

விஞ்ஞானிகளையே திகைக்க வைத்த ஒரு சம்பவம் நியூயார்க்கிலிருந்து பறக்க ஆரம்பித்த ஒரு விமானத்தில் ஏற்பட்டது.
நடந்தது இது தான்:
தேதி : 1963ம் வருடம் மார் மாதம் 19ம் நாள்.
நள்ளிரவு 12.05 மணிக்கு ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் ஃபிளைட் நம்பர் 539 நியூயார்க்கிலிருந்து வாஷிங்டன் நோக்கிப் பறக்க ஆரம்பித்தது.
ஆகாயம் இருள் மயம். சந்திரனைப் பார்க்க முடியாதபடி இருள். ஒரே இடி மின்னல். திடீரென்று விமானத்தை ஒரு மின்சக்தி தாக்கியது.
கெண்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய ரோஜெ ஜென்னிஸன் அந்த விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
திடீரென்று எட்டு அங்குலம் குறுக்களவு உள்ள ஒரு பந்து விமானத்தின் பைலட் காபினிலிருந்து வெளியே வருவதைப் பார்த்தார்.
சுமார் முப்பது அங்குல உயரத்தில் அந்தப் பந்து மின்னியவாறே பயணிகள் நடக்கும் நடைபாதையில் மெதுவாக வந்தது. அந்தப் பந்தின் வண்ணம் வெள்ளையும் நீலமும் கலந்த கலவையாக இருந்தது.
நல்ல வேளையாக அது யாரும் மீதும் மோதவில்லை. ஒரு அசம்பாவிதமும் நேரவில்லை.
விமானம் ஒருவழியாக வாஷிங்டனில் வந்து இறங்கியது.
விஞ்ஞானிகள் இந்தச் சம்பவத்தைக் கேள்விப்பட்டு தங்கள் ஆய்வைத் தொடங்கினர். இதை பால் லைட்னிங் (Ball Lightning) – மின்னல் பந்து – என்று கூற ஆரம்பித்தனர்.
இயற்பியல் வல்லுநர்களுக்கு இந்தப் பந்தின் தோற்றம் சவாலாக இருந்தது.
கொலொரோடாவில் பவுல்டரில் இருந்த நேஷனல் செண்டர் ஃபார் அட்மாஸ்பெரிக் ரிஸர்ச் என்னும் நிறுவனத்தைச் சேர்ந்த எம்.டி. அத்ஷுலெர், எல். ஹூஸ், ஈ.ஹில்ட்னர் ஆகிய மூன்று விஞ்ஞானிகள் ஒரு கருத்தை முன்வைத்தனர்.
இடியுடன் கூடிய மின்னல்கள் ஒரு பிரம்மாண்டமான இயற்கையான பார்டிகிள் ஆக்ஸிலரேட்டராக இருந்து புரோடான்களை மிகப்பெரும் ஆற்றலுடன் வெளியிட்டிருக்க வேண்டும். இந்த புரோடான்கள் வளிமண்டலத்தில் உள்ள அணுக்கூறுகளுடன் மோதி ஆக்ஸிஜனையும் ஃப்ளோரினையும் உருவாக்கி இருக்க வேண்டும். இவை போஸிட்ரான் மற்றும் காமா கதிர்களை ஆற்றலுடன் வெளிப்படுத்தவே, மின்னல் பந்துகள் உருவாகி இருக்கின்றன.
இது சரிதானா என்று இதர விஞ்ஞானிகள் ஆராய ஆரம்பித்தனர். இது உண்மை தான் என்றால் இப்படிப்பட்ட சூழ்நிலைகள் இனி ஏற்பட்டால் மனிதர்களைக் கொல்லுகின்ற ஒரு சிறிய கதிர் இயக்கத்தை நாம் சமாளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்!
அபூர்வமான ஏற்பட்ட இந்த சம்பவத்தால் கதிர் இயக்கம் பற்றிய ஒரு புதிய சிந்தனை ஏற்பட்டு விட்டது என்னவோ உண்மை தான்!