள் நேரே சென்றால், கிருமிகளால் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும்.
இரண்டாவது கேள்வி : அந்த மூன்று நாட்களும் பெண்களை க்வாரைண்டன் மாதிரி தனியாக இருக்க வைப்பதேன்?
மாதவிடாயை க்வாரண்டைன் என்கிறாயா..? புரிந்தது. அந்த சமயம், பெண்களுக்கு வயிறு, கால், இடுப்பு வலிகள் ஏற்படும். அவர்களுக்கு இந்த க்வாரண்டைன் மூலம் ஓய்வு கிடைக்கும். மாதம் முழுவதும் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு இது கண்டிப்பாக தேவை. மேலும், இன்பெக்க்ஷன் ஏற்படுவது தவிர்க்கப்படும்.
மூன்றாவது கேள்வி : சரி பாட்டி ! அப்புறம் அந்த கடைசி வீட்ல, கதவுக்கு மேல வேப்பிலைக்கொத்து வெச்சிருந்தாங்களே...?
அதுவா..! அம்மை, சிக்கன் பாக்ஸ் போன்ற நோய்கள் வீட்டில் யாருக்காவது வந்தால், வீட்டு வாசல் நிலைக்கு மேல் வேப்பிலைக் கொத்து வைப்பாங்க. இதன் மூலம், குறிப்பிட்ட வீட்டில் இருக்கும் நபருக்கு நோய் இருப்பது தெரிய வரும். மற்றவர்கள் அவர்கள் வீட்டினுள் செல்ல மாட்டார்கள். பாக்டீரியாக்கள், கிருமிகள் ஆகியவைகளில் இருந்து பாதுகாக்கும் தன்மை வேப்பிலைக்கு உண்டு," என்ற காமாட்சி பாட்டி, "அனைஷா! உன் மூட நம்பிக்கை கேள்விகள் முடிந்ததா.... இல்லை..."
"கடைசி கேள்வி பாட்டி ப்ளீஸ்," என்ற அனைஷா, " இரண்டு நாள் முன்பு வீட்டுக்கு வந்திருந்த ஒருவருக்கு, நீங்க, வெள்ளி டம்ளரில் குடிக்க தண்ணீர் கொடுத்தது எதற்காக..??
"அதுவா! கிருமி நாசினிகள் மூலமாக வரும் நோய்களை வெள்ளி போன்ற உலோகங்கள் தடுக்கும். வெளியிலிருந்து வரும் விருந்தினருக்கு அப்படி ஏதாவது இருந்தால், உலோகம் வழியாக தடுத்து விடலாம். அது மட்டுமல்ல ; வெள்ளி டம்ளரில் பானங்களை அருந்துகையில், விருந்தினர் மகிழ்வர். என்ன ஓகேயா?"
"சூப்பர் பாட்டி! ரொம்ப தாங்ஸ். மூட நம்பிக்கைக்கு பின்புறம், இப்படி நிறைய ஸயன்டிஃபிக் (Scientific) காரணங்கள் இருப்பது இப்போது புரிந்தது. Beautiful ஆ சொன்னீங்க. ஊருக்கு போனப்புறம், இந்த மூட நம்பிக்கை... இல்ல இல்ல இந்த நம்பிக்கைகளுக்குப் பின்னால் இருக்குற ஸயன்டிஃபிக் Reasons பற்றி ஒரு Awareness Essay (விழிப்புணர்வு கட்டுரை) எழுதி உங்களுக்கு க்ரெடிட் கொடுப்பேன் பாட்டி," என்ற அனைஷா, காமாட்சி பாட்டியைக் கட்டி அணைத்து கன்னத்தில் "நச்" என முத்தமிட்டாள்.