

"ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா" என்ற பாடல் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பாடியது. இந்தப் பாடல் எங்கள் காதுகளில், "கோலி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா" என்று விழுந்த காலம் அது. எனக்கும் என் நண்பர்களுக்கும் அந்த காலத்தில் ஒவ்வொரு வக்கேஷனுக்கும் ஒவ்வொரு பைத்தியம் பிடிக்கும்.
ஒரு முறை கில்லி விளையாடுதல், ஒரு முறை கிரிக்கட் விளையாடுதல், ஒரு முறை பட்டம் விடுதல், ஒரு முறை கோலி விளையாடுதல். சம்மர் ஹாலிடேக்களில் நாங்கள் மகிழ, மர நிழலில் விளையாடுவது கோலி விளையாட்டு தான்.
கோலி விளையாட்டு: ஏன் இன்றும் அந்த நாட்கள் இனிமையாக இருக்கிறது?
முதலில் ஒரு வீட்டில் இருக்கும் பசங்க கோலி விளையாட ஆரம்பிப்பாங்க. இந்த கோலி விளையாடல் சுரம் போல தெரு முழுவதும் பரவி விடும். ஒரு வாரம் டிரௌசர் பாக்கெட்களில் வண்ண வண்ண கோலி குண்டுகளை நிரப்பி கொண்டு அலைவோம்.
எங்கள் தெருக்கோடி பெட்டி கடைக்காரர் சுமார் நூறு கோலிகள் விற்று லாபம் பார்த்து விடுவார். என் நண்பன் RK RL Stevenson எழுதிய 'Treasure Island' இல் வரும் லாங் ஜான் சில்வர் போல, ஒரு கண்ணை 'pirate patch' என்று சொல்லப்படும் துணியை கட்டி மறைத்தவாறு விளையாடி தூள் கிளப்பி விடுவான்.
கோலி விளையாட்டு விளையாடுவதால் கிடைக்கும் நன்மைகள்:
கோலி விளையாட்டு (Marble Game) என்பது தமிழகத்தின் பிரபலமான தெரு விளையாட்டுகளுள் ஒன்று. கண்ணாடி குண்டுகளை கொண்டு குறிபார்த்து அடிக்கும் இந்த விளையாட்டு, கை ஒருங்கிணைப்பு மற்றும் கவனத் திறனை மேம்படுத்துகிறது.
கோலி விளையாட்டில் பலவகை இருந்தாலும் எங்களுக்கு தெரிந்தது ஒரே வகை தான். அதன் பெயர் ஒற்றைக் குழி. ஒற்றைக் கண்ணை மூடியவாறு எதிராளியின் கோலியை தாக்குவதுதான் இந்த ஒற்றைக் குழி விளையாட்டின் சிறப்பம்சம்.
குறி வைத்து வில் அம்பினாலும், உண்டி கோலாலும் சுடுவது ஒரு வகையில் சுலபம். ஆனால், கோலி குண்டு வைத்து இன்னொரு கோலியை தாக்கி குழியில் தள்ளுவது அவ்வளவு சுலபம் அல்ல.
கோலி விளையாடும் போது சில சமயம் கோலி குண்டு உடைந்து சிதறி விடும். அவ்வளவுதான் எங்களுக்குள் சேவல் சண்டை வெடித்துவிடும்.
அப்போதை விட இப்போது இந்த வயதில் தான் என்னால் கோலி பெட்டராக விளையாட முடியும். ஏன் என்றால், இப்போது என்னால்ஒரு கண்ணால் மட்டுமே நன்றாக பார்க்க முடியும் என்று ஒரு முறை என் பேத்தியிடம் பீத்திக் கொண்டது தப்பாக்கி விட்டது. சமீபத்தில், நான் சோர்வாக உட்கார்ந்திருப்பதை பார்த்து என் சிறுவயது ஹாலிடேக்களை கேட்டறிந்திருந்த என் பேத்தி, "ஓடி விளையாடு தாத்தா நீ ஓய்ந்திருக்கலாகாது தாத்தா" என்று பாடி கேலி செய்தாள்.
அடுத்த தலைமுறைக்குக் கடத்த வேண்டிய பாரம்பரிய கோலி விளையாட்டு:
நமது மண்ணின் பாரம்பரிய விளையாட்டுகளைப் புரிந்துகொள்வதன் மூலம், குழந்தைகளான நீங்கள் அடுத்த தலைமுறைக்கு நம் கலாச்சார வேர்களை அறிமுகப்படுத்தி, ஒரு ஆழமான பிணைப்பை உருவாக்க முடியும்.
அதோடு, வயதைக் கடந்து விளையாட்டின் மீதான ஆர்வத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதன் மூலம், எந்த வயதிலும் உற்சாகத்தையும், புதிய கோணத்தில் உலகத்தைப் பார்க்கும் தெளிவையும் உங்களால் பெற முடியும்.