

குட்டீஸ்களா! உங்களுக்கு கிரிக்கெட் விளையாடுவது மிகவும் பிடிக்கும் இல்லையா? அந்த கிரிக்கெட்டில் சாதனை படைப்பவர் உங்களை மாதிரியே ஒரு குட்டி பையன்; பதினைந்து வயது பையன். வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi) என்ற பெயரைக் கொண்ட அந்த பையன் பீகாரை சேர்ந்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர். அவர் இடதுகை மட்டையாளராக விளையாடி வருகிறார். மிகவும் இள வயதிலேயே ரஞ்சிக்கோப்பையில் அறிமுகமாகி ஐபிஎல் தொடரில் அதிரடி சதம் அடித்து உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளார்.
பீகார் மாநிலத்தின் சமஸ்திபூர் மாவட்டம் தாஜ்பூர் கிராமத்தில் பிறந்தவர். தனது நாலு வயதிலேயே கிரிக்கெட் விளையாடத் தொடங்கியவர். தினசரி 100 கிலோ மீட்டர் பயணம் செய்து பாட்னாவில்தான் பயிற்சி பெற்றாராம். சிறு வயது பயிற்சியாளராக ஓஜா என்பவர் இருந்தார். சிறு வயதிலேயே விரைவாக விளையாடுபவராக திகழ்வதை கண்டார்.
2024 ஆம் ஆண்டு தனது 12ஆவது வயதில் பீகார் அணிக்காக முதல் தர ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார்.
2024 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான U-19 டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து வியக்க வைத்தார்.
2025 ஐபிஎல் ஏலத்தில் ரூபாய் 1.1 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்டு ஐபிஎல் வரலாற்றிலேயே மிக இளம் வயதில் ஒப்பந்தமான வீரர் என்ற பெருமையும் பெற்றார்.
நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடி சிக்ஸர் மழை பொழிந்த வைபவ் சூர்யவன்ஷி 72 சிக்ஸர் விளாசி ஒரு சீசனில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார். புகழ்பெற்ற அனுபவமிக்க சர்வதேச வீரர்கள் பலர் விளையாடுகின்ற தொடரில் அதிக ரன்கள் விளாசியவராகவும் (776 ரன்களுடன்) சூரியவன்ஷியே முதலிடம் பெற்றார்.
அதே போல இன்றைய நவீன கிரிக்கெட்டில் முக்கியமானதாக கருதப்படும் ஸ்ட்ரைக் ரேட் பாயிண்டுகளிலும் 237 புள்ளிகளுடன் இவரே முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்தார்.
ஐபிஎல் வரலாற்றில் பந்துகளின் அடிப்படையில் அதிவேகமாக ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் என்ற உலக சாதனையே சூரியவன்ஷி படைத்துள்ளார்.
வெறும் 440 பந்துகளில் இந்த மைல்கல்லை அவர் எட்டியுள்ளார். இன்னிங்ஸ் அடிப்படையில் பார்த்தால் 23 இன்னிங்ஸில் ஆயிரம் ரன்களை எட்டி அதிவேகமாக இந்த இலக்கை அடைந்த இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
பதினைந்தே வயதான இந்த சூரியவன்ஷி 776 ரன்களுடன் அதிக ரன்களுக்கான ஆரஞ்சு தொப்பி, சிறந்த வளரும் வீரர், சூப்பர் ஸ்டிரைக்கர், அதிக சிக்ஸர்கள், மதிப்பு மிகுந்த வீரர் ஆகிய ஐந்து விருதுகளை வென்றார். ஒரே தொடரில் மதிப்பு மிகுந்த வீரர், சிறந்த வளரும் வீரர் என்ற இரு விருதையும் பெற்ற முதல் வீரர் இந்த வைபவ் சூர்யவன்ஷி.
மெய்சிலிர்க்க வைக்கும் அவரது அபார ஆட்டத்தால் இந்திய அணியில் தேர்வாகும் வாய்ப்பு பிரகாசமாக ஆகியிருக்கிறது. அவரது வெற்றிக்கு காரணமே பந்தை சிக்சருக்கு விரட்டும் அவரது அசுர பலம் தான். மொத்தத்தில் இந்தியாவுக்கு இந்த பதினைந்து வயதில் சூரியவன்ஷி ஒரு பொக்கிஷமாக திகழ்கிறார்.
என்ன குட்டீஸ்களா! நீங்களும் வைபவ் சூர்யவன்ஷி போல் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரராகி பெருமை சேர்க்க வேண்டும் என்ற ஆசை வருகிறதா? திறமையும் ஈடுபாடும் உழைப்பும் இருந்தால் என்றும் நாம் பிரகாசிக்கலாம் என்பதற்கு இன்று இந்த சூரியவன்ஷி உங்களுக்கு முன் உதாரணம்.
கிரிக்கெட் விளையாட்டை பொருத்த வரை திறமை தான் முக்கியம். நமது வசதியோ பணமோ முக்கியமல்ல. நீங்களும் கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வமுள்ளவராகவோ, பந்து வீச்சாளராகவோ, சிறந்த மட்டை பிடிப்பாளராகவோ திகழ்ந்து கிரிக்கெட்டில் சாதனை படைக்க வேண்டும். இந்திய நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும்.